தஞ்சை சரசுவதிமகால் நூலகம்

தஞ்சை சரசுவதிமகால் நூலகம் என்பது இந்திய ஒன்றியம் தமிழ்நாட்டின், தஞ்சாவூரின், தஞ்சை அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள ஒரு நூலகம் ஆகும். இது உலகில் உள்ள தொன்னூலகங்களில் ஒன்றாக சிறப்பாகக் கருதப்படுகின்றது.

தஞ்சை சரசுவதிமகால் நூலக நுழைவுவாயில்

தோற்றம் தொகு

 • சுமார் 617 ஆண்டுகளுக்கு முன்னர் (பொ.ஊ. 1400 களிலே) இருந்த சோழர்கள் காலத்தில் தோன்றி[1], அவர்கள் பணியால் வளர்ச்சி யடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாகத் திகழ்கின்றது.
 • கல்வெட்டில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி (ARE 168, 169, 1961-62) இந்நூலகம் முதலில் சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம் எனவும் இந்நூலகத்தில் பணி புரிந்தவர்கள் சரசுவதி பண்டாரிகள் எனவும் வழங்கப்பட்டனர். பொ.ஊ. 1122 முதலே இருந்ததற்கான அடிக்கோள்கள் உள்ளன.

சிறப்புகள் தொகு

 • இங்குத் தமிழ், தெலுங்கு, சமற்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன் (இடாய்ச்சு), இலத்தீன், கிரேக்கம் முதலிய பலமொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப்பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் உள்ளன.
 • வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், மதம், தத்துவம் முதலிய பலகலைகளில் சிறந்த நூல்கள் உள்ளன.
 • 16, 17 நூற்றாண்டுகளில் தஞ்சையை ஆண்ட நாயக்க அரசர்கள் சமற்கிருதம், தெலுங்கு, தமிழ் நூல்களைப் கொண்டு வந்து சேர்த்தனர்.
 • தஞ்சாவூர் மராத்திய அரசர்கள் மேலும் பல நூல்களைச் சேர்த்து நூல்நிலையமாக மாற்ற, ஊக்கத்தோடு செயற்பட்டனர். அதில் தலைசிறந்தவர் இரண்டாம் சரபோசி ஆவார்.
  • இரண்டாம் சரபோசி 1820 ஆம் ஆண்டு காசிக்கு சென்றபோது, ஏராளமான சமற்கிருத நூல்களை கொண்டு வந்து சேர்த்தார். மேலும், இவர் காலத்தில், மேனாட்டு மொழியிலான 5000 அச்சுப்புத்தகங்களும், பல சிறந்த ஓவியங்களும் சேர்க்கப்பட்டன. ஆகையால் தான், இந்நூலகம் சரபோசி சரசுவதி மகால் நூல்நிலையம் என்று வழங்கப்பெறுகிறது.
 • இந்நூலகத்திற்கு வெளியே கொலுமண்டபமாக இருந்த ஒரு மண்டபத்திலே,1807-இல் கிழக்கிந்தியக் கம்பெனியாரால் நிறுவப்பெற்ற சரபோசி மன்னரின் உருவச்சிலை அழகாக அமைந்துள்ளது.
  • 1871 இல் அரசாங்கத்தார் நூல் நிலையத்திலுள்ள நூல்களின் பட்டியொன்றை தயாரிக்குமாறு இடாக்டர் பரனெல் என்னும் நீதிபதிக்குப் பணித்தனர். அவர் இந்த நூல் நிலையமே உலக முழுவதிலும் மிகப் பெரியதும் மிக முக்கியமானதுமாகும் என்று கூறினார்.
 • 1918 இல் தஞ்சை மராட்டிய மன்னரின் சந்ததியர், தமது சொந்த உடைமையாக்கி, இந்நூலகத்தை அரசாங்கத்திடம் ஒப்புவித்தனர்.
 • அதன்பின் சம்புநாதபட்டு இலாண்டகே, காகல்கர், பதங்க அவ தூதர் முதலிய பல சிறந்த அறிஞர்களின் பரம்பரையிலிருந்து ஏராளமான நூற்றொகுதிகள் இந்நூலகத்தில் சேர்க்கப்பட்டன.
 • இப்பொழுது தமிழ்நாடு அரசால் மேலாண்மை செய்யப்படுகிறது.

இதன் நூல்கள் தொகு

 • இங்கு ஏறத்தாழ 25,000 சமற்கிருத நூல்கள், பதினொரு இந்திய மொழிகளில் உள்ளன.
 • வரலாற்றுப் புகழ்வாய்ந்த கையெழுத்தாலான அஞ்சல் மடல்களும், அவற்றுடன் படங்களும், இருக்கின்றன.
 • 400 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நந்திநாகரி என்னும் எழுத்தில் உள்ள சுவடிகள் உள்ளன.
 • 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, திருவாசகம், திவாகரம், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம், திருக்குறள் முதலிய நூல்களும் உள்ளன.
 • பொ.ஊ. 1476 இல், காகிதச் சுவடிகளில் எழுதப்பட்டட சமற்கிருத நூலும் உள்ளது.
 • பொ.ஊ. 1703 இல், சுவடியில் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி உள்ளது.
 • ஐரோப்பா, இந்தியா நாடுகளில் உள்ள அழகிய நகரங்களின் படங்கள். உடற்கூறு, தாவரம் முதலிய கலைக்களுக்குரிய பல நிறப்படங்களும், சிறந்த ஓவியங்களும் உள்ளன.
 • மகாராட்டிர அரசர்கள் அலுவலகங்களில் பயன்படுத்திய 'மோடி' எழுத்துக்களாலான கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன.
 • பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட சாமுத்திரிகா என்ற அரியநூல் ஒன்றும் உள்ளது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை தொகு

1. ஆ. குணசேகரன், தஞ்சை சரசுவதிமகால் நூலகம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி,டி.கே சாலை, சென்னை-18, ஆண்டு குறிப்பிடபடவில்லை ஆனால் சான்றுரை ஒன்றில் 10.8.2004 என்னும் நாள் குறிப்பிட்டுள்ளது. பக்கங்கள் 262.

அமைவிடம் தொகு

 1. சான்று தேவை