சொர்ணமசூரி (நெல்)

சொர்ணமசூரி திருச்சி மாவட்டத்தை மையமாகக்கொண்டு பயிரிடப்படும் பாரம்பரிய நெல் இரகமான இது, பொன்னிறம் கொண்ட நெல் என்பதால், சொர்ணமசூரி என்றழைக்கப்படுகிறது. (சொர்ணம் என்றால் தங்கம்) தங்கம் போல மிளிரக்கூடிய இந்த வகை நெல், 120 - 130 நாட்களில்[1] அறுவடைச் செய்யக்கூடிய சன்ன இரகமாகும். தற்பொழுது தமிழகத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் இந்த நெல் இரகம், திருந்திய நெல் சாகுபடி முறைக்கு ஏற்றதாகும். ஏக்கருக்கு சுமார் இருபத்தி எட்டு மூட்டை (75 கிலோ மூட்டையில்) வரையில் மகசூல் கிடைக்கக்கூடிய இவ்வகை நெல், வெள்ளை நிற அரிசி உடையதாகும்.[2]

சொர்ணமசூரி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
120 - 130 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 1200 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

எளிய பராமரிப்பு தொகு

ஆற்றுப் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனப் பகுதிகளுக்கு ஏற்ற இரகமான இது, நேரடி விதைப்புக்கும், நடவுக்கும் ஏற்றது. இயற்கைப் பேரிடர்களுக்கு ஓரளவு தாக்குப்பிடிக்கக் கூடிய இந்நெல் இரகம் இரசாயன உரங்கள் தேவையின்றி, செழித்து வளரக்கூடியது.இப் பயிரில் அதிக சொரசொரப்புத் (சொனை) தன்மை இயற்கையாகவே அமைந்திருப்பதால், பூச்சி தாக்குதல் இருப்பதில்லை.[3]

பயன்கள் தொகு

இந்த நெல் இரகம் சன்னமாகவும் (மெலிந்து), இதன் அரிசியில் வடித்த சாதம் வெண்மை நிறத்திலும், மற்றும் சுவையாகவும் இருப்பதால், பாரம்பரிய நெல் வகையில் சீரகச் சம்பாவுக்கு அடுத்தப்படியாக பிரியாணி தயாரிப்புக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதனுடைய பழைய சாதமும், நீராகாரமும் மிகுந்த சுவையாகவும், மூன்று நாட்களானாலும் கெட்டுப்போகாமல் இருக்கக்கூடியது.[3]

மருத்துவ குணம் தொகு

அதீதமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட இந்த நெல் அரிசிக் கஞ்சியில், பித்தம், வாயு போன்ற உபாதைகளுக்கு தீர்வு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த அரிசியைத் தொடர்ந்து உணவாக உட்கொள்வதன் மூலம், பெரும்பாலான நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் எனவும் கருதப்படுகிறது. இப்படி உணவு, உணவு சார்ந்த பலகாரம் மட்டுமல்லாமல் மாமருந்தாக இருப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் இந்த அரிசி தருவதாக உள்ளது.[3]

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. ஜிᾤஜிᾤக்கும் ெசார்ண மசூாி
  2. "நாட்டு ரக நெல் வகைகள்". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (தமிழ்) - 2015. பார்க்கப்பட்ட நாள் 2017-01-09.
  3. 3.0 3.1 3.2 "நம் நெல் அறிவோம்: தங்கமாக ஜொலிக்கும் சொர்ணமசூரி". தி இந்து (தமிழ்) - ஆகத்து 22 2015. பார்க்கப்பட்ட நாள் 2017-01-09.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொர்ணமசூரி_(நெல்)&oldid=3722500" இலிருந்து மீள்விக்கப்பட்டது