தமிழின் அகரமுதலிகள் வரலாறு

தமிழ் மொழியில் அகரமுதலிகளின் தோற்றம்

ஒரு மொழியிலுள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வரிசையில் அமையும்படி ஒரு சேரத் தொகுத்து, அவற்றின் பொருள்களை, அம்மொழியாலேனும், பிறமொழியாலேனும் விளக்கும் நூல் அகராதி எனப்படும். அகராதி என்னும் சொல்லின் 'ஆதி' [1] என்னும் சொல் வடமொழி என்பதால், மொழிஞாயிறு பாவாணர் அகரமுதலி என்று அழைத்தார். சொல்லின் பெருளைத் தவிர, அதன் தோற்றம், ஆட்சி, அது வந்துள்ள நூல், இடம் முதலியவற்றையும் பெரிய அகராதிகளில் காணலாம். இவ்வாறு பொதுப்பட அமைந்துள்ள சொல்லகராதியேயன்றி, ஏதேனும் ஒரு பொருட்கு அல்லது, ஒரு தொழிற்குரிய சொற்கள், சொற்களின் தோற்றம், ஒரு நாட்டின் பல பகுதிகளிலும் வழங்கும் மொழிபேதங்கள் (Dialects) இவற்றைப் பற்றித் தனித்தனி அகராதிகள் தோன்றுதலும் உண்டு. இவ்வாறு தோன்றும் அகரமுதலிகள் தமிழில் அமைந்த வரலாற்றினைக் காண்போம்.

தமிழர், அகரமுதலியை யொத்துப் பயன்படும் நூல்களை உரிச்சொற் பனுவல் என முற்காலத்தில் வழங்கினர். இப்பெயர், இச்சொல் இவ்வொரு பொருட்கு உரித்து; இச்சொல் பல பொருட்கு, உரித்து என்று உணர்த்துதலால் தோன்றியது. தொல்காப்பியரும் சில சொற்களுக்குப் பொருள் விளக்கஞ் செய்துள்ள பகுதியை உரியியல் என்று பெயரிட்டனர். ஆனால், இப்பெயர் காலப் போக்கில் மறைந்துவிட்டது. வடமொழிப் பெயராகிய நிகண்டு என்பதே தமிழிலும் நிலைத்துவிட்டது.

நிகண்டும், உரியியலும் தொகு

  • இந்நிகண்டுகள் கடின பதங்களுக்கு மாத்திரம் பொருள் கூறின. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா என்பது தொல்காப்பியம். அன்றியும் ஆன்றோராட்சியில் வந்த செஞ்சொற்களை நிரலேகொடுத்து, அவற்றை விளக்குதலும் நிகண்டுகளின் நோக்கமாய் அமைந்தது. வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே என்று தொல்காப்பியம் கூறுவது இதனை வலியுறுத்தும். சொற்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, அவை வழங்கு முறை இவ்வாறு என்பதைத் துணிதலும் இந்நிகண்டுகளின் பிறிதொரு நோக்கம்.
  • நிகண்டுகளின் வழிவழியே வந்ததுதான் அகரமுதலி. இப்பெயர் முதன்முதலிற் காணப்படுவது, கி. பி. 1594-ல் இயற்றி முடித்த அகராதி நிகண்டு என்ற நூலின் பெயரிலேயாகும். இதன் ஆசிரியர் சிதம்பர ரேவண சித்தர் என்னும் வீரசைவப் புலவர். இவர் இட்ட பெயரே, இப்பொழுது 'டிக்ஷனரி' (Dictionary) என்று ஆங்கிலத்திற் கூறும் நூலுக்குரிய தமிழ்ப் பெயராய் அமைந்துவிட்டது.

நிகண்டுகள் தொகு

இந்நிகண்டுகள் கடின பதங்களுக்கு மாத்திரம் பொருள் கூறின. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா என்பது தொல்காப்பியம். அன்றியும் ஆன்றோராட்சியில் வந்த செஞ்சொற்களை நிரலேகொடுத்து, அவற்றை விளக்குதலும் நிகண்டுகளின் நோக்கமாய் அமைந்தது. வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே என்று தொல்காப்பியம் கூறுவது இதனை வலியுறுத்தும். சொற்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, அவை வழங்கு முறை இவ்வாறு என்பதைத் துணிதலும் இந்நிகண்டுகளின் பிறிதொரு நோக்கம். நிகண்டுகளின் வழிவழியே வந்ததுதான் அகரமுதலி. இப்பெயர் முதன்முதலிற் காணப்படுவது, கி. பி. 1594-ல் இயற்றி முடித்த அகராதி நிகண்டு என்ற நூலின் பெயரிலேயாகும். இதன் ஆசிரியர் சிதம்பர ரேவண சித்தர் என்னும் வீரசைவப் புலவர். இவர் இட்ட பெயரே, இப்பொழுது 'டிக்ஷனரி' (Dictionary) என்று ஆங்கிலத்திற் கூறும் நூலுக்குரிய தமிழ்ப் பெயராய் அமைந்துவிட்டது.

ஐரோப்பியப் பாதிரிகள் தொகு

முதன் முதலில் சொற்களின் எழுத்துக்கள் அனைத்தையும் நோக்கி அகராதி முறையைக் கையாண்டவர்கள் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஐரோப்பியப் பாதிரிகளேயாவர்.இவர்கள் கையாண்ட முறையில் நமக்கு விளைந்த நன்மைகள் பல. முதலாவது, பிற மொழிகளில் செப்பமாக அமைந்துள்ள அகராதி முறையைத் தமிழ் அகராதியிலும் கையாள முடிந்தது. இரண்டாவது, பாதிரிமார்களுக்குத் தமிழ் புதிய வேற்று மொழியாகையினாலே, இம்மொழியிலுள்ள எல்லாச் சொற்களுக்கும் இவர்கள் பொருளுணர வேண்டியவர்களாயிருந்தனர். ஆகவே, அருஞ்சொல், எளியசொல் என்ற வேற்றுமையின்றி, எளிய சொற்களுக்கும் பொருள் விளக்கம் செய்யவேண்டியது அவசியமாயிற்று. மூன்றாவது, நூல் வழக்கிலன்றிப் பொதுமக்கள் பல்வேறிடங்களிலும் சிதைத்து வழங்கிவந்த சொற்களும் அகராதியில் இடம் பெற்றன. அவர்கள் கல்விபெறாத கீழ்த்தர மக்களோடும் பழகிவந்தார்கள். அம்மக்கள் பேசுவதை உணர்வதும் அவர்கள் வழங்கும் சொற்களை உணர்வதும் அவசியம். எனவே, அவ்வழக்குச் சொற்களும் அகராதியிற் காணுதல் வேண்டும். இவ்வாறாகத் தமிழ் மக்களுள் பல இனத்தவர்களும் வழங்கும் சொற்கள் எல்லாம் அகராதிகளில் அமைவதற்கு இப்பாதிரிகளே வழிகாட்டியாயிருந்தார்கள்.

யாழ்ப்பாண அகரமுதலி தொகு

சுமார் 1833-ல் யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் அதிகாரிகள் தமிழ் அகராதியொன்றும், தமிழ்-ஆங்கில அகராதியொன்றும், ஆங்கிலத்-தமிழ் அகராதியொன்றும் இயற்றவேண்டும் என்று ஏற்பாடு செய்தனர். திஸ்ஸெரா, பெர்ஸிவல் பாதிரியார் முதலியவர்களின் துணைகொண்டு நைட் பாதிரியார் இவ்வகராதிகளுக்குரிய சொற்களைத் திரட்டி வந்தனர். இங்ஙனம் தொகுத்ததை ஆதாரமாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் சந்திரசேகர பண்டிதர், ஒரு தமிழ் அகராதி இயற்றி முடித்தனர். இதற்குச் சென்னைகளத்தூர் வேதகிரி முதலியார் ஓர் அனுபந்தமும் சேர்த்தனர். இது ஸ்பால்டிங் பாதிரியாரால் 1842-ல் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண அகராதி என்றும், மானிப்பாய் அகராதி என்றும் வழங்கியது இதுவே. தமிழ் மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் அடக்க முயன்ற அகராதிகளில் இதுவே முதலாவது.

அமெரிக்கன் மிஷன் அதிகாரிகள் தொடங்கியமற்றை அகராதிகளும் வெளிவரலாயின. ஆங்கில-தமிழ் அகராதி வேலை ஹச்சிங்க்ஸ் பாதிரியாரால் மீண்டும் நடைபெற்றது. இவ்வகராதியை 1842-ல் வின்ஸ்லோ பதிப்பித்தனர். இதற்குச் சில ஆண்டுகட்கு முன்னர் சுமார் 1830-ல் தமிழ் ஆங்கில அகராதி யொன்று டாக்டர் ரொட்லர் என்பவரால் இயற்றப்பட்டது. இதனைத் திருத்தஞ் செய்வதற்கு இரண்டு தமிழ்ப் பண்டிதர்களையும் ஹக்நெஸ், ராபர்ட்ஸன் என்பவர்களையும் நியமனஞ் செய்தனர். முதற்பகுதி கவர்னர் ஜெனரல் பென்டிங் பிரபுவிற்கு உரிமையாக்கப்பட்டு 1834-ல் வெளிவந்தது. ராபர்ட்ஸன் இறந்து போகவே, டெய்லர் பாதிரியாரும் வேங்கடாசல முதலியாரும் இவ்வகராதி வேலையை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணமும், தமிழகமும் தொகு

ரொட்லர் அகராதி வெளிவந்த சில காலத்திற்குப் பின்னர்த் தமிழ்-ஆங்கில அகராதிக்காக, யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் சார்பில் தொகுக்கப்பட்ட சொற்களை வின்ஸ்லோ சென்னையில் 1862-ல் பதிப்பித்தனர். இப்பதிப்பு வேலையில் பல சிறந்த வித்துவான்கள் பலவாறு உதவி செய்துவந்தனர். இவர்களில் இராமாநுஜகவிராயர், விசாகப் பெருமாளையர், வீராசாமிச் செட்டியார் முதலிய அறிஞர்களை இங்கே குறிப்பிடல் தகும். இவ்வகராதியில் 67,452 சொற்கள் உள்ளன. இருவகை வழக்கிலுமுள்ள சொற்கள் மிகக் கூட்டப்பட்டன; பலவகையான சாஸ்திரச் சொற்கள் விளக்கப்பட்டன; ஆசிரியர்கள், புலவர்கள், வீரமக்கள், தெய்வங்கள் முதலியோர்களின் பெயர்களும் இதிற் சேர்க்கப்பட்டன.

ஆனால், ஒருமொழி அகரமுதலி விருத்தியடையாது, ஒரு நிலையிலேயே வெகுகாலம் நின்றுவிட்டது. யாழ்ப்பாண அகரமுதலி யொன்றுதான் பயன்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்தில் நீதிபதியாயிருந்த கதிர்வேற் பிள்ளை ஒரு சிறந்த பேரகராதி வெளியிட வேண்டிய முயற்சிகளைச் செய்தனர். இவ்வகராதியில் ஒரு பகுதியை இவர் எழுதி முடித்தனர். இவ்வகரமுதலி முழுவதையும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் முற்றுவித்து வெளியிட்டனர். இக்காரணத்தால் தமிழ்ச்சங்க அகராதி என இதனை வழங்குவர்.

சிறிய வடிவ தமிழ் அகரமுதலிகள் தொகு

 
வின்சுலோ

வின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகரமுதலி மிகவும் பெரிய நூல்; எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய தன்று. பொதுமக்களது தேவைக்கு வேறோர் அகரமுதலி வேண்டப்படுவதாயிற்று. இத்தேவையைநிரப்ப,1897-ல் தரங்கம்பாடி (Tranquebar) அகரமுதலி தோன்றியது. இது, பெப்ரீஷியஸ் அகரமுதலியை, ஆதாரமாகக் கொண்டது. இந்த அகரமுதலியில், ஒரு முக்கியமான முறையையும் இது கையாண்டது. டாக்டர் க்ரால் என்பவர் தமிழில், முக்காலத்தும் வரும் வினைவிகற்பங்களை யெல்லாம், நன்கு ஆராய்ந்து வினையடிகளை, 13 வகையாகக் கணக்கிட்டிருந்தனர். இவ்வகையை இவ்வகரமுதலி மேற்கொண்டு, ஒவ்வொரு வினையடியையும், அது எவ்வகையைச் சார்ந்தது எனக் குறிப்பிட்டுச் சென்றது. இதனால் வினைவிகற்பங்களையெல்லாம் அகரமுதலியில் கொடுக்கவேண்டிய அவசியமில்லாமற் போயிற்று. இங்ஙனமாக இருமொழி அகராதிகள் பல படியாய்த் திருத்தமடைந்து வரலாயின.

தமிழ்-ஆங்கில அகராதி செப்பமிடல் தொகு

தமிழ்-ஆங்கில அகராதி பலவகையில் செப்பமடைய இடமிருந்தது.

  • முதலாவது, சங்க இலக்கியம் முதலிய ஆதார நூல்கள் பல, வின்ஸ்லோவிற்குப் பின்னரே, அச்சில் வெளிவந்துள்ளன. இவற்றை நன்கு பயன்படுத்துவது அவசியமாயிற்று.
  • இரண்டாவது, சொற்களுக்குப் பொருள் எழுதுவதில் வின்ஸ்லோ முதலியோர் அகராதிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நயம் இருந்தது. இந்நயங்கள் அனைத்தையும் ஒருங்கு கொணர்ந்து அவற்றை இன்னும் ஒழுங்காக விருத்தி செய்வதும் வேண்டியதாயிருந்தது.
  • மூன்றாவது, சொற்பொருள்களை அமைப்பதில் சில நெறிகளைக் கையாளுவதும் அவசியமாயிற்று. தமிழ்-அகராதி நூல்கள் பலவும், பொருள்களையும்கூட, அகராதிக் கிரமத்தில் அமைத்தன. இது தவறாகும். வரலாற்று முறையிலும், இயலாத இடங்களில் கருத்து வளர்ந்துசென்ற முறையிலும் இவற்றை அமைக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
  • நான்காவது, சொல்லுக்குப் பொருளாகப் பரியாயச் சொற்களைக் கொடுப்பது போதாது. சொல்லுக்குரிய பொருளின் இலக்கணத்தையும் வரையறை செய்யவேண்டும். இவ்வாறு செய்யும் வழக்கம் தமிழ் அகராதிகளில் பெரும்பாலும் இல்லாமலிருந்தது; பரியாயச் சொல்லைக் கூறுவதே போதியதெனக் கருதப்பட்டது. தமிழ்-ஆங்கில அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ள இலக்கணங்களும் ஒவ்வொரு வகையில் பிழைபாடு உடையனவாயிருந்தன. இக்குறைகளெல்லாம் நீங்கவேண்டுவது அவசியமாயிற்று.
  • ஐந்தாவது சொல்லின் பிறப்பைக் குறித்து அகராதியாளர்கள் பெரும்பாலும் கருத்துச் செலுத்தியதேயில்லை. சில தமிழ்ச் சொற்களுக்கு வடமொழி மூலங்கள் தரப்பட்டிருந்தன. பிற திராவிடமொழிகளிலிருந்து பிறப்பொத்த சொற்கள் காட்டப்பெறவில்லை.
  • ஆறாவது, மேற்கோள் காட்டுவதில் தகுதியான முறைகள் கையாளப் பெறவில்லை. தக்க முறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் கொடுப்பது அவசியமாயிருந்தது.

மேற்குறித்த அம்சங்களிற் பெரும்பாலுங்கொண்டு திருத்த மெய்தியது சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தமிழ்-லெக்ஸிகன் ஆகும். இதுவும் அரசினர் ஆதரவில் சாண்ட்லர் என்ற அமெரிக்கன் மிஷன் பாதிரியாரால் தொடங்கப்பெற்று, தமிழ் வித்துவான்களின் உதவி கொண்டு, ஆங்கிலமும் தமிழுங்கற்ற ஆசிரியர்களால் முற்றுப்பெற்றது. இதிலும் பல குறைகள் உள்ளன. அகரமுதலி வேலை, மேலும் மேலும் நடைபெற்றுக்கொண்டே செல்லவேண்டியது என்பதே அறிவியல் அடிப்படையிலான உண்மையாகும்.

மொழி வளர்ச்சிக் காரணி தொகு

மொழியின் வளர்ச்சி, நமது வாழ்க்கையின் வளர்ச்சியைப் பொறுத்தது. இம்மொழி வளர்ச்சிக்குச் சொல்லின் வளர்ச்சி, ஒரு சிறந்த அறிகுறியாயுள்ளது. நமது வாழ்க்கை வளமுறுவதானால், சொற்கள் பெருகிக் கொண்டுதான் செல்லும். அகரமுதலி வேலைக்கு எல்லையே இல்லை. குறைபாடுகளைத் திருத்துவதும் சொற்களின் பிறப்பு வரலாற்றை மொழிநூல் முறையில் உணர்த்தி ஜாதகம் கணிப்பதுபோல் விவரங்கள் தருவதும், சொல்லின் வடிவங்களையும் பொருள்களையும் காலக்கிரமத்தில், வரலாற்று முறையில் நிறுவி, இன்ன சொல் இன்ன காலத்தில் இன்ன வடிவம் பெற்றது, இன்ன சொல் இன்ன காலத்தில் இன்ன பொருள் பெற்றது என்பன முதலிய விவரங்களை நூல்களின் ஆதாரங்கொண்டு தெளித்து உணர்த்துவதும், புதுச்சொற்களைச் சேர்ப்பதும் கலைக் குறியீட்டு மொழி அகராதிகளையும், கொடுந்தமிழ், திசைச் சொல் பற்றிய அகராதிகளையும் சொற்பிறப்பு அகராதிகளையும் இயற்றுவதும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாத பெருஞ்செயல்களாகும். சுருங்கச் சொல்லின், ஆங்கிலத்திலுள்ள நூதன ஆங்கிலப் பேரகராதி (New English Dictionary) யின் முறைகளை முற்றும் தழுவி, ஒரு தமிழ்ப் பேரகராதி இயற்றுதல் தமிழ் அறிஞர்களது கடமையாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. கவிக்கோ ஞானச்செல்வன் (20 செப்டம்பர் 2012). "பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்-76 ஆனந்தனா? ஆநந்தனா?". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2019. {{cite web}}: Check date values in: |date= (help)