சொத்தேர் (திருத்தந்தை)
திருத்தந்தை புனித சொத்தேர் (Pope Soter) (இறப்பு: கிபி 174) கிபி இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். வரலாற்றில் இவர் 12ஆம் திருத்தந்தை ஆவார். இவரது ஆட்சிக்காலம் கிபி 162-168 அளவில் தொடங்கியது என்றும், 170-177 அளவில் நிறைவுற்றது என்றும் வத்திக்கானிலிருந்து வெளியாகும் "திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" (Annuario Pontificio) என்னும் நூல் கூறுகிறது.[1]
திருத்தந்தை புனித சொத்தேர் Pope Saint Soter | |
---|---|
12ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | 166 |
ஆட்சி முடிவு | 174 |
முன்னிருந்தவர் | அனிசேட்டஸ் |
பின்வந்தவர் | எலூத்தேரியுஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | தெரியவில்லை |
பிறப்பு | தெரியவில்லை; ஃபோந்தி, கம்பானியா, உரோமைப் பேரரசு |
இறப்பு | 174 (?) உரோமை, உரோமைப் பேரரசு |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | ஏப்ரல் 22 |
ஏற்கும் சபை | உரோமன் கத்தோலிக்கம் |
பிறப்பும் பெயரும்
தொகுஇவரது பெயர் மீட்பர், விடுதலை அளிப்பவர் எனப் பொருள்படும் "Σωτήρ" என்னும் கிரேக்க சொல்லிலிருந்து வந்தாலும், இவர் கிரேக்கர் அல்லர். ஒருவேளை இவர் கிரேக்க பின்னணியிலிருந்து வந்திருக்கலாம். இவர் இத்தாலி நாட்டில் கம்பானியா பகுதியில் ஃபோந்தி என்னும் நகரில் பிறந்தார்.[2]
- சொத்தேர் (பண்டைக் கிரேக்கம்: Σωτήρ; இலத்தீன்: Soter) என்னும் கிரேக்கப் பெயருக்கு "மீட்பர்", "இரட்சகர்", "காப்பவர்" என்பது பொருள்.
"இரக்கம் மிகுந்த திருத்தந்தை"
தொகுவரலாற்றில் சொத்தேர் "இரக்கம் மிகுந்த திருத்தந்தை" (Pope of Charity) என்று அறியப்படுகிறார். திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே சொத்தேர் உரோமைத் திருச்சபையிலிருந்து காணிக்கை பிரித்து அதை கிரேக்க நாட்டில் கொரிந்து திருச்சபைக்கு அனுப்பிவைத்தார். தேவையில் உழன்ற கொரிந்து திருச்சபைக்கு உதவி செய்த சொத்தேர் எழுதிய மடல் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் தாம் பெற்ற உதவிக்கு நன்றிகூறி கொரிந்து நகர் ஆயர் தியோனேசியுசு சொத்தேருக்கு எழுதிய நன்றி மடல் இன்றும் உள்ளது.
சீர்திருத்தங்கள்
தொகுஇவரே திருமணம் குருவால் ஆசிர்வதிக்கப்பட்டால் தான் முறையான திருவருட்சாதனம் ஆகும் என ஒழுங்கு அமைத்தார்.
இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஒவ்வொரு ஆண்டும் உரோமையில் கொண்டாடப்பட வேண்டும் சொத்தேர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.[3]
இறப்பும் அடக்கமும்
தொகுஇவரது விழாநாளும், கிபி 296இல் இறந்த திருத்தந்தை காயுஸின் விழாநாளும் ஏப்ரல் 22 ஆகும்.[4] புனிதர்களின் பெயர்ப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வழங்குகின்ற "உரோமை மறைச்சாட்சியர் நூல்" (Roman Martyrology) என்னும் ஏடு சொத்தேர் பற்றிக் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது: "உரோமையில் திருத்தந்தை புனித சொத்தேரின் விழா கொண்டாடப்படுகிறது. இவர் தம்மை நாடிவந்த நாடுகடத்தப்பட்ட ஏழைக் கிறித்தவர்களுக்குத் தாராளமாக உதவிசெய்தார்; சுரங்கங்களில் வேலை செய்ய அனுப்பப்பட்டவர்களுக்கு இரக்கம் காட்டினார் என்று கொரிந்து நகர் தியோனீசியுசு புகழ்ந்துள்ளார்".[4]
தொடக்க கால திருத்தந்தையர் அனைவரும் மறைச்சாட்சிகளாக இரத்தம் சிந்தி இறந்தார்கள் என மரபுச் செய்தி இருந்தாலும், "உரோமை மறைச்சாட்சியர் நூல்" சொத்தேருக்கு மறைச்சாட்சி என்னும் அடைமொழி கொடுக்கவில்லை.[4]
திருத்தந்தையர் சொத்தேரும் காயுசும் மறைச்சாட்சிகளாக இரத்தம் சிந்தி இறந்தார்கள் என்பதற்கு அடிப்படை இல்லை என்று கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி (1969 திருத்தம்) கூறுகின்றது.[5]
கல்லறை
தொகுசொத்தேர் இறந்ததும் புனித கலிஸ்து கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். மற்றொரு மரபுப்படி, அவர் புனித பேதுருவின் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டார். பின்னர், திருத்தந்தை இரண்டாம் செர்ஜியுஸ் காலத்தில் சொத்தேரின் உடல் புனிதர்கள் சில்வெஸ்தர் மற்றும் மார்ட்டின் என்பவர்களின் கோவிலில் புதைக்கப்பட்டது.
இன்னொரு மரபுப்படி, அவரது உடலின் ஒரு பகுதி எசுப்பானியா நாட்டில் தொலேதோ நகர் பெருங்கோவிலில் பாதுகாக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Annuario Pontificio 2008 (Libreria Editrice Vaticana, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-209-8021-4), p. 8*
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-10-09. பார்க்கப்பட்ட நாள் 2011-05-23.
- ↑ http://saints.sqpn.com/pope-saint-soter/
- ↑ 4.0 4.1 4.2 Martyrologium Romanum (Libreria Editrice Vaticana 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-209-7210-7)
- ↑ Calendarium Romanum (Editrice Vaticana 1969), p. 120