சோழவாண்டிபுரம் ஆண்டிமலை சமணர் குகைத்தளம்

சோழவாண்டிபுரம் ஆண்டிமலை சமணர் குகைத்தளம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள சோழவாண்டிபுரம் கிராமத்தின் அருகே ஆண்டிமலைக் குன்றில் அமைந்துள்ள ஒரு சமண சமய நினைச் சின்னமும் புனித யாத்திரைத் தலமுமாகும். ஊருக்கு வடகிழக்கே ஆண்டிமலை பெருங்குன்று அமைந்துள்ளது. முனிவர்கள் வசித்த குகைகள், கற்படுக்கைகள், கல்வெட்டுகள் மற்றும் சமண தீர்த்தங்கர்களின் புடைப்புச் சிற்பங்களுடன், கி.பி. 9 ம் நூற்றாண்டிலிருந்து இக்குன்று சமண சமய மையமாகத் திகழ்ந்துள்ளது. அக்காலத்தில் இவ்வூரில் சமணர்கள் மிகுதியாக வாழ்ந்துள்ளார்கள்.[1]

அமைவிடம்

தொகு
 
சோழவாண்டியபுரம் ஆண்டிமலைக் குன்று காட்சி 1
 
சோழவாண்டியபுரம் ஆண்டிமலைக் குன்று கட்சி 2

சோழபாண்டியபுரம் அல்லது சோழவாண்டிபுரம் அல்லது சோழபாண்டிபுரம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இக்கிராமத்தின் மக்கள் தொகை, 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,000 ஆகும். இவ்வூர் திருக்கோயிலூரில் இருந்து தென்மேற்கே 12 கி.மீ (7.5 மைல்) தொலைவிலும், உளுந்தூர்பேட்டைக்கு வடமேற்கே 16 கி.மீ. (9.9 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. திருக்கோயிலூரிலிருந்து ரிசிவந்தியம் செல்லும் நகரப்பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்கின்றன. திருக்கோயிலூரிலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் பேருந்தில் பயணம் செய்து, அரியூர் கூட்டு சாலையில் இறங்கிக்கொள்ளலாம். இங்கிருந்து வாடகை ஆட்டோ மூலம் சோழவாண்டிபுரம் செல்லலாம்.

ஆண்டிமலைக் குன்று

தொகு

ஆண்டிமலைக் குன்று பாறைகளால் ஆன சிறிய குன்று. இந்தச் சமணத் தளம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரின் பராமரிப்பில் உள்ளது. [2] விசமிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக, இந்த நினைவுச் சின்னம், தொல்லியல் துறை விதிகளின்படி பாதுகாக்கப்பட்ட தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினரின் தகவல் பலகையில் இந்த சமணத் தலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமண சமய தெய்வங்களின் வழிபாட்டிற்காக சித்தவடவன் என்னும் சேதிராயன் பனைப்பாடி [3] என்ற கிராமத்தைப் பள்ளிச்சந்தமாக அளித்த செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
தமிழக அரசின் தொல்லியல் துறை பலகை

குகைத்தளத்தில் தீர்த்தங்கரர் மற்றும் இயக்கி சிற்பங்கள்

தொகு

இக்குன்றில், ஒன்றின் மேல் ஒன்றாகச் சாய்ந்த நிலையில் இரு பாறைகள் காணப்படுகின்றன. இப்பாறைகளின் கீழே முக்கோண வடிவில் குகை போன்ற அமைப்பு காணப்படுகிறது. எதிர் எதிரே அமைந்துள்ள இரண்டு பாறை முகப்புகளின் கோட்டங்களில், 23 ஆம் தீர்த்தங்கரான பார்சுவநாதர் (இடப்புறம்), மற்றும் பாகுபலி என்னும் கோமதேசுவரர் (வலப்புறம்) ஆகியோரின் உருவங்கள் நின்ற கோலத்தில், புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பார்சுவநாதரின் தலைக்குமேல் படமெடுத்தாடும் ஐந்துதலை நாகம் காட்டப்பட்டுள்ளது. குகையின் பின்புறச் சுவரையொட்டி ஒரு கற்பலகையில் பத்மாவதியின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவர் 23 ஆம் தீர்த்தங்கரான பார்சுவநாதரின் இயக்கி (யட்சி) ஆவார். இவர் சமணர்கள் வணங்கும் பெண்தெய்வமும் ஆவார். பத்மாவதியின் இருபுறமும் இரண்டு குழந்தைகள் காணப்படுகின்றனர். [4]

 
கோமதீஸ்வரர் புடைப்பு சிற்பம்

வழிபாட்டில் பத்மாவதி இயக்கி சிற்பம்

தொகு

தற்போது இந்தச் சிற்பத்தை இடமாற்றி நிறுவியுள்ளனர். உள்ளூர் மக்கள் இச்சிலையை காளியம்மன் என்ற பெயரில் வணங்கி வருகின்றனர். பெரும்பாலான சமயங்களில் பத்மாவதி சந்தனக் காப்புடன் காட்சி தருகிறார்.

ஆதிநாதர் மற்றும் ஆதிபகவன் சிற்பங்கள்

தொகு

குகைக்கு வெளியே இரண்டு தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் பீடங்களில் நிறுவப்பட்டுள்ளன இந்தச் சிற்பங்களின் பீடத்தில் ஆதிநாதர் என்றும் ஆதிபகவன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை அண்மைக்காலத்தில் நிறுவப்பட்ட சிற்பங்களாகும்.

மகாவீரர் சிற்பம்

தொகு
 
மகாவீரர்

குன்றின் உச்சியில் உள்ள ஒரு பாறையில் சமண சமயத்தின் 24 ஆம் தீர்த்தங்கரரான மகாவீரரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. முக்குடை காட்டப்பட்டுள்ளது. மகாவீரரின் இருபுறமும் இரு சாமரம் வீசுவோர்களின் உருவங்கள் காட்டப்பட்டுள்ளன.

கற்படுக்கைகள்

தொகு
 
சமண முனிவர்களின் கற்படுக்கைகள்

குன்றின் உச்சியில் உள்ள பாறைகளில் 25 கற்படுக்கைகளை, சமண சமயக் கொடையாளர்கள், சமண முனிவர்களுக்காக, செதுக்கி வழங்கியுள்ளனர். இவை ஆறு தொகுதிகளாக, ஆறு இடங்களில் செதுக்கப்பட்டுள்ளன. சில கற்படுக்கைகள் முற்றுப்பெறாமல் காணப்படுகின்றன. கல் இருக்கை ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு சமண முனிவர்கள் கூடி உரையாடியிருக்கலாம். குன்றின் வடபுறத்தில், படுக்கைகளுக்கு மேலே தெளிவற்ற ஓவியங்கள் காணப்படுகின்றன.

கல்வெட்டுகள்

தொகு

முதல் கல்வெட்டு

தொகு

குகையையொட்டி இடப்புறம் அமைந்துள்ள பாறையில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுப் பாடம் இது:

 “1 ஸ்வத்தி [|* ] ஸ்ரீவேலி
  2 கொங்கரையர்
  3 புத்தடிகள் 
  4 செய்வித்த தேவாரம்" [ ||* ][5][6]

விளக்கம்: வேலி கொங்கரையர் புத்தடிகள் அமைத்தளித்த கோவில் (தேவாரம்) இதுவாகும். இங்குள்ள பார்சுவநாதர் மற்றும் கோமதேசுவரர் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்களை வடித்தளித்தவரும் இவரே ஆவார். புத்தடிகள் ஒரு சமண அடியவராக இருக்கலாம். இக்கல்வெட்டில் தேதி குறிப்பிடப்படவில்லை. எனினும் கல்வெட்டின் எழுத்தமைதி (Paleography) அடிப்படையில் இக்கல்வெட்டு 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. [5] மேலே குறிப்பிடப்பட்ட சிற்பங்கள் 8 – 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட கலைப்பாணியைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

இரண்டாம் கல்வெட்டு

தொகு

மிக நீண்ட பாடல் வரிகளுடன் பொறிக்கப்பட்டுள்ள மற்றொரு கல்வெட்டு கண்டராத்த சோழனின் இரண்டாம் ஆட்சியாண்டைச் (கி.பி. 952 ஆம் ஆண்டைச்) சேர்ந்தது. சேதிநாட்டில் ஆட்சி செலுத்தி வந்த சித்தவடவன் என்னும் சேதிராயன் என்ற மலையமான் குடியில் பிறந்த குறுநிலமன்னன் (Chieftain), இங்குள்ள பிண்டிக் கடவுள் (அருகக்கடவுள்), மாதவர் ஆகிய சமண சமய தெய்வங்களின் வழிபாட்டிற்காக பனைப்பாடி [3] என்ற கிராமத்தைப் பள்ளிச்சந்தமாக (சமணர்களுக்கு அளிக்கப்படும் நிலக்கொடை) அளித்த செய்தியினைப் பதிவு செய்துள்ளது.

கலசநீர் பெய்து, நிலக்கொடையாக அளிக்கப்பட்ட பனைப்பாடியை குறண்டி குணவீரபடாரரும் அவர் வழிமாணாக்கரும் (“குறண்டிக் கோமான் குணவீர படரான்”) மேற்பார்வையிட்ட செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. (Annual Report on Epigraphy (ARE 1936-37; 252) [6]

               குறுக்கை	கூற்றத்துப்
 பெய்வளங் குன்றாப்	பெரும்பாகனூர் வழி
 பார்கெழு தொல்சீர்ப் பனைப்பாடி தன்னைக்
 கண்கெழு பிண்டிக் கடவுள ராமருஞ்
 சீர்கெழு தன்மைத் திருப்பள்ளி மாமலைக்
 காகச் செய்த தானம்..  .....	
 ....  ....   ....  ....   ....
 ..  வண்கை மணித்தல் நிறையக்
 கலசத் தெண்ணீர் பலரறி மாவறப்
 பெய்து குடுத்துப் பெருஞ்சிறப் பருளி
 (Annual Report on Epigraphy (ARE 1936-37; 252)

சேதிராயன் சித்தவடவன்

தொகு

சோழர்களின் கிளைக்குடிகளும் குறுநில மன்னர்களுமான மலையமான் குல மரபினர் திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் நாட்டை ஆண்டு வந்துள்ளனர். மலையமானாடு மிலாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. கிளியூரும் மலையமான்களின் தலைநகராக இருந்துள்ளது. கிளியூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான்கள் ஆண்டு வந்த நாட்டிற்கு சேதி நாடு என்று பெயர். [7] அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார் மலையமான்களின் வழித்தோன்றல் ஆவார். [8] சேதிநாட்டை ஆண்டுவந்த மலையமான்கள் சேதிராயர்,கொங்கரையர்,முனையரையர்,மழவரையர் போன்ற குடிப் பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர்.

இக்கல்வெட்டில் பள்ளிச்சந்தம் வழங்கிய சித்தவடவன், சமண தெய்வங்களுக்கு கோவில் (தேவாரம்) அமைத்த வேலி கொங்கரையர் புத்தடிகள், சேதிநாட்டு அரசன், மலைய குலோத்பவன், பாரி குடும்பத்தில் பெண்ணெடுத்த மலையமான் மரபில் உதித்தவன் ஆகிய யாவரும் ஒருவரே என்று மயிலை சீனி வேங்கடசாமி தன்னுடைய சமணமும் தமிழும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவன், இராட்டிரகூட மன்னன் கன்னரதேவனின் ஆளுகைக்கு உட்பட்டு, சேதிநாட்டை ஆண்டுவந்த சித்தவடவன் சேதிராயன் ஆவான்.[9] இவனை "மிலாடுடைய நாட்டான் சித்தவடவன்" என்று கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன.

 "பாரிமகளிரின் பைந்தொடி முன்கை 
  பிடித்தோர் வழி வரு குரிசி லடற்படை
  வலுவி(ல்) லோரி(யெ) மதவலி தொலையச்
  செல்பரி மிகுந்த சித்த வடவன்"

கபிலர் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் மலையமான் திருமுடிக்காரியின் மைந்தர்களுக்கு மணமுடித்து வைத்தார்[10] சித்தவடவன் மலையமான் திருமுடிக்காரியின் வழித்தோன்றல் என்று கூறிக்கொள்ளும் கல்வெட்டு வரிகள் இவை.

இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் பனைப்பாடி கிராமம், விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், திருக்கோயிலூரிலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு, சோழவாண்டிபுரத்தைக் கடந்து செல்லவேண்டும். இவ்வூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள குன்றின் முகப்பில் தியான நிலையில் அமர்ந்துள்ள மகாவீரர் சிற்பம் ஒன்றை கல்வெட்டாய்வாளர் (தற்போது துணை இயக்குனர், த.நா.அ.தொல்லியல் துறை) ஆர்.சிவானந்தம் கண்டறிந்துள்ளார்.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ஆண்டிமலை Ahimsaiyatrai
  2. Jain site with Bahubali image deemed protected Yogesh Kabirdoss The Times of India: August 30, 2017
  3. 3.0 3.1 Panappadi Onefivenine
  4. Epigraphia Indica vol. 29. Two Jaina Inscription s in Tamil
  5. 5.0 5.1 Epigraphia Indica vol. 29, pp.199
  6. 6.0 6.1 பனைப்பாடி சோழர்கால மகாவீரர் சிற்பம் இரா.சிவானந்தம். கல்வெட்டு இதழ் 75. பக். 51-52
  7. சேதிராயர் நாயன்மார்கள் வரலாறு ஒன்பதாம் திருமுறை
  8. மெய்ப்பொருள் நாயனார் தினமலர் பிப்ரவரி 07,2011
  9. சமணத் திருப்பதிகள். In சமணமும் தமிழும் மயிலை சீனி. வேங்கடசாமி. திருநெல்வேலி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடட். 1959. பக். 123-124
  10. பொய்யாமொழிப் புலவர் தினமணி ஜூலை 19, 2015

வெளி இணைப்புகள்

தொகு