செண்டிரியாங்

மலேசியா, பேராக் மாநிலத்தில், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்புற நகரம்.

செண்டிரியாங் (Chenderiang) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்புற நகரம். இந்த நகரத்திற்கு 10 கி.மீ. தொலைவில் தாப்பா நகரம் உள்ளது. அதற்கும் அடுத்து 7 கி.மீ. தொலைவில் தீமோ; 17 கி.மீ. தொலைவில் மம்பாங் டி அவான் நகரங்கள் உள்ளன. ஈப்போ மாநகரத்தில் இருந்து 53 கி.மீ. தொலைவில் செண்டிரியாங் நகரம் அமைந்து உள்ளது. மிக அருகில் உள்ள நகரம் தாப்பா.

செண்டிரியாங்
Chenderiang
积莪营
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்1800
பரப்பளவு
 • மொத்தம்244 km2 (94 sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.mdtapah.gov.my/

செண்டிரியாங் எனும் பெயர் சந்தேக் (Cantik); லியாங் (liang) எனும் இரு சொற்களில் இருந்து தோன்றிய சொல்லாகும். ’சந்தேக்’ என்பது மலாய் மொழிச் சொல். ’லியாங்’ என்பது சீன மொழிச் சொல். இரு மொழிச் சொற்களுமே ’அழகு’ என்பதைக் குறிக்கின்றன.

செண்டிரியாங் நகரத்தைச் சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சை வண்ண மழைக் காடுகள். சின்ன பெரிய மலைகள். அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு நீர் அருவிகள். தித்திவாங்சா மலைத்தொடரின் தாழ்வாரத்தில் இந்த நகரம் அமைந்து உள்ளது. ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான அழகிய நகரம்.

பொருளடக்கம் தொகு

லாத்தா கிஞ்சாங் நீர்வீழ்ச்சி தொகு

 
லாத்தா கிஞ்சாங் நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் செண்டிரியாங் நகரத்தில் அமைந்து உள்ள சீனர் ஆலயம்.

மலேசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற லாத்தா கிஞ்சாங் நீர்வீழ்ச்சி (Lata Kinjang Waterfall) இங்கே தான் உள்ளது. இது ஓர் அடுக்கு அருவி. வடக்கு தெற்கு அதிவிரைவு நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்கள் இந்த நீர்வீழ்ச்சியைப் பத்து கி.மீ.க்கு அப்பால் இருந்தே பார்க்கலாம். ஏறக்குறைய 850 மீட்டர் உயரத்தில் இருந்து அடுக்கு அடுகாய்க் கொட்டுகிறது. அழகே அழகு.

’கிஜாங்’ எனும் மலாய் சொல்லில் இருந்து ’கிஞ்சாங்’ என்று அந்த இடத்திற்குப் பெயர் திரிபு ஏற்பட்டு உள்ளது. கிஜாங் என்றால் மான் என்று பொருள்.[1] கடுமையான கோடைக் காலத்தில் மட்டுமே நீர்வீழ்ச்சி சற்றே காய்ந்து விடுகிறது.

தாப்பா நகரில் இருந்து 18 கி.மீ. தொலைவில், புக்கிட் தாப்பா மலைப் பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். 850 மீட்டர் உயரத்தில் இருந்து அருவி கொட்டுகிறது. இதை லாத்தா கிஞ்சாங் சுற்றுச்சூழல் வனப் பூங்கா (Eco-Forest Park Lata Kinjang) என்றும் அழைக்கிறார்கள்.[2]

செண்டிரியாங் தமிழர்கள் தொகு

செண்டிரியாங் நகர்ப் பகுதியில் மலாய்க்காரர்கள்; சீனர்கள்; இந்தியர்கள் என மூன்று இன மக்களும் கலந்து வாழ்கின்றனர். சீனர்களைப் போல வேளாண்மைத் துறையில் கணிசமான அளவிற்கு தமிழர்கள் ஈடுபட்டு உள்ளார்கள். இங்குள்ள தமிழர்கள் பெரும்பாலோர் உழைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். வசதியாகவும் வாழ்கிறார்கள்.

1900-ஆம் ஆண்டுகளில் இந்தப் பகுதியில் பல ரப்பர்த் தோட்டங்கள் இருந்தன. கோப்பேங்; கம்பார்; தாப்பா போன்ற இடங்களுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கொண்டு வரப்பட தென்னிந்தியர்கள் இங்குள்ள தோட்டங்களில் குடியமர்த்தப் பட்டனர்.

1970-ஆம் ஆண்டுகள் வரை அந்த ரப்பர்த் தோட்டங்கள் நீடித்து உள்ளன. காலப்போக்கில் சில தோட்டங்கள் எண்ணெய்ப்பனைத் தோட்டங்களாக மாறின. மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களினால் சில பல தோட்டங்கள் துண்டாடப் பட்டன.

இந்தத் தோட்டங்களில் வாழ்ந்த தமிழர்கள் பலர் வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். படித்த இளைஞர்கள் சிலர் தனியார் நிறுவனங்களில் உயர்ப் பதவி வகிக்கின்றனர். சிலர் சொந்தத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

செனோய் பழங்குடி மக்கள் தொகு

 
செனோய் குழந்தைக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. 1906-ஆம் ஆண்டு எடுத்த படம்.

இந்த நகரத்திற்கு அருகில் உள்ள மலைக் காடுகளில் செனோய் எனும் பூர்வீகப் பழங்குடி மக்கள் அதிகமாய் வாழ்கிறார்கள். ஒராங் அஸ்லி எனும் அந்தப் பூர்வீகப் பழங்குடி மக்களின் குடியிருப்புகள் ஆங்காங்கே உள்ளன.

வடக்கு தெற்கு அதிவிரைவு நெடுஞ்சாலையில், தாப்பா நகரில் இருந்து [ஈப்போ]] நகருக்கும் பயணிக்கும் போது மலை அடிவாரங்களில் இவர்களின் குடியிருப்புகள் இருப்பதைப் பார்க்கலாம்.

மலேசியப் பழங்குடி மக்களில் மூன்று பெரும் பிரிவினர் உள்ளனர். அவர்களில் செனோய் (Senoi) என்பது மலாய் தீபகற்பத்தில் ஒரு பிரிவினர் ஆகும். இவர்கள் தீபகற்ப மலேசியாவின் மத்திய பகுதியான பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் வாழ்கின்றனர்.[3] குறிப்பாக செண்டிரியாங் மலைப் பகுதிகளில் அவர்களின் நடமாட்டம் மிகுதியாக உள்ளது.

செண்டிரியாங் பாரதி தமிழ்ப்பள்ளி தொகு

செண்டிரியாங் நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் செண்டிரியாங் பாரதி தமிழ்ப்பள்ளி (SJKT Bharathy, Jalan Pasar, Chenderiang). 30 மாணவர்கள் பயில்கிறார்கள். 17 பெண்கள். 13 ஆண்கள்.[4]

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=செண்டிரியாங்&oldid=3140940" இலிருந்து மீள்விக்கப்பட்டது