செல்வநிதி தியாகராசா
செல்வநிதி தியாகராசா ஈழத்துக் கவிஞரும், பெண்ணிலைவாதியும் ஆவார். இவர் செல்வி எனும் பெயரினால் பெரிதும் அறியப்பட்டவர். இவருக்கு சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பின் (PEN) 1992 ஆம் ஆண்டுக்கான எழுத்துச் சுதந்திரத்துக்கான பன்னாட்டு விருது கிடைத்தது[1]. இவர் 1991 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டார்.
செல்வி | |
---|---|
பிறப்பு | செல்வநிதி தியாகராசா |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
இலக்கியத்துறை
தொகுஇவர் நாடக நெறியாளரும் நடிகையுமாவார். தோழி எனும் பெண் இலக்கிய இதழின் ஆசிரியராக செயற்பட்டார். ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்தன. செல்வியின் கவிதைகள் மனஓசை, மண், அரங்கேற்றம், ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்தன. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றன. யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தவர். இரண்டு நாடகங்களையும் எழுதியிருக்கிறார். "பூரணி இல்லம்" என்ற பெண்கள் மையத்தின் உறுப்பினராக இருந்தார். வடக்கில் நடந்த யுத்தத்தின் போது பாதிப்புக்கும், குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களுக்கு நிவாரண உதவிகளை இந்த மையம் செய்து வந்தது.
உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு சர்வதேச கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான Poets Essayists and Novelists (PEN) அமைப்பால் வழங்கப்பட்டது.[1].
கடத்தப்பட்டமை
தொகு1991 ஆகத்து 30 ஆம் நாள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள அவரது வீட்டில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கடத்தப்பட்டார்.[2] செல்வியின் விடுதலைக்காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்தன. சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன. இவர் பின்னர் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "PEN Barbara Goldsmith Freedom to Write Awards". Archived from the original on 2006-08-25. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
- ↑ UTHR(J) report on Selvy's death