செ. இராசநாயகம்

முதலியார் இராசநாயகம் என்று பரவலாக அறியப்படும் செ. இராசநாயகம் (C. Rasanayagam, அக்டோபர் 22, 1870 - சனவரி 17, 1940)[1] யாழ்ப்பாண வரலாற்றில் ஈடுபாடு காட்டிய ஒரு வரலாற்றாளர். இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.[2] பண்டைய யாழ்ப்பாணம் (Ancient Jaffna) என்னும் யாழ்ப்பாண வரலாறு பற்றிய ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதிப் புகழ் பெற்றார். பல பத்தாண்டுகளாக, யாழ்ப்பாண வரலாறு குறித்து ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரே ஆய்வு நூலாக இது விளங்கியது. அத்துடன், வேறு சில நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

செ. இராசநாயகம்
C. Rasanayagam
பிறப்புஅக்டோபர் 22, 1870
நவாலி, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புசனவரி 17, 1940(1940-01-17) (அகவை 69)
யாழ்ப்பாணம், இலங்கை
கல்விசென். தோமஸ் கல்லூரி, கொழும்பு
பணிஇலங்கை குடிசார் சேவை
அறியப்படுவதுவரலாற்றாளர், எழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்செல்லப்பா பிள்ளை

வரலாறு தொகு

இராசநாயகம், 1870 அக்டோபர் 22 இல் யாழ்ப்பாணம், நவாலியூரில் அம்பலவாண இறைசுவார் வீரசிங்க உடையாரின் வழித்தோன்றலான செல்லப்பா பிள்ளையின் மகனாகப் பிறந்தார்.[1] கொழும்பில் உள்ள புனித தோமையர் கல்லூரியில் கல்வியை முடித்துக்கொண்ட இவர், தனது 19 ஆவது வயதில் அரசாங்க சேவையில் எழுத்தர் பணியில் அமர்ந்தார். இக்காலத்தில் நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணி புரிந்த இவருக்கு 1920ல் முதலியார் தரத்துக்குப் பதவி உயர்வு கிடைத்தது. 1923 ஆம் ஆண்டில் மீண்டும் பதவி உயர்வு பெற்று இலங்கை குடிசார் சேவையில் அனுமதிக்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆறு ஆண்டுகள் பணி புரிந்த இராசநாயகம் 1929 ஆம் ஆண்டில் அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். 1940 ஆம் ஆண்டு சனவரி 17 ஆம் தேதி இவர் காலமானார்.[2]

ஆய்வுகளும், நூல்களும் தொகு

 
இராசநாயகம் எழுதிய பண்டைய யாழ்ப்பாணம் ஆங்கில நூல்.

யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய காலத்தில் யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. யாழ்ப்பாண வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழில் ஒரு நூலாக எழுதவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டபோது. ஏற்கனவே யாழ்ப்பாண வரலாறு பற்றி இருந்த நூல்களில் சொல்லப்பட்ட தகவல்களுக்கு முரணாகப் பல புதிய தகவல்கள் இருப்பதாக அவர் உணர்ந்தார்.[3] இதனால் இது குறித்த ஆய்வில் ஈடுபடும் ஆர்வம் ஏற்பட்டது. பழைய தமிழ் இலக்கியங்களையும், பிற வரலாற்றுச் சான்றுகளையும் ஆய்வு செய்த இவர் அவ்வாய்வு முடிவுகளை ஒரு ஆய்வு நூலாகவே வெளியிட விரும்பினார். இத்தகைய ஆய்வு நூல்கள் ஆங்கிலத்தில் இருப்பது கூடிய பயன் தரும் என்று எண்ணிய அவர் Ancient Jaffna (பண்டைய யாழ்ப்பாணம்) என்னும் தலைப்பில் 1926 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.[3] எனினும், மாணவர்களும் ஆங்கிலம் தெரியாத பிற தமிழரும் இலகுவாக வாசித்து அறிந்து கொள்ளக்கூடிய வகையில் யாழ்ப்பாண வரலாறு குறித்த நூலின் தேவையை அவர் மறந்துவிடவில்லை. தனது ஆய்வு முடிவுகளைச் சுருக்கமாகத் தமிழில் எழுதி 1933 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலாக வெளியிட்டார்.

தென்னிந்தியாவின் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார் Ancient Jaffna என்னும் நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். இந்த அணிந்துரையில், இத்தகைய ஆய்வுகளில் பயிற்சியும் அனுபவமும் இல்லாத இராசநாயகத்தின் இந்த நூலில் இருந்து அதிகம் எதிர்பார்த்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட கிருஷ்ணசாமி ஐயங்கார், நூலை வாசித்தபின் அதற்கு உயர்வான மதிப்பீடு வழங்கியுள்ளார். இந்த நூலில் பெருமளவு உழைப்பும், விரிவான ஆய்வும் உள்ளடங்கி இருப்பதாகவும், அதன் மூலம் யாழ்ப்பாணத்துக்கு வெளியே தெரியாத பெருமளவு விடயங்களை நூல் உள்ளடக்கி இருப்பதாகவும் எழுதியுள்ள அவர், இந்நூலில் பதியப்படாமல் இருந்திருந்தால் இவற்றில் பெரும்பாலான தகவல்கள் அழிந்து போயிருக்கக்கூடியவை என்றும் கூறியுள்ளதானது, யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பில் இராசநாயகத்தின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.[4] இறுதியாக, யாழ்ப்பாண வரலாற்றுக்கு மட்டுமன்றி, இந்திய வரலாற்று ஆய்வில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் இந்நூல் பயனுள்ளது என்ற கருத்தையும் கிருஷ்ணசுவாமி வெளிப்படுத்தியுள்ளார்.[5]

யாழ்ப்பாண வரலாறு கூறும் பழைய நூல்களான கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை ஆகியவற்றைத் தேடி இலண்டன் அருங்காட்சியக ஆவணக் காப்பகத்துக்குச் சென்ற இராசநாயகம், அங்கிருந்த அவற்றின் படிகளைப் பெற்று வந்தார். அவற்றில், கைலாயமாலையைத் தனது குறிப்புக்களுடன் பதிப்பித்து வெளியிட்டார். இவை தவிர இராசநாயகம் எழுதிய "கதிர்காமம்" குறித்த ஒரு நூலும் 1930 ஆம் ஆண்டில் வெளியானது. 1934ல், பிரித்தானியர் காலத்தில் யாழ்ப்பாணம் என்னும் நூலொன்றையும் அவர் வெளியிட்டார். அத்தோடு ஆவணக் காப்பகத்தில் இருந்த தமிழ் ஆவணங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாக 1937ல் வெளியிட்டுள்ளார்.[2]

இறுதிக் காலத்தில் நூற்பெயர் அகராதி என்ற நூலுக்காக 30,000 தமிழ்ப் புத்தகங்களின் பெயர்களைத் தொகுத்து அந்தாதி, வெண்பா, சரித்திரம், சமயம் எனப் பலவாறு வகைப்படுத்தித் தொகுத்துள்ளார்.[1]

சரித்திர ஆராய்ச்சிக் கழகத்தின் உறுப்பினராயிருந்து பழைய இலங்கை மன்னர்களின் தமிழ்க் கடிதங்களைத் தொகுத்து செப்பனிட்டு அரசாங்கத்தாரைக் கொண்டு வெளியிட்டார்.[1]

யாழ்ப்பாண வரலாற்று ஆய்வுகளுக்கு அவர் நேரடியாகச் செய்த பங்களிப்புக்கள் ஒருபுறம் இருக்கப் பிறரையும் இவ்விடயத்தில் அவர் ஊக்குவித்து வந்தார். 1878ல் எஸ். ஜோன் என்பவர் எழுதி வெளியிட்ட யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் தமிழ் நூலை மீள்பதிப்புச் செய்யும்படி ஜோனின் மகனுக்கு ஊக்கம் கொடுத்தார். அத்துடன், யாழ்ப்பாண வைபவமாலையைக் குறிப்புக்களுடன் பதிப்பிக்குமாறு குல. சபாநாதனையும் இவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புக்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 முதலியார் செ. இராசநாயகம் இறைவனடி சேர்ந்தார், சக்தி (இதழ்), பெப்ரவரி 1940, சென்னை
  2. 2.0 2.1 2.2 One Hundred Tamils of Twentieth Century - C. Rasanayagam
  3. 3.0 3.1 இராசநாயகம், செ., 1999a. பக். iii
  4. Rasanayagam, C., 1999b, Forward, p.iii
  5. Rasanayagam, C., 1999b, Forward, p.vi

உசாத்துணைகள் தொகு

  • இராசநாயகம், செ., யாழ்ப்பாணச் சரித்திரம், ஆசியன் எடுகேஷனல் சர்வீசஸ், 1999a.
  • Rasanayagam, C., Ancient Jaffna, Asian Educational Serveces, New Delhi, 1999b. நூலுக்கு எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் வழங்கிய அணிந்துரை, பக்.
  • One Hundred Tamils of Twentieth Century - C. Rasanayagam 2013 ஆகத்து 5 ஆம் தேதி பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._இராசநாயகம்&oldid=3171603" இருந்து மீள்விக்கப்பட்டது