சிறுகாக்கை பாடினியம்

சிறுகாக்கை பாடினியம் மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. காக்கை பாடினியம் என்னும் நூலைப்போலவே இதுவும் ஒரு திரட்டுநூல். இது யாப்பிலக்கணம் கூறும் நூல்.

நூற்பாக்களை இயற்றியவர் சிறுகாக்கை பாடினியார். இவரது பெயரால் நூலுக்குப் பெயர் அமைந்தது. இவர் காக்கை பாடினியாரின் தங்கை என்று பேராசிரியர் கருதுகிறார்.[1] குமரியாற்றைக் கடல்கொண்ட காலத்தில் வாழ்ந்தவர் என்னும் பேராசிரியர் கருத்து[2] ஏற்புடைத்தாக இல்லை. சிறுகாக்கை பாடியனார் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

உரைநூல்களிலிருந்து இந்நூலின் பாக்களைத் திரட்டியவர் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி. இவரது திரட்டில் 31 நூற்பாக்கள் உள்ளன.

இவர் செய்துள்ள புதுமைகள் தொகு

  • அம்போதரங்கம் - விளக்கம் (நீரில் கல்லைப் போட்டால் எழும் அலையானது முதலில் குறுவட்டத்தில் பெரிதாகவும், போகப்போகப் பெருவட்டமாகி உயரம் குறைந்தும் அமைவது போல விலகிச் செல்லும் பாடல் அமைதி 'அம்போதரங்கம்' எனப்படும்.[3]
  • தளை என்னும் செய்யுள் உறுப்பை இவர் விட்டுவிட்டு இலக்கணம் கூறுகிறார்.
  • வெண்பா,ஆசிரியம், கலி, வஞ்சி என்னும் நால்வகைப் பாக்களில் ஒவ்வொன்றும், பா, தாழிசை, துறை, விருத்தம் என நான்கு வகைப்பட்டு மொத்தம் 16 வகை கொள்ளும்,[4]
  • காக்கை பாடினியம் விருத்தம், துறை, தாழிசை என்று கூறும் வரிசை முறையை இந்நூல் தாழிசை, துறை, விருத்தம் என முறை மாற்றி நிரல் செய்கிறது.[5]

குறிப்புகள் தொகு

  1. தொல்காப்பியம் செய்யுளியல் நூற்பா 1 உரை)
  2. தொல்காப்பியம் மரபியல் 95 உரை
  3. நூற்பா 26
  4. சிறுகாக்கை பாடினியம் -15)
  5. (யாப்பருங்கலம் 56 விருத்தியுரை

மேற்கோள் நூல்கள் தொகு

  1. முனைவர் ச.வே.சுப்பிரமணியன் பதிப்பு, தமிழ் இலக்கண நூல்கள், மணிவாசகர் மதிப்பகம், 2007
  2. புலவர் இரா.இளங்குமரன், இலக்கண வரலாறு, மணிவாசகர் மதிப்பகம், 1990
  3. மயிலை சீனி வேங்கடசாமி, மறைந்துபோன தமிழ்நூல்கள்
  4. * யாப்பருங்கலம் Madas Government Oriental Manuscripts Series No. 66 - 1960
  5. யாப்பருங்கலக் காரிகை
  6. தொல்காப்பியம் செய்யுளியல் பேராசிரியர் உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகாக்கை_பாடினியம்&oldid=3386388" இலிருந்து மீள்விக்கப்பட்டது