1995 கொடியன்குளம் வன்முறை

1995 கொடியன்குளம் வன்முறை (1995 Kodiyankulam violence) என்பது 1995 ஆகத்து 31 அன்று 600 காவலர்கள் கொண்ட ஒரு படை, தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தில் முழுவதும் தேவேந்திரகுல வேளாளர்களை கொண்ட கிராமமான கொடியன்குளத்தைத் தாக்கி சொத்துக்களை அழித்து பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகளை எடுத்துச் சென்றபோது ஏற்பட்டது. ஆதிக்க சாதி அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். தேவேந்திரகுல வேளாளர்களின் பொருள் வளத்தை அழிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னணி தொகு

பள்ளர் இனத்தைச் சேர்ந்த 287 குடும்பங்களைக் கொண்ட கொடியன்குளம் சிற்றூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. 1980 ஆம் ஆண்டு முதல் குவைத்து, துபாய், அமெரிக்காவில் பணிபுரியும் குடும்ப உறுப்பினர்களின் நிதி ஆதாரங்களின் வருகையால் கிராமத்தில் வாழும் பள்ளர்கள் பயனடைந்துவந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. [1] 1940 களில் பிரித்தானியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பராக்கிரம பாண்டியன் குளம், பின்னர் 1960 களில் இந்திய தேசிய காங்கிரசு அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டது. அது விவசாயம் செழிக்கவும், கொடியங்குளம் செழிக்கவும் உதவியது. இந்தக் காரணங்களினால் இப்பகுதியில் உள்ள பல பள்ளர் கிராமங்களில் கல்வியறிவு விகிதம் மாநில மற்றும் மாவட்ட சராசரியை விட சிறப்பாக இருந்தது. கிராமத்தில் பெண்களும் கல்வி கற்கத் துவங்கினர். அதிக எண்ணிக்கையிலான பெண் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் உருவாயினர். ஒப்பீட்டளவில் செல்வ வளம் மற்றும் உயர் கல்வி மற்றும் விழிப்புணர்வு காரணமாக அப்பகுதியில் உள்ள மற்ற பள்ளர் கிராமங்களுக்கு இந்த கிராமம் தலைமை தாங்கியது. [2]

இப்பகுதியில் பள்ளர்களுக்கு எதிராகவும் பாகுபாடு நிலவியது. தேனீர்க்கடைகளில் இரட்டைக் குவளை முறை பயன்பாட்டில் இருந்தது. மறவர் ஆதிக்கம் செலுத்தும் தெருக்களில் அவர்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. கிராம சபை கூட்டங்களின் போது, தரையில் உட்கார வைக்கப்பட்டனர். பள்ளர்களின் கை பொருளாதாரத்திலும், கல்வியிலும் ஓங்க ஆரம்பித்தபோது அவர்கள் பாகுபாட்டை எதிர்க்கத் தொடங்கினர். [3]

காரணங்கள் தொகு

1995 சூலை, 26 அன்று பள்ளர் பேருந்து ஓட்டுநருக்கும், மறவர் சாதி பள்ளி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அதனால் பேருந்து ஓட்டுநர் மறவர்களால் அடித்துக் கொல்லப்படார். இச்சம்பவத்தையடுத்து மறவர் ஆதிக்கத்தில் இருந்த வீரசிகாமணி கிராமத்தை பள்ளர்கள் தாக்கி, தேவர் சாதித் தலைவராக கருதப்படும் உ. முத்துராமலிங்கத் தேவர் சிலையை சேதப்படுத்தினர். [4] மறவர்கள் அரசுப் பேருந்துகளிலும், அனைத்துப் பகுதிகளிலும் பள்ளர்களைத் திட்டி ஆத்திரமூட்டும் சுவரொட்டிகளை ஒட்டினர். [3] பள்ளர்களைக் கொன்று அவர்களின் பெண்களைக் கவர்ந்துச் செல்லுமாறு தேவர்களை வலியுறுத்தும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. காவலர்கள் பார்வையாளர்களாக இருந்தது மட்டுமின்றி சில சமயங்களில் பள்ளர்களுக்கு எதிரான தாக்குதல்களிலும் கலந்து கொண்டனர். [5] இதில் தலித்துகள் மற்றும் அவர்களது சொத்துக்களுக்கு எதிரான வன்முறையாக ஒரு வாரம் நீடித்தது. இந்த வன்முறையில் இரு தரப்பிலும் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர். பல கோடிக்கணக்கான சொத்து சேதங்கள் மட்டுமின்றி ஏராளமான அரசு பேருந்துகள் எரிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தபட்டன. [3] [4]

காவல் துறையின் தாக்குதல் தொகு

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் தேவர் அதிகாரிகளின் [4] அறிவுறுத்தலின் பேரில் 600 காவலர்கள் கொடியன்குளத்தில் 1995 ஆகத்து 31 அன்று அதிரடி சோதனை நடத்தி சொத்துகளை நாசம் செய்தனர்..தொலைக்காட்சிப் பெட்டிகள், ஒலிப்பேழை பதிவான்கள், மின்விசிறிகள், தையல் இயந்திரங்கள், இருசக்கர் மோட்டார் வாகனங்கள், இயந்திரங்கள், உழுவைகள், வேளாண் உபகரணங்கள், சேமித்து வைக்கபட்ட உணவு தானியங்கள், படித்த தலித் இளைஞர்களின் கடவுச் சீட்டுககளை துணிகளுடன் நெருப்பில் போட்டு எரித்தனர். அந்த கிராமத்தில் இருந்த ஒரே கிணற்றில் காவல் துறையினர் நஞ்சு கலந்ததாக கூறப்படுகிறது. [1] மேலும் அவர்கள் பெண்களைத் துன்புறுத்தினர் மற்றும் முதியோரையும் தாக்கினர். காலை 10:45 மணிக்கு தொடங்கிய தாக்குதல் மாலை 3:15 மணி வரை தொடர்ந்தது. [5] பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளை காவலர்கள் பறிமுதல் செய்தனர். பள்ளர்களின் பொருளாதார வளத்தைக் குறிவைத்து காவலர்களால் சோதனை நடத்தப்பட்டது. [4] [6] [7]

விசாரணைகள் தொகு

கொடியன்குளத்தில் நடத்தப்பட்ட சோதனையானது கொலை விசாரணையில் சந்தேக நபர்களை கைது செய்யவும், தலித்துகள் வைத்து இருந்ததாக சந்தேகிக்கப்படும் வெடிபொருட்களையும், பயங்கர ஆயுதங்களைக் கைபற்ற திட்டமிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வளமான தலித் கிராமத்தில் வசிப்பவர்கள் இப்பகுதியில் உள்ள குற்றவாளிகளுக்கு பொருள் மற்றும் தார்மீக உதவிகளை வழங்குவதாக காவல்துறை குற்றம் சாட்டியதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். கருத்தறிவிப்பவர்களின் கூற்றுப்படி, காவலர் சோதனையின் நோக்கம் கிராமத்தின் பொருளாதார தளத்தை அழிப்பதாகும். [8]

குடிமை உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் தொகு

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் வழக்கறிஞர்கள் வருகை தந்தனர். அருவாள்கள், கம்பிகள், சுத்தியல், கோடாரிகளால் கிராம மக்களை போலீசார் தாக்கி சொத்து சேதம் விளைவித்ததாக அவர்கள் தெரிவித்தனர். உலோக உணர்வி மூலம் தங்க நகைகளை கண்டறிந்து காவலர்கள் திருடிச் சென்றனர். இந்த நிகழ்வு குறித்து நடுவண் புலனாய்வுச் செயலகம் (சிபிஐ) விசாரணை நடத்தவேண்டும் என்றும், வன்முறைக்கு காரணமான மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகம் கோரிக்கை விடுத்தது. [9]

கோமதிநாயகம் ஆணையம் தொகு

இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ₹ 17 லட்சம் நிதி உதவி அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு இட்டது. [10] முன்னாள் மாவட்ட நீதியரசர் பி. கோமதிநாயகத்தை ஒருநபர் விசாரணை ஆணையராக அரசு நியமித்தது. [2] கோமதிநாயகம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். கொடியங்குளத்தில் உள்ள ஒரு வீட்டில் மட்டும் விசாரணை நடத்திய நிலையில், ஆணையத்தைப் புறக்கணிக்கிறோம் என்று மக்கள் கூறியதும் உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார். [2] [8]

1996 மார்ச் 12 அன்று, ஆணையம் தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. சிபிஐ விசாரணை கோரி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததால், கொடியன்குளம் மற்றும் பிற கிராமங்களைச் சேர்ந்த தலித்துகள் ஆணையத்தைப் புறக்கணிக்க முடிவு செய்தனர். ஆணையம் 26 அரசு சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது. பெரும்பாலும் காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் உட்பட, 133 பேர். தலித்துகள் ஆணையத்தைப் புறக்கணித்ததால், தேவர்களே பெரும்பான்மையான பொதுச் சாட்சியங்களை அளித்தனர். [8]

கொடியன்குளம் நிகழ்வில், காவல்துறை அத்துமீறல் இல்லை என்று ஆணையம் கூறியது. புதிய தமிழகம் கட்சி, திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பொதுவுடமை கட்சிகள் ஆணையத்தின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. [8]

பின்விளைவு தொகு

இந்த சம்பவம் பரவலான சீற்றத்தை உருவாக்கியது, மேலும் கிராம மக்கள் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர். தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் கூட்டமைப்பின் தலைவர் க. கிருஷ்ணசாமி தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் வெற்றி பெற்றனர். [2]

பரவலர் ஊடகங்களில் தொகு

இந்த நிகழ்வை தழுவி கர்ணன் (2021 திரைப்படம்) எடுக்கப்பட்டது. [11]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Human Rights Watch 1999.
  2. 2.0 2.1 2.2 2.3 Manikumar 2017.
  3. 3.0 3.1 3.2 Manikumar 1997.
  4. 4.0 4.1 4.2 4.3 Pandian 2000.
  5. 5.0 5.1 Salil, K. (2021-04-12). "Caste in Tamil cinema: Karnan raises the bar". The Federal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-12.
  6. "Rediff On The NeT: N Sathiya Moorthy on the caste clashes in southern Tamil Nadu". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-12.
  7. "Unwilling to act". Frontline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-12.
  8. 8.0 8.1 8.2 8.3 VISWANATHAN, S. "A contentious report". Frontline (in ஆங்கிலம்). Archived from the original on 2021-04-12. பார்க்கப்பட்ட நாள் 2021-04-12.
  9. Manikumar 2017, ப. 71.
  10. "'An inhuman act by the police'". Frontline (in ஆங்கிலம்). Archived from the original on 2021-04-11. பார்க்கப்பட்ட நாள் 2021-04-12.
  11. "Karnan movie review: Dhanush's film is a powerful, bold portrait of caste-based riots and police brutality". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-04-09. பார்க்கப்பட்ட நாள் 2021-04-13.

நூல் பட்டியல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=1995_கொடியன்குளம்_வன்முறை&oldid=3751038" இலிருந்து மீள்விக்கப்பட்டது