செய்தியாளர்

நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவைகளுக்குச் செய்திகளைச் சேகரித்துத் தொகுத்துத் தரும் பணிகளைச் செய்பவர்கள் செய்தியாளர், நிருபர் அல்லது பத்திரிக்கையாளர் (journalist) எனப்படுகிறார்கள். செய்தி நிறுவனங்கள் இத்தகைய நிருபர்களை பல்வேறு இடங்களில் பணி நிமித்தம் செய்து உடனடியாக செய்திகளை சேகரித்து தங்களது ஊடகங்களின் (media) மூலம் மக்களுக்கு கொண்டு செல்வார்கள். இவர்கள் நேர்காணல், கவனித்தல், ஆய்வுசெய்தல் மூலம் செய்திகளைச் சேகரிப்பார்கள்.

தேர்ந்த செய்தியாளர்களாவதற்கு உலகில் பல்வேறு நாடுகளிலும் பட்டப்படிப்புகளும் பட்டயப்படிப்புகளும் உள்ளன.

செய்தியாளர் வகைகள் தொகு

செய்தியாளர்களை அவர்கள் பணியின் இயல்பு, பணியமைப்பு, தொழில் திறன் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம்.

இயல்பு வகைகள் தொகு

செய்தியாளர்கள் செய்யும் பணியின் இயல்பை ஒட்டி அவர்களை 4 வகையாகப் பிரிக்கலாம்.

  1. நகரச் செய்தியாளர் - செய்தித்தாள்/தொலைக்காட்சி ஊடகம் அமைந்துள்ள ஊரிலுள்ள செய்திகளைத் திரட்டும் செய்தியாளர். இவர்களை உள்ளூர் செய்தியாளர் என்றும் அழைப்பதுண்டு.
  2. நகர்ப்புறச் செய்தியாளர் - மாநிலத்திலுள்ள மாவட்டத் தலைநகரிலிருந்து செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர்.
  3. தேசியச் செய்தியாளர் - நாட்டிலுள்ள மாநிலத் தலைநகரிலிருந்து செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர்.
  4. வெளிநாட்டுச் செய்தியாளர் - வெளிநாடுகளில் தங்கி உலகச் செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர்.

பணி வகைகள் தொகு

செய்தியாளர்கள் பணியை வைத்தும் அவர்களை 4 வகையாகப் பிரிக்கலாம்.

  1. பகுதிநேரச் செய்தியாளர் (Reporter) - செய்தித்தாள்/தொலைக்காட்சி ஊடகத்தின் நேரடிப் பணியாளராக இல்லாது, அனுப்புகின்ற செய்திகளுக்கேற்ப பணம் பெற்றுக் கொள்பவர்.
  2. செய்தியாளர் (Correspondent) - செய்தித்தாள்/தொலைக்காட்சி ஊடகத்தின் முழு நேரப் பணியாளராக இருந்து கொண்டு செய்திகளைத் திரட்டித் தருபவர்.
  3. மன்றச் செய்தியாளர் (Lobby Correspondent) - நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றின் நடவடிக்கைகளைக் கொண்ட செய்திகளை அளிப்பவர்.
  4. சிறப்புச் செய்தியாளர் (Special Correspondent) - ஒரு குறிப்பிட்ட நிகழ்வையோ அல்லது வெளிநாடு செல்லும் தலைவர்களைத் தொடர்ந்து அது குறித்த செய்திகளைத் திரட்டித் தருபவர்.

தொழில் திறன் வகைகள் தொகு

செய்தியாளர்கள் தொழில் திறனை வைத்து அவர்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.

  1. செய்தியாளர் (Reporter) - பார்ப்பதை அப்படியே எழுதுபவர்.
  2. விளக்கச் செய்தியாளர் (Interpretative Reporter) - பார்ப்பதுடன் தான் ஊகித்துணர்வதையும் சேர்த்துத் தருபவர்.
  3. செய்தி வல்லுநர் (Expert Reporter) - பார்க்காதவற்றைக் கூட அதன் பொருள் இதுதானென்று தீர்மானித்து சிறப்பாகத் தருபவர்.

செய்தியாளருக்கான பண்புகள் தொகு

செய்தியாளர் சிறந்த செய்தியாளராகத் திகழ வேண்டுமானால் அவரிடம் கீழ்காணும் தகுதிகள்/பண்புகள் இருக்க வேண்டும்.

  1. செய்தி மோப்பத் திறன்
  2. நல்ல கல்வியறிவு
  3. சரியாகத் தருதல்
  4. விரைந்து செயல்படல்
  5. நடுநிலை நோக்கு
  6. செய்தி திரட்டும் திறன்
  7. பொறுமையும் முயற்சியும்
  8. சொந்த முறை
  9. நல்ல தொடர்புகள்
  10. நம்பிக்கையைக் கட்டிக் காத்தல்
  11. நேர்மை
  12. கையூட்டுப் பெறாமை
  13. செயல் திறன்
  14. ஏற்கும் ஆற்றல்
  15. தன்னம்பிக்கை
  16. இனிய ஆளுமை
  17. தெளிவாகக் கூறும் ஆற்றல்
  18. மரபுகளைப் பற்றிய அறிவு
  19. சட்டத் தெளிவு

செய்தியாளரின் கருவிகள் தொகு

ஒவ்வொரு தொழிலையும் திறமையாகச் செயல்படுத்த அதற்கென சில கருவிகள் தேவைப்படுகிறது. செய்தியாளருக்கும் அது போன்று சில கருவிகள் தேவையாக உள்ளது.

  1. மொழியறிவு
  2. தட்டெழுத்துப் பயிற்சி
  3. சுருக்கெழுத்துப் பயிற்சி
  4. குறிப்பேடு, எழுது பொருள்கள்
  5. தகவல் கோப்பு
  6. எதிர்கால நாட்குறிப்பு
  7. இணையம் பயன்படுத்தும் திறன்

தமிழ்நாட்டில் செய்தியாளருக்கான சலுகைகள் தொகு

தமிழ்நாட்டில், சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் அவர்களால் ஒவ்வொரு பத்திரிகை நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர், ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 2 ஒளிப்பதிவாளர்கள் , 2 ஒளிப்பதிவு உதவியாளர்கள் ஆகியோர்களுக்கு செய்தியாளர் அட்டைகளை அளிக்கிறது.

சென்னையில் ஒரு நாளிதழுக்கு 9 செய்தியாளர்கள், 2 புகைப்படக்காரர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் ஆகியோர்களுக்கு பத்திரிகையாளர் அங்கீகார அட்டை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அங்கீகார அட்டை பெற்ற செய்தியாளர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், 50 சதவிகித ரயில் கட்டண சலுகை போன்றவைகளைப் பெற முடியும். மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் அளிக்கப்படும் வீடுகள், வீட்டிற்கான காலிமனைகள் போன்றவைகளை பத்திரிகையாளர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் பெற முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்தியாளர்&oldid=2059497" இலிருந்து மீள்விக்கப்பட்டது