ஜோன் ரூட் (Joan Root 18 ஜனவரி 1936 - 13 ஜனவரி 2006) ஒரு கென்ய சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.[1] அவரின் கணவர் ஆலன் ரூட்டுடன் இணைந்து தொடர்ச்சியாக பாராட்டைப் பெற்ற காட்டுயிர் ஆவணப்படங்களை எடுத்துள்ளார். இந்த இணையர் 1981 இல் விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆலன் ரூட் நைரோபியில் குடியேறினார்.

துவக்கக்கால வாழ்க்கை தொகு

1936 ஆம் ஆண்டு சனவரி 19 அன்று கென்யத் தலைநகர் நைரோபியில் பிறந்தார் ஜான் தோர்ப். அவருடைய தந்தை எட்மண்ட் தோர்ப் இங்கிலாந்தில் வங்கியில் பணியாற்றியவர். 1920-களில் கென்யாவுக்கு குடிபெயர்ந்த அவர் ஒரு வெற்றிகரமான காபி தோட்டக்காரராக இருந்தார்.[2] மேலும் அங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒளிப்பட சஃபாரிகளை ஏற்பாடு செய்யும் கென்யா த்ரு தி லென்ஸ் எனும் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அந்தச் சமயத்தில்தான் ஜோன் பிறந்தார்.

தொழில் தொகு

பள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்த ஜோன், தன் தந்தையுடன் சேர்ந்து ஒளிப்பட சஃபாரிக்களை நடத்திவந்தார். சுற்றுலாப் பயணிகளை விமான நிலையத்திலிருந்து கூட்டி வருவது தொடங்கி, அவர்களுக்கான தங்கும் வசதி, வனத்துறை அதிகாரிகளிடம் பெற வேண்டிய அனுமதி ஆகியவற்றைப் பெற்றுத்தருவது போன்ற பணிகளைச் செய்தார் மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கூட்டிச் செல்லும் ஒவ்வொரு இடத்தைப் பற்றியும், அந்த இடத்தில் இருக்கும் காட்டுயிர்கள் பற்றியும் பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார்.

திருமணத்துக்குப் பிறகு, காட்டுயிர் ஆவணப்படஙகளை உருவாக்குவதில் தன் கணவர் ஆலன் ரூட்டுக்குத் துணையாக நின்றார் ஜோன் ரூட் பவோபாப்,போர்ட்ரைட் ஆஃப் எ ட்ரீ, தி இயர் ஆஃப் தி வொயில்ட்பீஸ்ட்ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மிஸ் டீரியஸ் கேஸல் ஆஃப் க்ளே உள்ளிட்ட பல ஆவணப்படங்களை உருவாக்கினர் ரூட் தம்பதியினர். பெரும்பாலான சமயங்களில் ஜோன் ரூட் தயாரிப்பாளராக இருந்து மேற்கண்ட படங்களை உருவாக்கினார். கிளிமஞ்சாரோ மலைச் சிகரத்தின் மீது முதன்முதலாக பலூனிம் பறந்து சாதனை படைத்தனர் இந்தத் தம்பதியர். சிங்கங்கள், பாம்புகள், நீர்யானைகள் ஆகியவற்றுடன் ஆபத்தான காட்சிகள் பலவற்றில் நடிக்கவும் செய்தார் ஜோன் ரூட். ஆலன் ரூட்டுடனான 28 ஆண்டு மண வாழ்க்கை அவர்களின் விவாகரத்தால் முடிவுக்கு வந்தது.

கொலை தொகு

தனது விவாகரத்துக்குப்பின் ஜோன், கென்யாவின் முக்கிய ஏரியான நைவாசா ஏரிக்குப் பக்கத்தில் தங்கித் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார். இந்த ஏரி கென்யாவின் மிக முக்கியமான ஏரி ஆகும். இந்த ஏரி தூய்மையான நீரை உடையது. ஏரிக்கரையின் இரண்டு பக்கமும் இயற்கை செழித்திருந்தது, அந்த ஏரியில் மீன்களும், அந்த மீன்களை நம்பிப் பறவைகளும், ஏரிக்கரையின் பசுமையை நம்பிப் பலவிதமான காட்டுயிர்களும் நிறைந்திருந்தன.

இந்த ஏரியை நம்பி, வெளிநாட்டவர்கள் சிலரால் மலர் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. அதில் நிறைய லாபம் வந்தது. இதனால் காபி தோட்டத்தை அழித்துக்கூடப் பலர் மலர் விவசாயத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, கென்ய ரோஜாக்களூக்கு சர்வதேசச் சந்தையில் பெரும் மதிப்பு இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் உலக அளவிலான மலர் ஏற்று மதியில் ஆறாவது இடத்தைப் பிடித்தது கென்யா. இந்த மலர் விவசாயத்தால், நைவாசா ஏரி மாசடைந்தது. மலர் விவசாயம் செய்யும் நிறுவனங்கள் வெளியேற்றும் இரசாயனக் கழிவுகளுடன், மலர் விவசாயம் தரும் வேலைவாய்ப்பை நம்பிப் பல்லாயிரக்கணக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்குச் சரியான கழிவுநீர் வடிகால் வசதி செய்து தராததால் மனிதக் கழிவுகளும் ஏரியில் கலந்தன. மேலும், வனத்துறை அனுமதித்த அளவை மீறி மீன் பிடித்தலும் நடைபெற்று வந்தது. இந்தக் காரணங்களால் அந்த ஏரியில் மீன்களில் அளவு வெகுவாகக் குறைந்தது.ஏரி, பாலைவனமாகிவிடும் சூழல் நிலவியது.

இதை எதிர்த்து ஜோன் போராடினார். ஏரியைக் காப்பாற்ற, முன்னாள் கள்ளவேட்டைக்காரர்களையே ஏரியின் காவலர்களாக நியமித்து ‘ஏரிப் பாதுகாப்புக் குழு’ ஒன்றை உருவாக்கினார். சுமார் 15 பேர் அடங்கிய அந்தக் குழுவுக்குத் தேவையான படகுகள், தொடர்புக் கருவிகள், சம்பளம், தங்கும் வசதி என அனைத்துச் செலவுகளையும் ஜோன் ஏற்றுக்கொண்டார். இதனால ஏரியில் சட்டத்துக்குப் புறம்பாக மீன் பிடிப்பது குறைந்தது. இது கள்ளவேட்டைக்காரர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது. அவர்களின் ஆத்திரத்தை ஜோன் சம்பாதித்தார் 2006-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி கள்ளவேட்டைக்காரர்களால் தன் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார் ஜோன் ரூட்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. ""Wild life and brutal death"". Archived from the original on 2007-10-01. பார்க்கப்பட்ட நாள் 2017-09-02.
  2. Australian Women on Line website, 2009 book review
  3. ந.வினோத்குமார் (25 சூன் 2017). "ஏரிக்காகப் போராடிய காட்டுப்பூ!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 3 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_ரூட்&oldid=3578364" இலிருந்து மீள்விக்கப்பட்டது