சுத்தியல் (சுடுகலன்)

சுத்தியல் என்பது சேமித்து இருக்கும் நிலையாற்றலை, எறியத்தை சுடவதற்கான 'ஆரம்ப ஆற்றலாக' மாற்ற பயன்படும், சுடுகலனின் ஒரு பாகம் / கூறு ஆகும். தோற்றத்திலும், செயல்பாட்டிலும் வேலையாளின் சுத்தியலை ஒத்து இருப்பதால், இது இப்பெயரை பெற்றது; சுடுகலனில் சுத்தியல் என்பது, ஒரு சுழல்மையத்தை ஒட்டி அதீத விசையுடன் சுற்றும், ஒரு உலோகத்துண்டு ஆகும்.[1] சுடுகலன்களில், ஆயுதம் முதலில் இழுபட்ட நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அதாவது, சுருள்வில் பூட்டப்பட்ட அமைப்பினால், சுத்தியல் பின்னால் இழுக்கப்பட்டு, (சுருள்வில்லை) விடுவித்தவுடன் சுத்தியல் அடிக்கும் வகையில், "தயார்" நிலையில் இருக்கும். இந்த விடுவிப்பானது ஆயுதத்தின் விசையோடு இணைக்கப்பட்டிருக்கும். சுடுநரால் விசை இழுக்கப் படும்போது, சுருள்வில் அமைப்பில் சேமிக்கபட்டிருக்கும் நிலையாற்றல், குபீரென்ற இயக்க ஆற்றலாக விடுவிக்கப்படுகிறது.

பெரெட்டா 92எஃப்.எஸ்.
மேலிருந்து கீழாக: இயல்பு நிலையில் சுத்தியல்.

இழுபட்ட சுத்தியல், பாதுகாப்பு அமர்த்தப்பட்டு, சுடத் தயாராக உள்ளது.

சுத்தியல் விடுவிக்கப்பட்ட உடன், அது இயல்பு நிலைக்கு சொடுக்கபட்டு, வெடிமருந்தை பற்றவைக்கக் கூடிய பல்வேறு இயக்கமுறைகளுள் ஒன்றை அடித்து, எறியத்தை சுடும்.

நவீன காலத்து சுடுகலன்களில், விசை இழுக்கப்படுவதால் விடுவிக்கப்படும், இழுபட்ட சுத்தியல் வெடியூசியைத் தொடும்படி அமைக்கப்பட்டு இருக்கும்.[1] சுத்தியலில் இருந்து விடுவிக்கப்படும் இயக்க ஆற்றலானது, வெடியூசியால் நேரியமாக்கபட்டு, வெடிபொதியில் இருக்கும் எரியூட்டிக்கு வழங்கப்படும். எரியூட்டியின் வேதிப்பொருள் எரிந்து, தீப்பொறி கிளம்பி, வெடிமருந்தை பற்றவைக்கும்.[2]

பரிணாமம்

தொகு
 
கைபீரங்கியை சுடுவதை சித்தரிக்கும் ஓவியம்.

வேதியியற் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வழியாக, கையடக்க ஆயுதங்களிலிருந்து அதிவேகமாக எறியத்தை ஏவும் திறனுடைய வெடிமருந்தை உருவாக்கியபின்பு தான், (ஆரம்பத்தில் "கைபீரங்கி" என்றழைக்கப்பட்ட)[3] சுடுகலன்கள்,  முதன்முதலில் உருப்படியான ஆயுதமாக 1364-ல் ஆனது.[3] "ஆயுதத்தின் குறியை இலக்கின்மீது வைத்தவாறே, திறன்மிகுந்து வகையில் எவ்வாறு வெடிமருந்தை பற்றவைப்பது?" என்ற பிரச்சனை உடனே தோன்றியது. ஆரம்பத்தில், இந்த பிரச்சனைக்கு, (வேதியியற் பண்படுத்தலால் நீண்ட நேரம் எரியக்கூடிய கயிறு) -- "மந்தகதி திரி"[4] தீர்வை அளித்தது. சுடுநர் சுடுவதற்கு தயாராக இருக்கையில்; ஆயுதத்தின் குழலிலுள்ள தொடுதுளை வழியாக[3], கனந்து கொண்டிருக்கும் திரியின் முனையை கைகளால் வெடிமருத்தில் இடுவார்கள். ஆயுதத்தை இலக்கின்மீது வைத்திருந்தவாறே, மந்தகதித் திரியை கொண்டு வெடிமருந்தையும் பற்றவைப்பது என்பது, சுடுநருக்கு கடினமாக இருந்தது.

மந்தகதி திரியின் அறிமுகத்திற்கு பின்பு, அசல் சுத்தியல் அமைப்பின் முதற்படியாக, திரியியக்கம் 1400-களில் உதயமானது.[4] அரவு வடிவ கரம் கொண்ட இது, செர்ப்பென்ட்டைன்[3] என்ற பெயராலும் அழைக்கப்பட்டது. விசை இழுக்கபடுகையில், எரியும் திரியை கொண்டிருக்கும் இக்கரம் முன்னால் நகர்ந்து, வெடிமருந்தை தொட்டு துப்பாக்கியை வெடிக்கச் செய்தது.

 
சக்கர இயக்கத்தின் வரைபடம்
1. பற்றுகுறடு / இடுக்கி
2. இரும்புப் பைரைட்டு
3. கிண்ணி
4. விசை
5. சக்கர சுழலச்சு
6. சக்கரம்
7. சுருள்வில்
8. துமுக்கிக்குழல் 

1509-ன் முடிவில், திரியியக்கத்தில் உள்ள சிக்கல்களை தீக்கும் பொருட்டு சக்கரயியக்கம் உதயமானது.[3] சக்கரயியக்கத்தில்  'கவ்வி' எனப்படும் கரத்தில், பைரைட்டுத் துண்டு ஒன்றை கொண்டிருக்கும்.[4] இந்த பைரைட்டை, ஒரு உலோக சக்கரத்தின் மீது வைத்து விசையை இழுக்கையில், தீப்பொறிகள் உண்டாகி, வெடிமருந்தை பற்றவைத்து, ஆயுதத்தை வெடிக்கச்செய்யும். சக்கரயியக்கம் விலை உயர்ந்ததாகவும், அதிகம் பராமரிக்கப்பட வேண்டியதாகவும் இருந்தது, 

மத்திய 1600-களில், தீக்கல்லியக்கிகள் அறிமுகமானது.[4] தீக்கல்லியக்கமும் சக்கரயியக்கத்தை போலத்தான், ஆனால் 'கவ்வி' பைரைட்டு துண்டை சுற்றும் சக்கரத்தின்மீது வைப்பதற்கு பதிலாக, கரம் (அல்லது சுத்தியல்) ஒரு தீக்கலை எஃகுத் தகடின்மேல் வேகமாக அடித்து உராய்வின் மூலம் தீப்பொறிகளை உண்டாக்கியது.[3] இந்த இயக்கம் சக்கரயியக்கத்தை விட விலை மலிவாக இருந்தது.[4]

ரெவெரெண்டு அலெக்ஸாண்டர் ஃபோர்சித் என்பவர், பாதரச பல்மினேட்டில் (Hg(ONC)2) அடித்தால் எரியும் பண்பை கண்டறிந்தார். இந்த கண்டறிதலால், தட்டும் மூடி உருவாக்கப்பட்டது. மூடி என்பது, துரிதமாக ஆவியாகும் வேதிப்பொருள் நிரப்பப்பட்ட, ஒரு சிறிய உலோகச் சிமிழ் ஆகும். இந்த மூடியை குழலின் பின்பகுதியிலுள்ள காம்பின்மீது வைத்து, விசையை இழுக்கையில், சுத்தியல் இதனை அடித்து தீப்பொறிகளை உண்டாக்கி, சுடுகலனை வெடிக்கச்செய்தது.  

 
ஒரு வெடிபொதி
1. தோட்டா
2. பொதியுறை
3. வெடிபொருள்
4. விளிம்பு
5. எரியூட்டி 

வெடிபொதிகள் அறிமுகமாகும் வரை, தட்டும் மூடி கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக பரவலாக உபயோகிக்கப்பட்டது. எறியம், வெடிமருந்து மற்றும் தட்டும் மூடி ஆகிய அனைத்தும் ஒரே உறையில் சேர்ந்ததுதான் வெடிபொதி ஆனது. இதனால் குண்டேற்றுவது எளிதானது. இந்த தொழில்நுட்பம் தான், தற்போதுள்ள ஆயுதங்களில் வெடியூசி மற்றும் சுத்தியல் அமைப்பை பயன்படுத்த காரணம் ஆனது.

குறைபாடுகள் 

தொகு

நவீன, உட்புற வடிவங்களோடு ஒப்பிடுகையில், வெளிப்புற சுத்தியல் அமைப்பில் சில குறிப்பிடத்தக்க குறைபாடுகள் உள்ளன. ஓரியக்க சுழல்துப்பாக்கிகளில், ஒருவேளை அறையில் வெடிபொதி ஏற்றப்பட்டபின்; சுத்தியல் அடித்து, எதிர்பாராத ஆயுத வெடிப்பு நிகழலாம். இது ஒரு நிரந்தர ஆபத்தாகவே உள்ளது. சுத்தியலும், வெடியூசியும் தொடுவதை தவிற்பதற்கு, அவற்றின் இடையில் வேறெதுவும் இல்லாததால், எதிர்பாராத வெடிப்புகள் சாத்தியமே.

 
எளிதில் ஆடையில் தீப்பற்றவல்ல, ஓர் வெளிப்புற சுத்தியல் 

இதர வகைகளில், விசை இழுக்கப்படும் வரை சுத்தியலும், வெடியூசியும் தொடுவதை தவிற்பதற்கும் பாதுகாப்பு அமைப்புடன் இருந்தன. இருப்பினும், பல ஓரியக்க சுழல்துப்பாக்கிகளின் உரிமையாளர்கள் எதிர்பாராத வெடிப்பை தவிர்க்க, எப்போதும் காலியான அறையுடனேயே இவ்வகை துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.

மேலும் பார்க்க 

தொகு

மேற்கோள்கள் 

தொகு
  1. 1.0 1.1 Editor, The (2015-05-25). "Firearms History, Technology & Development: Hammer Fired vs. Striker Fired". Firearms History, Technology & Development. Retrieved 2016-04-06. {{cite web}}: |last= has generic name (help)
  2. "Principles of Firearms -- Functions -- Firing". rkba.org. Retrieved 2016-04-06.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "The History and Evolution of Guns as Told Through Pictures". The Blaze. Archived from the original on 2016-04-17. Retrieved 2016-04-06.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "NRA Museums:". www.nramuseum.org. Retrieved 2016-04-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தியல்_(சுடுகலன்)&oldid=3554982" இலிருந்து மீள்விக்கப்பட்டது