சிறுநீர் உருவாகும் முறை

ஒவ்வொரு நெப்ஃரானும் தொடர்ச்சியாகச் சிறுநீரை உருவாக்குகிறது. இவ்வுருவாக்கத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குளாமருலார் வடிகட்டுதல், குழல்களில் மீண்டும் உறிஞ்சப்படுதல், குழல்களில் சுரத்தல் ஆகும்.
குளாமருலார் வடிகட்டுதல் :
மால்பிஜியன் உறுப்பு இரத்தத்தை உயிரிய அடிப்படையில் வடிகட்டுவதால் இதனை உயிர் வடிகட்டி என்கிறோம். குளாமருலஸ் பகுதியும் பௌமானின் கிண்ணமும் இணைந்த பகுதி மால்பிஜியன் உறுப்பு ஆகும்.
வடிகட்டுதலின் தன்மை :
இதயத்திலிருந்து வெளிவரும் மொத்த இரத்தத்தில் ஏறக்குறைய 20-25% அளவு இரத்தத்தை சிறுநீரகம் பெற்றுக்கொள்கிறது. இவ்வதிக அளவு இரத்தம் குளாமருலஸ் தந்துகிகளின் வழியாக செல்வதினால் அங்கு இரத்த அழுத்தம் உயர்வாகக் காணப்படுகிறது. இவ்வுயர் இரத்த அழுத்தமே வடிகட்டுதலுக்குக் காரணமாகிறது. குளாமருலசில் உள்ள உள்செல் தந்துகிகளில் காணப்படும் இரத்த திரவ அழுத்தம்(Hydro static pressure) 75mm Hg. இதற்கு எதிராக செயல்படும் அழுத்தங்கள், சவ்வூடு பரவல் அழுத்தம் 30mm Hg, இடையீட்டு அழுத்தம் 10mm Hg மற்றம் சிறுநீரக நுண்குழல் உள் அழுத்தம் 10mm Hg ஆகும். இவை குளாமருலஸ் வடிதிரவம் வடிக்கப்படுவதில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. சிறுநீரக தந்துகிகளில் உள்ள பிளாஸ்மா புரதங்களால் உருவாகும் இவ்வெதிர் அழுத்தங்களை காட்டிலும் இரத்த நீர் அழுத்தம் அதிகமாக காணப்படுகிறது. எனவே முடிவான அழுத்த விளைவு (75mm Hg - 50mm Hg = 25mm Hg) வடிகட்டுதலில் முக்கிய காரணமாகிறது. மால்பிஜியன் கேப்சூலின் உள் வடிக்கப்பட்ட திரவம் குளாமருலார் வடிதிரவம் என அழைக்கப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு உருவாகும் வடிதிரவத்தின் இவ்வளவினை குளாமருலார் வடிதிரவ அளவு (Glomerular filtration rate- GFR)எனலாம். மனிதரில் இவ்வளவு 125 மி.லி / நிமிடம் ஆகும். 24 மணிநேரத்தில் வடிக்கப்படும் மொத்த குளாமருலார் வடிதிரவத்தின் அளவு 170 முதல் 180 லிட்டர்கள் ஆகும்.
குழல்களில் மீண்டும் உறிஞ்சுதல் :
சிறுநீர் உருவாகுதலில் இது இரண்டாம் நிலையாகும். கிளாமருலார் வடிதிரவத்தில், குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் ஆகிய முக்கிய பொருள்கள் அதில் உள்ள நீரில் கரைந்து காணப்படுகின்றன. மீண்டும் உறிஞ்சுதல் நிகழ்வு சிறுநீரக நுண்குழல்களில் நடைபெறுகிறது. பயன்படக்கூடிய பொருள்கள் மாறுபட்ட அல்லது தேர்ந்தெடுத்து உறிஞ்சுதல் முறைகளில் மீண்டும் உறிஞ்சி உள்ளிழுக்கப்படுகின்றன. குளுக்கோஸ், சோடியம் மற்றும் கால்சியம் போன்ற மிக இன்றியமையாத பொருள்கள், செயல்மிகு கடத்தல் மூலம் அதிக அளவு உறிஞ்சப்படுகின்றன. யூரியா, மற்றும் யூரிக் அமிலம் போன்ற தேவையற்ற பொருள்கள் எளிய ஊடுருவல் மூலம் குறைந்த அளவே உறிஞ்சப்படுகின்றன. கிரியேட்டினின் போன்ற பொருள்கள் முழுமையாக உறிஞ்சப்படாமல் வெளியேற்றப்படுகின்றன.
அண்மை சுருண்ட குழல்களில் மீண்டும் உறிஞ்சுதல் :
அண்மை சுருண்ட குழலில் நீர், குளுக்கோஸ், சோடியம் பாஸ்பேட் மற்றும் பைகார்பனேட் போன்றவை உறிஞ்சப்படுகின்றன. இப்பகுதியில் சிறுநீர் ஒத்த அடர்வு தன்மையுடையதாகக் காணப்படும். ஒத்த அடர்வு தன்மை என்பது இரண்டு கரைபொருள்களுக்கு இடையே உள்ள படலம் வழியே நீர் கடந்து செல்லாத நிலையாகும்.
ஹென்லிஸ் வளைவில் மீண்டும் உறிஞ்சுதல் :
ஹென்லியின் கீழிறங்கு குழல் வழியே சிறுநீர்ச் செல்லும் போது உயர் அடர்வு நிலை அதிகரிக்கிறது. ஏனென்றால் கீழிறங்கு வளைவின் பகுதி மிக மெல்லியதாக உள்ளதால் சோடியம் எளிதாக ஊடுருவி உள் செல்கிறது. மேல் ஏறிச் செல்லும் குழலின் சுவர்ப் பருமனாக உள்ளதினால் சிறுநீர் மெதுவாகச் செல்லுகிறது. மேல் ஏறு குழலிலிருந்து சோடியம் கீழிறங்கு குழலுக்கு இடையீட்டு திசுக்களின் இடைவெளி வழியே செல்லுவதினால் சிறுநீரின் அடர்வு நிலை குறைந்து கொண்டு செல்கிறது. எந்த ஒரு கரைசலில் இருந்து நீர் இழப்பு ஏற்படுகிறதோ அக்கரைசல் அடர்குறைவு திரவம் எனப்படும்.
சேய்மை சுருண்ட குழலில் மீண்டும் உறிஞ்சுதல் :
சேய்மை சுருண்ட குழலைச் சிறுநீர் அடையும் போது சுற்றியுள்ள திசுக்களுக்கு, செயல்மிகு கடத்தல் மூலம் சோடியமும், எளிய கடத்தல் மூலம் நீரும் கடத்தப்படுவதால் சிறுநீர் ஒத்த அடர்வுத் தன்மையை அடைகின்றது.
சேகரிக்கும் குழலில் மீண்டும் உறிஞ்சுதல் :
சேகரிக்கும் குழலினைச் சிறுநீர் அடையும் போது ADH ஹார்மோனின் செயலினால் நீர் உறிஞ்சப்படுகிறது. எனவே சிறுநீர் மறுபடியும் உயர் அடர்வு தன்மையை அடைகிறது. சேகரிக்கும் குழலினுள் சுற்றிவரும் பிளாஸ்மாவின் மாறுபடும் சவ்வூடு அழுத்தத்தினை ஹைப்போதலாமஸில் உள்ள சவ்வூடு உணர்பகுதிகள் உணர்ந்து ADH ஹார்மோனை வெளியிடச் செய்கின்றன. எனவே உருவான சிறுநீரில் 96% நீர் 2%, யூரியா மற்றும் 2% வளர்சிதை மாற்றக் கழிவுகள் காணப்படுகின்றன. 24 மணி நேரத்தில் வடிக்கப்படும் கிளாமருலஸ் வடி திரவத்தில் காணப்படும் வெவ்வேறு பொருள்களின் அளவும், அதிலிருந்து வெளிசெல்லும் பொருள்களின் அளவும் ஓர் ஒப்பீடாக பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

பொருள் ஒருநாளில் வடிக்கப்படும் குளோமருலார் வடி திரவத்தின் அளவு ஒருநாளில் சிறுநீர் வழியே வெளியேற்றும் பொருள்களின் அளவு
நீர் 180 லிட்டர் 12 லிட்டர்
புரதம் 2 கிராம் 0.1 கிராம்
சோடியம் 580 கிராம் 5 கிராம்
குளோரைடு 640 கிராம் 6 கிராம்
பொட்டாசியம் 30 கிராம் 2 கிராம்
பை கார்பனேட் 275 கிராம் 0
குளுக்கோஸ் 180கிராம் 0
யூரியா 53 கிராம் 25 கிராம்
யூரிக் அமிலம் 8.5 கிராம் 1 கிராம்
கிரியேட்டினின் 1.6 கிராம் 1.6 கிராம்

குழல்களில் சுரத்தல் :
வடிகட்டுதலில் இருந்த தவறிய உடலுக்குக் கேடு விளைவிக்கும் கழிவுப் பொருள்கள் குழலின் சுவரின் வழியே செயல்மிகு கடத்தல் முறையில் வெளியேற்றப்படுகின்றன. இது சிறுநீர் உருவாகுதலின் கடைசிநிலை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநீர்_உருவாகும்_முறை&oldid=2743614" இலிருந்து மீள்விக்கப்பட்டது