தண்டிலம் (சிற்பநூல்)

இந்தியச் சிற்ப மரபில் தண்டிலம் என்பது, 32 வகைகளாகச் சொல்லப்படும் தள அமைப்புக்களில் ஒன்று. இது ஒவ்வொரு பக்கமும் ஏழாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் நாற்பத்தொன்பது (7 x 7) பதங்களைக் (நிலத்துண்டு) கொண்டது. உண்மையில் இது உபபீடக அமைப்பின் கிழக்கு - மேற்கு, வடக்கு - தெற்கு ஆகிய அச்சுக்கள் பற்றி இழுத்து விரிவாக்கிய ஒரு வடிவம் ஆகும். இரு திசைகளிலும் அச்சை அண்டிய பதங்கள் மூன்று மடங்காக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பில், நடுவில் வரக்கூடிய ஒன்பது பதங்கள் பிரம்மாவுக்கு உரியன. மீதியுள்ள நாற்பத்து எட்டுப் பதங்களுள் சில பதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவருக்கு உரியவை. முதன்மைத் திசை அச்சுக்களை அண்டி அமையும் தேவர்களுக்கு மும்மூன்று பதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாற்பத்தொன்பது பதங்களைக் கொண்ட தண்டிலம்

பிரமனுக்கு உரிய பதத்தைச் சுற்றியுள்ள உட்புறச் சுற்றில் எட்டுத் தேவர்களுக்கு உரிய பதங்கள் உள்ளன. வெளிப்புறச் சுற்றில் 16 தேவர்களுக்கான பதங்கள் உள்ளன. உட்சுற்றில் வட கிழக்கில் இருந்து தொடங்கி மணிக்கூட்டுத் திசையாக ஆபவத்சன், ஆரியகன், சாவித்திரன், விவசுவதன், இந்திரன், மித்திரகன், உருத்திரன், பூதரன் ஆகியோருக்குரிய பதங்களும், வெளிச்சுற்றில் வடகிழக்கில் தொடங்கி மணிக்கூட்டுத் திசையாக ஈசன் (சிவன்), சயந்தன், ஆதித்தன், பிராசன், அக்கினி, விதாதன், யமன், பிருங்கராசன், பிதிர், சுக்கிரீவன், வருணன், சோசன், மாருதன், முக்கியன், சோமன், அதிதி ஆகிய தேவர்களுக்கு உரிய இடங்களும் காணப்படுகின்றன.[1] இவர்களுள் ஆரியகன், விவசுவதன், மித்திரன், பூதரன், ஆதித்தன், யமன், வருணன், சோமன் ஆகிய தேவர்கள் ஒவ்வொருவரும் மூன்று பதங்களுக்கு அதிபதிகளாக உள்ளனர்.

குறிப்புகள்

தொகு
  1. Acharya, Prasanna Kumar., 2010. பக். 26.

உசாத்துணைகள்

தொகு
  • Acharya, Prasanna Kumar., Architecture of Manasara, Translated from Original Sanskrit Text, New Barathiya Book Corporation, Delhi, 2010.
  • பவுன்துரை, இராசு., தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு - மயன் அறிவியல் தொழில்நுட்பம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டிலம்_(சிற்பநூல்)&oldid=1604128" இலிருந்து மீள்விக்கப்பட்டது