சிவதொண்டன் (இதழ்)

சிவதொண்டன் என்பது இலங்கையில் இருந்து வெளிவரும் ஒரு ஆன்மிக மாசிகை ஆகும். சிவதொண்டன் சபை இதனை வெளியிட்டு வருகிறது.

வரலாறு தொகு

செந்தமிழ் ஆங்கிலத் திங்கள் வெளியீடான சிவதொண்டன் இதழ் 1935 ஆம் ஆண்டு சனவரி மாதம் வெளிவர ஆரம்பித்தது. யாழ்ப்பாணத்து யோக சுவாமிகளின் திருவுளப்படி, அவரது ஆசீர்வாதத்துடன் பண்டித. க. கி. நடராசன் (B.O.L) என்பாரால் இவ்விதழ் ஆரம்பிக்கப்பட்டது.

நடராசன் 1934 ஆண்டில் கமலாசனி அச்சு நிலையத்தை ஆரம்பித்தார். பண்டித. க. கி. நடராசன் 25ஆம் ஆண்டு சிவதொண்டன் சிறப்பு மலரில் பின்வருமாறு எழுதியிருந்தார்: "அடியேன் செய்த தவப்பயனாகச் சில நாட்களுக்குப் பின் சுவாமிகள் அச்சு நிலையத்துக்கு எழுந்தருளினார்கள். தொடங்கிவிட்டாய்! கவனமாய் நடத்து, என்றார்கள். பின்னர் ஒரு வாரத்துக்குப் பின்வந்து, பத்திரிகை ஒன்றைத் தொடங்கு, என்றார்கள். பத்திரிகைக்கு என்ன பெயரிடலாம் என்று கேட்டேன். அதற்கு அவர் பதில் கூறாமல் போய் விட்டார்கள். பின்னொருநாள் வந்து சிவதொண்டன் என்று பெயரிட்டுச் சிறிய அளவில் நடத்து என்றார்கள்"[1].

1935 பவ வருடத்து மார்கழி (அதாவது 1935 ஆண்டு சனவரி) மாதத்தில் முதல் இதழ் வெளிவந்தது. "நாம் யார்" என்ற பொருள் பற்றித் தலையங்கம் நடராசனால் எழுதப்பட்டது. இரண்டாம் இதழில் இருந்து செ. மயில்வாகனம் என்பவர் சுவாமிகளின் மகாவாக்கியங்களுக்கு விளக்கம் எழுதி வந்தார்கள். "எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவார் ஈசன்" என்னும் சுலோகத்துடன் மாதம் தோறும் வெளிவந்தது. சிவதொண்டனின் மூன்றாம் இதழில் இருந்து நற்சிந்தனை எனும் தலைப்போடு சிவயோக சுவாமிகளின் கருத்துகள் இவ்வேட்டில் பதியப்பட்டன.

இவ்விதழ் 1950 களில் யோகசுவாமிகளது அறிவுறுத்தலின் படி சிவதொண்டன் சபையாரால் பொறுப்பேற்கப்பட்டு வெளிவந்தது. தொடர்ந்தும் பண்டித. க. கி. நடராசன் அவர்களே ஆசிரியராகப் பணியாற்றி வந்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. அம்பிகைபாகன், ச., யோகசுவாமிகள், கொழும்பு, 1972

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவதொண்டன்_(இதழ்)&oldid=3367491" இலிருந்து மீள்விக்கப்பட்டது