சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்

பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் (ஆதாம் பாலம், Adam's Bridge) பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம். இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.

Sethusamudram Shipping Channel Project
வகைஇந்திய அரசு
நிறுவுகைFebruary 1997
தலைமையகம்சென்னை, Tamil Nadu, India
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு, India
முதன்மை நபர்கள்Shri A. Subbiah, IAS chairman, Tuticorin Port Trust & Chairman and managing director, Sethusamudram Corporation Limited
தொழில்துறைCanal Project
இணையத்தளம்sethusamudram.gov.in[தொடர்பிழந்த இணைப்பு]

300 மீ அகலமும் 12 மீ ஆழமும் 167 கி.மீ நீளமும் கொண்டதாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

தொகு
  • இராமர் பாலம் அருகே 35 கி.மீ நீளத்திற்கும், பாக் நீரிணைப்பு பகுதியில் 54 கி.மீ நீளத்திற்கு மட்டும் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்படும். போதிய ஆழமுள்ள 78 கி.மீ பகுதி ஆழப்படுத்தப்படமாட்டாது.
  • 10 மீ மிதவை ஆழம் கொண்ட கப்பல்கள் இக்கால்வாய் வழி அனுமதிக்கப்படும்.
  • கால்வாயில் செல்லும் கப்பல்கள் 8 கடல் மைல் வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும்.
  • பனாமா கால்வாய் போல குறும பார்வைத் தொலைவு 2.5 கி.மீ.
  • 33 மீ அகலமும் 215 மீ நீளமும் 30,000 டன் கொள்ளளவும் கொண்ட கப்பல்கள் இக்கால்வாயைப் பயன்படுத்தலாம்.

வரலாறு

தொகு
  • 1860- இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான ஏ.டி.டெய்லரின் சிந்தையில் திட்டம் கருக்கொள்கிறது.
  • 1861 - டௌன்செண்டு (Townsend) அவர்களின் முன்மொழிவு.
  • 1863 - மதராஸ் ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் (Sir William Denison) அவர்களின் முன்மொழிவு
  • 1871 - ஸ்டோடார்ட் (Stoddart) அவர்களின் முன்மொழிவு
  • 1872 - துறைமுகப் பொறியியலாளர் ராபர்ட்ஸன் (Robertson) அவர்களின் முன்மொழிவு
  • 1884 - சர் ஜான் (Sir John) அவர்களின் தென்னிந்திய கப்பல் கால்வாய்த் துறைமுகம் மற்றும் கரி ஏற்று-இறக்குமதி நிலையக் கும்பினி (South India Ship Canal Port and Coaling Station Ltd) என்பதற்கான முன்மொழிவு
  • 1903 - தென்னிந்திய தொடர்வண்டிப் (இரயில்வே) பொறியியலாளர்கள் முன்மொழிவு (S.I. Railway Engineer's proposal)
  • 1922- துறைமுகப் பொறியாளராக இருந்த சர். ராபர்ட் ப்ரிஸ்ட்டோ திட்டத்தைப் பரிந்துரை செய்கிறார்.
  • 1955- ஜவகர்லால் நேரு நியமித்த, இராமசாமி முதலியார் தலைமையிலான "சேது சமுத்திரத் திட்டக் குழு" 998 லட்சம் ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கிறது.
  • 1983- இந்திரா காந்தி நியமித்த லெட்சுமி நாராயணன் குழு 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கிறது.
  • ஜூலை 2, 2005 - திட்டப்பணிகள் மன்மோகன் சிங் அவர்களால் மதுரையில் துவக்கி வைக்கப் படுகிறது.

திட்டத்திற்குச் சார்பான கருத்துக்கள்

தொகு

பொருளியல் வளர்ச்சி தொடர்பான காரணங்கள்

தொகு
  • இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல் வரை குறையும்.
    • கப்பல்களின் பயண நேரம் 30 மணிநேரம் வரை குறைய வாய்ப்பு.
    • கணிசமான எரிபொருள் சேமிப்பு, அந்நியச் செலாவணி சேமிப்பு.
    • கப்பல் வாடகைக் கட்டணத்தில் சேமிப்பு.
    • கப்பல்கள் அதிகப் பயணம் மேற்கொள்ள முடியும்.
  • கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கென ஒருங்கிணைப்புத் துறைமுகமாக மேம்படுத்தப்படும்.
  • தூத்துக்குடி துறைமுகமும், தமிழகத்தின் தென்மாவட்டங்களும் வளர்ச்சி பெறும்.
  • இராமேஸ்வரத்தில் மீன்பிடித் துறைமுகம் மேம்படுத்தப்படும்.

படைத்துறை - இடம்சார் அரசியல் நலன் குறித்த காரணங்கள்

தொகு
  • இந்தியக் கடற்படையின் போர்க்கலன்களை கிழக்குக் கரையோரப்பகுதிகளுக்கும் மேற்குக்கரையோரப்பகுதிகளுக்குமிடையில் அவசரகாலத்தில் மிக வேகமாக பாதுகாப்பாக நகர்த்த உதவும்.
  • கருங்கடலிலிருந்து சிங்கப்பூர் துறைமுகம் வழியாகச்செல்லும் மிகமுக்கிய கடல் வணிகப்பாதையின் பாதுகாப்புச் சார்ந்த முக்கியத்துவத்தை இந்தியக் கடற்படை பெற்றுக்கொள்ளும்.
  • இந்தியாவிலிருந்து விடுதலைப்புலிகளுக்கு இலங்கையை நோக்கி பொருட்களும் ஆயுதங்களும் கடத்தப்படுவதை இலகுவாக இந்தியக்கடற்படையினால் கண்காணித்து முறியடிக்க முடியும். (விடுதலைப்புலிகளின் கண்ணோட்டத்தில் இது இத்திட்டத்தின் பாதகமான விளைவாகும்)
  • இலங்கை, மாலைதீவு, மியான்மார் போன்ற நாடுகளில் சீனாவோ அல்லது இந்தியாவின் அரசியல் நலன்களுக்கு எதிரான சக்தியொன்றோ தன் கடற்படைச்செல்வாக்கை அதிகரிக்கும்போது இந்தியப் பெருங்கடலில் இந்தியா தனது நாட்டின் கடற்படைப் வலுவைக் காப்பாற்ற முடியும்.

திட்டத்திற்கு எதிரான கருத்துக்கள்

தொகு

சுற்றுச்சூழல் நிலைப்பட்ட காரணங்கள்

தொகு
  • சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிப் போதிய ஆய்வு நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு.
  • அரியவகை கடல்வாழ் உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம்.
    • மன்னார் வளைகுடா 10,500 சதுர கிலோமீட்டர் பரப்புக் கொண்டது. அது 3,600 வகையான கடற்செடிகொடிகள், உயிரினங்கள் மற்றும் 117 வகையான அரிய பவளப்பாறை வகையறாக்களை உள்ளடக்கியது.
    • இந்தியாவின் 2,200 வகையான மீன் இனங்களில் 450 வகையான மீன்கள் இங்கே மட்டுமே கிடைக்கக் கூடியதாகும்.
    • 5 வகையான கடலாமைகள் இவ்விடத்தில் மட்டுமே பார்க்கக் கூடியன. இத்திட்டம் செயல் படுத்தப்பட்டால் இவை தீவிர பாதிப்புக்கு ஆளாகும் என அஞ்சப்படுகிறது.
  • ஆழிப்பேரலைகள் உருவாகும் பட்சத்தில் தாக்கம் அதிமாக இருக்கக்கூடிய தீநேர்வு வாய்ப்புள்ளது (ஆபத்து).
  • மீனினங்கள் இடம் பெயரும் அபாயம்.
  • யாழ்ப்பாணத்தின், கால்வாய்க்கு அண்மையிலுள்ள நிலப்பகுகளில் நிலத்தடி நீர்வளமும் நிலக்கட்டுமானமும் குலையக்கூடிய தீநிகழ்தகவு உள்ளது (அபாயம்).
  • யாழ்ப்பாணத்தையும் இராமேசுவரத்தையும் அண்டியுள்ள சிறு தீவுகள் நீரில் மூழ்கக்கூடிய தீநேர்வு வாய்ப்பு (அபாயம்).

பொருளியல் நிலைப்பட்ட காரணங்கள்

தொகு
  • மீன்பிடிப்பு பகுதி குறையக்கூடும் என்ற மீனவர்களின் அச்சம்.
  • தோண்டப்படும் மணல் அப்புறப்படுத்தப்படுவது பற்றிய ஐயங்கள்.
  • ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்கள் பயன்படுத்த முடியாது என்பதால் பொருளியல் கோணத்தில் எதிர்பார்த்த பலன் கிட்டுமா என்ற ஐயம்.
  • இலங்கையின் கொழும்புத் துறைமுகம் பாதிக்கப்படும் என்பதால் இலங்கை அரசு பெரும் கவலை கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தால் பெரிய பொருளியல் நன்மைகள் எதுவும் விளையப்போவதில்லை என்றும், இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் செலவுகளோடு ஒப்பிடும் போது கிடைக்கும் நன்மைகளும் இலாபமும் மிகக் குறைவு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
  • கப்பல்கள் பயண நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தலாம் என்ற கருத்து மீதான வலுவான சந்தேகங்கள். (பனாமா, சூயஸ் போன்ற உலகின் ஏனைய கால்வாய்களின் அனுபவத்திலிருந்து)
    • கால்வாய் வழியாக குறைவான வேகத்திலேயே கப்பல்கள் செல்ல முடியும்.
    • கால்வாய்க்குள் நுழைவதற்கு கட்டணம் அறிவிக்கப்படும்.
    • கால்வாய் ஊடான பயணத்திற்கு வழியனுமதி பெற சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டி வரும்.
    • கால்வாய்க்குள் கப்பலை ஓட்டிச்செல்வதற்கு சிறப்புக் கால்வாய் மாலுமிகளை வாடகைக்கு அமர்த்த வேண்டும்.
    • மேற்கண்ட காரணங்களால் ஏற்படும் தாமதம் இலங்கையைச்சுற்றி வர எடுக்கும் தாமதத்தை அண்மிக்கின்றது.
  • இயற்கை வளங்கள் அப்படியே விட்டுவைக்கப்படும்பட்சத்தில் அது சாதாரண, அடித்தட்டு மக்களின் சொத்தாக இருக்கும். அதையே பெரு நிறுவனங்களின் தொழில்சார் தேவைகளுக்கான பெரிய திட்டங்களூடே அழிக்க முற்படும்போது மிகக்குறைந்த விழுக்காட்டினரான பணக்கார வர்க்கத்துக்கே முழுமையாகப் பயன்படும் என்கிற வாதம்.

இடம்சார் அரசியல் நிலைப்பட்ட காரணங்கள்

தொகு
  • பனாமா கால்வாய் வெட்டப்பட்டதன் பின்னான அமெரிக்க அரசியல் தலையீடுகள் போன்ற ஏகாதிபத்திய நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம்.
  • இந்தியாவின் அரசியல் நலன் என்று இத்திட்டத்தில் இனங்காணப்படுபவை அண்டை நாடான இலங்கையின் அரசியல் நலன்களுக்கு முரணாக இருத்தல்.
  • தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைக்கு சாதகமானதாக இத்திட்டம் அமைகிறதென்றும் பாதகமாக அமைகிறதென்றும் இருவேறுபட்ட எதிரெதிர் கருத்துக்கள்.
  • இந்திய இடம்சார் அரசியல், படைத்துறைச் செல்வாக்கினை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாக கருதப்படுவதால் இந்திய நலன்கள் தமக்கெதிரானவையாக இருக்கும் என்று அஞ்சுகின்ற ஏனைய பிரிவினருக்கும் நாடுகளுக்கும் இத்திட்டம் கெடுதியாக (பாதமாக) அமையக்கூடும்.

ஈழ-அரசியல் நிலைப்பட்ட காரணங்கள்

தொகு
  • தமிழர் தாயகப்பகுதிகளான மன்னார், யாழ்ப்பாணம், தீவுப்பகுதிகள் ஆகியவை இத்திட்டத்தின் ஆக்கப்பணிகளின்போதும் திட்டம் நிறைவுற்றபிறகும் மிகு தீவிர அரசியல், பாதுகாப்பு சார்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றுவிடும் என்பதால் இப்பகுதிகள் வலிமையான அரசியல் சக்திகளால் தமது சொந்தநலன்களுக்காகப் பயன்படுத்தப்படும் (தீநேர்வு) வாய்ப்பு உள்ளது. இதனால் இப்பகுதி மக்களது அரசியல் நலன்களும் அரசியல் போராட்டங்களும் முன்னெப்போதுமில்லாதவகையில் வலுவாக நசுக்கப்படவும் சுரண்டப்படவும் வாய்ப்புண்டு.
  • சேது சமுத்திரத்தால் ஒருவேளை தமிழர் தாயகப்பகுதிகளிலுள்ள துறைமுகங்கள் நன்மை பெறக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுமாயின் அத்துறைமுகம் சார்ந்த பகுதிகளில் சிங்களக்குடியேற்றங்களை அமைக்கும், உயர் பாதுகாப்பு வலயங்களை அமைக்கும் செயற்பாடுகளை சிறீலங்கா அரசு தொடங்கக்கூடிய தீவாய்ப்பு உள்ளது.

சமய நிலைப்பட்ட காரணங்கள்

தொகு
  • ஆதாம் பாலம்/இராமர் பாலம் என அழைக்கப்படும் மன்னாருக்கும் இராமேசுவரத்துக்கு இடைப்பட்ட மணல் திட்டுப் பகுதி, இராமாயணம் எனும் வட இந்திய இந்து சமய இதிகாசம் ஒன்றோடு சம்பந்தப்படுகிறது. இப்பகுதியில் காணப்படும் மணல் திட்டுக்கள் இராமர் கட்டிய பாலம் என வட இந்திய இந்துக்களால் நம்பப்படுகிறது. திட்டத்தில் இத்திட்டுக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தைக்கூறி வட இந்திய இந்து அமைப்புக்கள் திட்டத்தை எதிர்க்கின்றன.

செலவு

தொகு

சேது சமுத்திரம் திட்டத்தை, 2,427.40 கோடி ரூபாய் மதிப்பில், நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. 2009, ஜூலை, 27ம் தேதி வரை, 831.80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

உயர்மட்ட நிபுணர் குழு முடிவு

தொகு

ஆதாம் பாலம் அல்லது இராமர் பாலத்தில் காணப்படும் மணற்திட்டுகள் அன்றி சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது பொருளாதார ரீதியிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ரீதியிலும் பலன்தராது என உயர்மட்ட நிபுணர் குழு முடிவுதெரிவுத்துள்ளதாக இந்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.[1]

வெளி இணைப்புக்கள்

தொகு

சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிரானவை

தொகு

சேது சமுத்திரத்திட்டத்துக்கு ஆதரவானவை

தொகு

மேற்கோள்

தொகு
  1. http://www.bbc.co.uk/tamil/india/2012/07/120702_sethuexpertpanel.shtml