டு கில் எ மாக்கிங் பேர்ட்

டு கில் எ மாக்கிங் பேர்ட் (To Kill a Mockingbird) 1960ல் அமெரிக்காவில் வெளிவந்த ஒரு ஆங்கிலப் புனைவுப் புதினம். இதன் ஆசிரியர் ஆர்ப்பர் லீ, ஒரு அமெரிக்கப் பெண். இப்புதினம் நவீன அமெரிக்க இலக்கியத்தில் ஒரு செவ்வியல் படைப்பு. மிகவும் பிரபலமடைந்த இப்புதினம் புலிட்சர் பரிசு பெற்றது. இக்கதை 1962ல் ஆங்கிலத்தில் திரைப்படமாக்கப்பட்டு ஆஸ்கார் விருதும் பெற்றது.

டு கில் எ மாக்கிங் பேர்ட்
முதல் பதிப்பு அட்டை
நூலாசிரியர்ஆர்ப்பர் லீ (Harper Lee)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வெளியீட்டாளர்ஜெ. பி. லிப்பின்காட் அன்கோ
வெளியிடப்பட்ட நாள்
ஜூலை 11, 1960
ஊடக வகைஅச்சு (கடின அட்டை மற்றும் மெலிதான அட்டை)
பக்கங்கள்296 (முதல் பதிப்பு, கடின அட்டை)

ஆசிரியர் குறிப்பு

தொகு

ஆர்ப்பர் லீ 1926ல் அமெரிக்காவில் அலபாமா மாநிலத்திலுள்ள மன்ரோவில் என்ற ஊரில் பிறந்தார். 1944 – 45ல் ஹண்டிங்டன் கல்லூரியில் (மாண்ட்கமெரி) படித்தார். 1945 முதல் 1949 வரை அலபாமா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். படிக்கும் காலத்திலேயே கல்லூரி இதழ்களில் எழுதினார். அந்தக் காலத்தில் அதிகம் பேசப்படாத இனவெறியின் அநீதி குறித்துக் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். 1950 ல் நியூயார்க் நகருக்கு இடம் பெயர்ந்து அங்கு பிரித்தானிய வெளிநாட்டு விமானச் சேவை நிறுவனத்தில் முன்பதிவு எழுத்தராகப் பணிபுரிந்தார். அவரது இளவயது நண்பரான ட்ரூமன் கப்போட்டியின் ஆலோசனையின்பேரில் மன்ரோவில் பற்றிய கட்டுரைகளும் கதைகளும் எழுதி அவற்றைப் பிரசுரிப்பதற்கு இலக்கிய முகவர்களை நாடினார். ஜே. பி. லிப்பின்காட் என்ற முகவர் இவரைப் பணியிருந்து விலகி முழுநேர எழுத்தாளராகி எழுதும்படி யோசனை கூறினார். அதன்படி விமானப்பணியினை விட்டுவிட்டு நண்பர்களின் ஆதரவுடன் ஒரு வருடகாலம் தொடர்ந்து எழுதினார். டு கில் எ மாக்கிங் பெர்ட் என்ற இந்த புத்தகத்தை எழுதி முடிக்க அவருக்கு இரண்டரை ஆண்டுகள் ஆனது. ஜூலை 11, 1960ல் இப்புதினம் வெளியானது. ஆர்ப்பர் லீ எழுதி வெளியான புதினம் இது ஒன்று மட்டும்தான். இவர் தன்னையோ தனது புத்தகத்தையோ 1964க்குப் பிறகு அதிகமாக விளம்பரப்படுத்தவில்லை.

கதைச் சுருக்கம்

தொகு

இக்கதையின் கருத்தும் கதாபாத்திரங்களும் ஆர்ப்பர் லீ சிறுவயதில் (1936) வாழ்ந்த ஊரில் வசித்த மனிதர்களையும் அங்கு நடந்த நிகழ்வுகளையும் களமாகக் கொண்டுள்ளது. அட்டிகஸ் ஃபின்ச் அலபாமாவிலுள்ள மேகோம்ப் (கற்பனை) ஊரில் வசிக்கும் ஒரு வழக்கறிஞர். மனைவி இறந்துபோனதால் தனது மகன் ஜெம் மற்றும் மகள் ஸ்கெளட்டுடனும் வாழ்ந்து வருகிறார். கதை முழுவதும் 6 வயது சிறுமியான ஸ்கெளட் (scout) தனது அனுபவங்களைக் கூறுவதாக அமைந்துள்ளது. அவளது தந்தையின் அன்பும் அரவணைப்பும், அண்ணன் மற்றும் பக்கத்து வீட்டுக்கு கோடை விடுமுறைக்கு வரும் நண்பனோடு விளையாடிய விளையாட்டுக்கள், பள்ளியில் அவளுக்குக் கிடைத்த அனுபவங்கள், அக்கம் பக்கத்தில் இருப்போரின் குணாதிசயங்கள் என பலவிதமான அனுபவங்களைக் கதை விவரிக்கிறது. ஒரு சமயம் அவளது தந்தை ஒரு நீக்ரோவின் சார்பில் வாதாட நேர்ந்ததும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களும் கதையினை வளர்க்கிறது. சமுதாயக் கருத்துக்கள் கதையோட்டத்தில் கலக்கப் பட்டுள்ளன. இக்கதையில் அக்காலத்தில் இனப்பாகுபாட்டினால் நடந்த கொடுமைகளைப் பற்றி எழுதப்பட்டாலும் கதை சொல்லும் முறையில் நகைச்சுவை இழையோடுகிறது. ஸ்கெளட்டின் தந்தை கதாபாத்திரம் (அட்டிகஸ் ஃபின்ச்) வாசகர்கள் நமக்கும் இப்படி ஒரு தந்தை இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்கத் தூண்டும்வண்ணம் உருவாக்கப் பட்டுள்ளது.

கதைப்பாணியும் விமர்சனமும்

தொகு
 
மாக்கிங்பேர்ட் பறவை; அப்பாவித்தனத்தைக் குறிக்க லீ இதனை பயன்படுத்த்தியுள்ளார்

டு கில் எ மாக்கிங் பேர்ட் தெற்கத்திய காதிக் (southern gothic), மற்றும் பில்டங்ஸ்ரோமன் (bildungsroman) புனைவுப்பாணிப் பிரிவுகளைச் சேர்ந்தது. இனவெறியின் அநீதிகளும் வெகுளித்தனத்தின் முடிவும் இக்கதையின் முக்கியக் கருப்பொருட்கள். ஆங்கிலம் பேசும் பல நாடுகளில் சகிப்புத்தன்மை மற்றும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பண்புகளைக் குழந்தைகளிடம் வளர்க்கும் விதமாக இந்தக் கதை பாடமாகச் சொல்லித்தரப் பட்டது. ஆனால் இனவெறி பற்றிக் குறிப்பிடும் இடங்களில் பயன்படுத்தப்பட்ட அடைமொழிகளைக் காரணம் காட்டி இப்புத்தகம் பள்ளிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பும் எழுந்தது. கறுப்பினக் கதாபாத்திரங்கள் முழுமையாக சித்தரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் சிலர் முன் வைக்கின்றனர். வெள்ளையின மக்கள் இப்புதினத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டாலும் கறுப்பின மக்களிடம் இருவிதமான கருத்துக்கள்தான் உள்ளன.

30க்கும் மேற்பட்ட செய்தித்தாள்களும் பத்திரிக்கைகளும் இப்புத்தகத்தை மதிப்பாய்வு செய்து வேறுபட்ட விமர்சனங்களைத் தந்துள்ளன. சமீபத்தில் பிரித்தானிய நூலகத்தினர் விவிலியத்திற்கும் மேல் ஒருபடி உயர்த்தி ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் இறப்பதற்கு முன் ஒரு முறையாவது இதனைப் படித்திருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர்.

தாக்கம்

தொகு
 
2007ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கத்தை லீக்கு வழங்குகிறார் ஜார்ஜ் புஷ்

டு கில் எ மாக்கிங் பேர்ட், புத்தகம் ஆர்ப்பர் லீக்கு இலக்கிய வட்டத்தில் மட்டுமல்லாது மன்ரோவில்லிலும் அலபாமா முழுவதிலும் பெருமை தேடித் தந்தது. வெளியாகி ஒரே வருடத்தில் 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இதுவரை 30 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகி உள்ளது. தொடர்ந்து அச்சேறிக் கொண்டிருக்கிறது. மொத்தம் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இலக்கிய உலகில் இப்புதினம் ஒரு பெரிய அலையையே ஏற்படுத்தியுள்ளது. இக்கதை 1962ல் திரைப்படமாக்கப்பட்டு ஆஸ்கார் விருதும் பெற்றது. 1990லிருந்து ஆர்ப்பர் லீ பிறந்த ஊரான மன்ரோவில்லில் இக்கதை ஒவ்வொரு ஆண்டும் நாடகமாக நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு