தமிழ்நாடு சட்ட மேலவை

தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தின் மேலவை ”தமிழ் நாடு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” (Tamil Nadu Legislative Council) என்றழைக்கப்பட்டது. தமிழ் நாட்டின் முன்னோடி மாநிலங்களான சென்னை மாநிலம் மற்றும் சென்னை மாகாணத்தின் சட்டமன்றங்களிலும் ”மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” என்ற பெயரில் மேலவையாக இருந்ததும் இதுவே. 1861 இல், பிரிட்டிஷ் அரசு, இந்திய கவுன்சில் சட்டம், 1861 ஐ இயற்றியதன் மூலம் இந்த அவையை உருவாக்கியது. ஆரம்பத்தில் சென்னை ஆளுனருக்கு பரிந்துரை வழங்கும் அவையாகவே இது இருந்தது. இந்திய கவுன்சில் சட்டம், 1892 இன் மூலம் இதன் உறுப்பினர் எண்ணிக்கையும் பொறுப்புகளும் அதிகரித்தன. 1909 ஆம் ஆண்டு முதல் இதன் உறுப்பினர்கள் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாயினர். 1920-1937 இல் சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தபோது மாகாணத்தில் ஓரங்க சட்டமன்றமாக இந்த அவை செயல்பட்டது. 1937 இல் மாநில சுயாட்சி முறை அறிமுகப் படுத்தப்பட்டு, சட்டமன்றம் ஈரங்க அவையாக மாறியபோது அதன் மேலவையாகச் செயல்பட்டது. 1947ல் இந்தியா விடுதலை பெற்று 1950 இல் குடியரசாகியபோது உருவாகிய சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திலும் இது மேலவையாகத் தொடர்ந்தது. 1969 இல் சென்னை மாநிலம் தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது, இந்த அவையின் பெயரும் ”தமிழ்நாடு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” என்று மாற்றப்பட்டது. 1986 இல் இந்த அவை நீக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்றம் ஓரங்க அவையாக மாறியது. 2010 இல் இந்த அவையை மீண்டும் தோற்றுவிக்க இந்தியப் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் 2011ம் ஆண்டு இம்மீட்டுருவாக்க நடவடிக்கை கைவிடப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற மேலவை
வகை
வகைபரிந்துரை அவை (1861-1921)
ஓரங்க அவை (1921-1937)
ஈரங்க சட்டமன்றத்தின் மேலவை (1937-1986)
காலக்கோடு
லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்சென்னை மாகாணம் (1861-1950)
சென்னை மாநிலம் (1950-1968)
தமிழ் நாடு (1968-1986)
தோற்றம்1861
முன்னிருந்த அமைப்புசென்னை ஆளுனரின் நிர்வாகக் குழு
பின்வந்த அமைப்புஒன்றுமில்லை
கலைப்பு1986
தலைமையும் அமைப்பும்
உறுப்பினர்கள்20 + ஆளுனரின் நிர்வாகக் குழு (1892-1909)
42 + ஆளுனரின் நிர்வாகக் குழு (1909-1921)
127 + ஆளுனரின் நிர்வாகக் குழு (1921-1926)
134 + ஆளுனரின் நிர்வாகக் குழு (1926-1937)
54-56 (1937-1950)
40-கீழவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் மூன்றில் ஒரு பங்கு(1950-1986), (2010-)
தேர்தல்
தேர்தல் முறைநியமனத் தேர்தல் (1892-1920)
தேர்தல் முறைநேரடித் தேர்தல் (1920-1950)
தேர்தல் முறைவிகிதாச்சார பிரதிநிதித்துவம் (1950-1986)
தலைமையகம்
புனித ஜார்ஜ் கோட்டை
மேலும் பார்க்க
தமிழ்நாடு சட்டமன்றம்

தோற்றம் தொகு

1861 இல் பிரிட்டிஷ் அரசு முதல் கவுன்சில்கள் சட்டத்தை இயற்றியதன் மூலம் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்றழைக்கப்பட்ட அவையைத் தோற்றுவித்தது. இந்த அவைக்கு மாகாண ஆளுநருக்குப் பரிந்துரை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த அவைக்கு நான்கு இந்திய உறுப்பினர்களை நியமனம் செய்யும் உரிமை சென்னை மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டது. இந்த இந்திய உறுப்பினர்கள் மாகாண நிர்வாகத்தைப் பற்றிக் கேள்விகள் எழுப்பவும், தீர்மானங்களைக் கொண்டுவரவும், மாகாண வரவுசெலவு திட்டத்தை ஆராயவும் உரிமை பெற்றிருந்தனர். ஆனால் சட்டங்கள் இயற்றவும், சட்ட மசோதாக்களுக்கு வாக்களிக்கவும் அவர்களால் இயலாது. நடுவண் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களில் தலையிடும் உரிமையும் அவர்களுக்குக் கிடையாது. சென்னை ஆளுநரே சட்டமன்றத்தின் அவைத் தலைவராகவும் இருந்தார். ஆளுநரின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இருவரும், சென்னை மாகாணத்தின் தலைமை வழக்குரைஞரும் அவை விவாதங்களில் பங்கேற்று வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். பெரும்பாலும் இந்திய ஜமீந்தார்களும், நிலக்கிழார்களும் தான் இம்முறையின் கீழ் சட்டமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுள் காலனிய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களுக்கு பலமுறை பதவிகாலம் நீட்டிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக ஜி. என். கணபதி ராவ் என்னும் உறுப்பினர் எட்டு முறை அவைக்கு நியமனம் செய்யப்பட்டார்; ஹுமாயூன் ஜா பகாதூர் என்பவர் தொடர்ந்து 23 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்; டி. ராமா ராவ், பி. சென்ஞ்சால் ராவ் ஆகியோர் ஆறாண்டுகள் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களைத்தவிர இக்காலகட்டத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் வெம்பாக்கம் பாஷ்யம் அய்யங்கார், எஸ். சுப்ரமணிய அய்யர், சி. சங்கரன் நாயர் ஆகியோர். 1861-92 காலகட்டத்தில் சட்டமன்றம் மிகக்குறைவான நாட்களே கூடியது. சில ஆண்டுகளில் (1874, 1892) அவை ஒரு நாள் கூடக் கூட்டப்படவில்லை. சென்னை மாகாண ஆளுநர்கள் அவர்கள் கோடை விடுமுறைகளைக் கழிக்கும் உதகமண்டலத்தில் அவையைக் கூட்டுவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கம் இந்திய உறுப்பினர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியிருந்தது. மிகவும் குறைவான நாட்களே கூடிய சட்டமன்றம் ஒரு சில சட்ட முன்வரைவுகளையும் தீர்மானங்களையும் அவசர அவசரமாக நிறைவேற்றி வந்தது.

விரிவாக்கம் (1891-1909) தொகு

1891-1909 இல் அவை
கூடிய நாட்களின் எண்ணிக்கை[1]
ஆண்டு நாட்கள்
1906 2
1897,1901 3
1894,1907 4
1896,1898,1909 5
1899, 1902, 1903, 1904 6
1900 7
1895,1905 8
1893 9

1892 இல் இயற்றப்பட்ட 1892 கவுன்சில் சட்டம், சென்னை சட்டமன்றத்தின் அதிகாரங்களையும், பணியினையும் விரிவுபடுத்தியது. அவையின் கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை உச்சவரம்பு இருபதாக உயர்த்தப்பட்டது. அவர்களில் அதிகபட்சமாக ஒன்பது அதிகாரிகள் இருந்தனர். இச்சட்டம் சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையையும் அறிமுகப்படுத்தியது. ஆனால் அதிகாரப்பூர்வமாக “தேர்தல்” என்ற சொல் சட்டத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. மாறாக உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் “பரிந்துரை” செய்யப்பட்டவர்கள் என்றே அழைக்கப்பட்டனர். உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டாண்டுகளாக இருந்தது. ஆண்டு நிதிநிலை அறிக்கைமீதான விவாதங்களில் பங்கேற்கவும், (குறிப்பிட்ட வரையறைக்குள்) சட்டமன்றத்தில் கேள்விகள் கேட்கவும் உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இச்சட்டம் அமலிலிருந்த 1893-1909 காலகட்டத்தில் எட்டு முறை தேர்தல் நடத்தப்பட்டு 38 இந்தியர்கள் சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினர்களாகப் ”பரிந்துரை”க்கப்பட்டனர். அவர்களுள், சென்னை மாகாணத்தின் தென்மாவட்ட பிரதிநிதிகளான சி. ஜம்புலிங்கம் முதலியார், என். சுப்பாராவ் பந்துலு, பி. கேசவ பிள்ளை, சி. விஜயராகவாச்சாரியார்; வடமாவட்டங்களின் பிரதிநிதியான கே. பேரராஜு பந்துலு; சென்னை மாநகராட்சியின் பிரதிநிதிகளான சி. சங்கரன் நாயர், பி. ரங்கய்யா நாயுடு; சென்னை பல்கலைக்கழகப் பிரதிநிதிகளான பி. எஸ். சிவசாமி அய்யர், வி. கிருஷ்ணசாமி அய்யர், எம். கிருஷ்ணன் நாயர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.[1] ஆனால் காலப்போக்கில் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போனது. எடுத்துக்காட்டாக 1902 இல் பாஷ்யம் அய்யங்கார், சங்கரன் நாயர் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அவர்களது இடங்களுக்கு அக்வொர்த், சர் ஜார்ஜ் மூர் ஆகிய ஆங்கிலேயர்கள் நியமிக்கப்பட்டனர்.[2] இச்சட்டம் அமலிலிருந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிகக்குறைந்த நாட்களே சென்னை சட்டமன்றம் கூட்டப்பட்டது. (அதிகபட்சமாக 1893 இல் ஒன்பது நாட்கள்).[1]

விரிவாக்கம் (1909-19) தொகு

1909–19 இல் உறுப்பினர்களைத்
தேர்ந்தெடுத்த தொகுதிகள்[1]
தொகுதி உறுப்பினர்கள்
உள்ளாட்சி அமைப்புகள் 10
சென்னை பல்கலைக்கழகம் 1
தென்னிந்திய வர்த்தக சபை 1
சென்னை வணிகர்கள் சங்கம் 1
ஜமீந்தார்கள் 2
நிலச்சுவான்தார்கள் 3
முஸ்லிம்கள் 2
பண்ணையார்கள் 1

மிண்டோ-மோர்லி சீர்திருத்தங்களின் விளைவாக இயற்றப்பட்ட இந்திய அரசாங்கச் சட்டம், 1909, பிரித்தானியாவின் இந்தியாவில் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்தல்மூலம் நியமிக்கும் முறையை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. இம்முறையின் கீழ் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களே சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர். சட்டமன்றத்தில் இதற்குமுன் ஆளுநரின் நிர்வாகக் குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த பெரும்பான்மை அந்தஸ்தையும் இச்சட்டம் ரத்து செய்தது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பொதுநலத் தீர்மானங்களைக் கொண்டு வரும் உரிமையையும், விவாதங்களின்போது கூடுதல் கேள்விகளைத் தாக்கல் செய்யும் உரிமையையும் அளித்தது.[3] 1909-1919 காலகட்டத்தில் சென்னை சட்டமன்றத்தில் 21 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் 21 நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் இருந்தனர். நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுள் 16 பேர் அரசு அதிகாரிகளாவர். இவர்களைத் தவிர தேவைப்படும்போது இரு தொழில்முறை வல்லுனர்களைச் சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யும் உரிமை ஆளுநருக்கு வழங்கப்பட்டிருந்தது. முன்போலவே ஆளுநரின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், மாகாணத்தின் தலைமை வழக்குரைஞரும் (Advocate-General) சட்டமன்ற உறுப்பினர்களாகக் கருதப்பட்டனர். பி. கேசவ பிள்ளை, ஏ. எஸ். கிருஷ்ண ராவ், என். கிருஷ்ணசாமி அய்யங்கார், பி. என். சர்மா, பி. வி. நரசிம்ம அய்யர், கே. பேரராஜு பந்துலு, டி. வி. சேஷகிரி அய்யர், பி. சிவ ராவ், வி. எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி, தியாகராய செட்டி, யாகூப் ஹசன் சேத் ஆகியோர் இக்காலகட்டத்தின் குறிப்பிடத் தக்க சட்டமன்ற உறுப்பினர்களாவர்.

இரட்டை ஆட்சிமுறை (1920-37) தொகு

 
புனித ஜார்ஜ் கோட்டை 1921-2010 மற்றும் மே 2011 முதல் தற்போது வரையில் தமிழக சட்டமன்றத்தின் இருப்பிடம்

1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் பலனாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரிட்டிஷ் ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தன. கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டில் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக்கூடியதாக இருந்த சட்டமன்றம், விரிவு படுத்தப்பட்டு அதற்குச் சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் வழங்கப்பட்டது.[1][3][4][5]

இரட்டை ஆட்சி முறையில்
கூட்டப்பட்ட அவைகள்
அவை பதவிக் காலம்
முதலாம் அவை 17 டிசம்பர் 1920 - 11 செப்டம்பர் 1923
இரண்டாம் அவை 26 நவம்பர் 1923 - 7 நவம்பர் 1926
மூன்றாம் அவை நவம்பர் 1926 - அக்டோபர் 1930
நான்காம் அவை அக்டோபர் 1930 - நவம்பர் 1934
ஐந்தாம் அவை நவம்பர் 1934 - ஜனவரி 1937

அவையில் மொத்தம் 127 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களைத் தவிர ஆளுனரின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாகவே (ex-officio members) கருதப்பட்டனர். 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளிலிருந்து மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (சில தொகுதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தன). இத்தொகுதிகளுக்குள் பிராமணர்கள், பிரமணரல்லாத இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்தவர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், நிலச்சுவான்தார்கள், பண்ணையார்கள், வர்த்தக குழுமங்ககள், பல்கலைக்கழக பிரதிநிதிகளெனப் பல்வேறு பிரிவினருக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. 1926 இல் பெண்களின் பிரதிநிதிகள் ஐந்து பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டதால் உறுப்பினர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது. இவர்களைத் தவிர மீதமுள்ள 29 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் 19 பேர் அரசாங்க ஊழியர்கள்; 5 பேர் தலித்துகள். வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள சொத்து வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது.[1][3][4][6]

இரட்டை ஆட்சிமுறையின் கீழ் சட்டமன்றத்திற்கான முதல் தேர்தல் 1920 இல் நடைபெற்றது. ஜனவரி 12, 1921 இல் முதல் சட்டமன்றத் தொடரைச் சென்னை ஆளுநர் கன்னாட் பிரபு தொடங்கி வைத்தார். அவையின் பதவிக்காலம் மூன்றாண்டுகளாக இருந்தது. இரட்டை ஆட்சிமுறைக் காலத்தில் மொத்தம் ஐந்து முறை (1920, 1923, 1926, 1930 மற்றும் 1934) தேர்தல் நடைபெற்றது. 1926 இலும் 1930 இலும் அமைக்கப்பட்ட அவைகளின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. 1920, 23, 30 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் நீதிக்கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. 1926 இல் நடைபெற்ற தேர்தலில் எக்கட்சிக்கும் பெருமான்மை கிட்டவில்லை. 1934 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்தாலும் சிறுபான்மை அரசமைத்தது.[3][7]

மாநில சுயாட்சி (1937-50) தொகு

தொகுதி வகைகள்[3][8]
தொகுதிகள் எண்ணிக்கை
பொது 35
முஸ்லிம்கள் 7
இந்திய கிருத்துவர்கள் 3
ஐரோப்பியர்கள் 1
ஆளுனர் நியமனம் 8-10
மொத்தம் 54-56

1935 இல் இந்திய அரசாங்கச் சட்டம், 1935 ஐ இயற்றியதன் மூலம் பிரிட்டிஷ் அரசு இரட்டை ஆட்சிமுறையை ஒழித்து மாநில சுயாட்சி முறையை அறிமுகப்படுத்தியது. சென்னை மாகாண சட்டமன்றம் ஈரங்க அவையாக மாற்றப்பட்டது. 215 உறுப்பினர்களைக் கொண்ட கீழவை ”லெஜிஸ்லேட்டிவ் அசம்பிளி” (Legislative Assembly) என்றும் 54 முதல் 56 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ”லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” (Legislative Council) என்றும் அழைக்கப்பட்டன. கீழவையில் சிறுபான்மை இனத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தது.[3][9] மேலவை ஆளுநரால் கலைக்கப்பட முடியாத நிரந்தர அவையாக இருந்தது. அதன் உறுப்பினர்களின் பதவிகாலம் ஆறாண்டுகள். அவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் ஈராண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெற்றனர். மேலவை உறுப்பினர்களுள் 46 பேர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆளுநருக்கு 8 முதல் 10 உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரம் இருந்தது. கீழவையைப் போலவே மேலவையிலும் பல்வேறு தரப்பினருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இரட்டை ஆட்சிமுறையைப் போலவே வயது வந்த குடிமக்கள் அனைவருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள சொத்து வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப் பட்டது.[10] சென்னை மாகாணத்தின் மக்கள் தொகையில் 15 % (சுமார் எழுபது லட்சம் பேர்) வாக்குரிமை பெற்றிருந்தனர்.[9] மாநில சுயாட்சி முறையின் கீழ் இரு முறை (1937 மற்றும் 1946) சட்டமன்ற மேலவை கூட்டப்பட்டது. இரு அவைகளிலும் இந்திய தேசிய காங்கிரசு கட்சி பெரும்பான்மை பெற்றிருந்தது.

இந்தியக் குடியரசு (1950-86) தொகு

1947 இல் இந்தியா விடுதலையடைந்து 1950 இல் குடியரசு நாடானது. புதிய இந்திய அரசியலமைப்பின் கீழ் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் சென்னை மாநிலத்தின் (பிரித்தானியாவின் இந்தியாவின் சென்னை மாகாணம், இந்தியக் குடியரசில் சென்னை மாநிலம் என்று வழங்கப்பட்டது) ஈரங்க சட்டமன்றத்தின் மேலவையாக நீடித்தது. இந்த அவை ஆளுநரால் கலைக்கப்பட முடியாத நிரந்தர அவையாக இருந்தது. அதன் உறுப்பினர்களின் பதவிகாலம் ஆறாண்டுகள். அவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் ஈராண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெற்றனர். அவையின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தபட்சம் நாற்பதிலிருந்து அதிகபட்சம் கீழவை உறுப்பினர் எண்ணிகையில் மூன்றிலொரு பங்காக இருந்தது. உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் கீழில் உள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளன.

விகிதம் தேர்ந்தெடுக்கும் முறை
1/6 கலை, அறிவியல், இலக்கியம், கூட்டுறவு, சமூக சேவை போன்ற துறைகளில் தலைசிறந்த பணியாற்றியவர்கள்; அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவர்
1/3 சட்டமன்ற கீழவையின் உறுப்பினர்களால் விகிதாச்சார பிரநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
1/3 மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்
1/12 இளங்கலைப் பட்டம் பெற்ற பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
1/12 பள்ளி, கல்லூரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்

மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருந்தது. 1952-53 காலகட்டத்தில் அது 72 ஆக இருந்தது. அக்டோபர் 1, 1953 இல் ஆந்திர மாநிலம் பிரிந்து போனதால் 51 ஆகக் குறைந்தது. 1956 இல் 50 ஆகக் குறைந்த உறுப்பினர் எண்ணிக்கை 1957 இல் மீண்டும் உயர்ந்து 63 ஆனது. அதன் பின்னர் 1986 இல் மேலவை கலைக்கப்படும் வருடம் உறுப்பினர் எண்ணிக்கை 63 ஆகவே இருந்தது. உறுப்பினர்களுள் கீழவையும் உள்ளாட்சி அமைப்புகளும் தலா 21 பேரைத் தேர்ந்தெடுத்தன; ஆசிரியர்களும், பட்டதாரிகளும் 6 பேரைத் தேர்ந்தெடுத்தனர். மீதமுள்ள 9 பேர் அமைச்சரவையின் பரிந்துரைக்கேற்ப ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். மேலவை தன்னிச்சையாகச் சட்டங்களை இயற்றும் உரிமை பெற்றிருக்கவில்லை. கீழவையால் நிறைவேற்றப்பட்ட சட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உரிமை மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. இரு அவைகளுக்கும் முரண்பாடு ஏற்படுமெனில் கீழவையின் முடிவே இறுதியானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.[11][12][13] 1969 இல் சென்னை மாநிலம் “தமிழ் நாடு” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது, மேலவையின் பெயரும் ”தமிழ்நாடு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” என்று மாற்றப்பட்டது.[14]

கலைப்பு தொகு

1986 இல் எம். ஜி. ராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்) அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ்நாடு சட்டமன்ற மேலவையை கலைத்தது. எம்ஜியார் தமிழ்த் திரைப்பட நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலாவை அதிமுக சார்பில் மேலவைக்கு நியமனம் செய்ய முடிவு செய்தார். ஏ. பி. சாந்தி என்ற இயற்பெயர் கொண்ட நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிர்மலா முன்பு ஒருமுறை திவாலானவர். இந்திய அரசியலமைப்பின் 102-(1)c பிரிவின் படி திவாலான ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவோ மாநில சட்டமன்றங்களின் உறுப்பினராகவோ ஆக முடியாது. ஏப்ரல் 21 ஆம் தேதி, எஸ். கே. சுந்தரம் என்ற வழக்கறிஞர் இதனைக் குறிப்பிட்டு நிர்மலாவின் நியமனத்தை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். நிர்மலாவின் கடன்களை அடைப்பதற்காக எம்ஜியார் அதிமுக கட்சி நிதியிலிருந்து 4,65,000 ரூபாய்களை கடனாக நிர்மலாவுக்கு அளித்தார். இதன் மூலம் நிர்மலாவின் திவால் நிலையை மாற்ற முயன்றார்.[15][16] சென்னை மாநில நகரங்கள் திவால் சட்டம் 1909 இன் 31 ஆம் பிரிவின் படி, கடன்களை முழுமையாக அடைத்துவிட்ட ஒருவரின் திவால் நிலை நீக்கிக் கொள்ளப்பட வேண்டுமென நிர்மலாவின் வழக்கறிஞர் சுப்ரமணியம் பிச்சை வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி, நிர்மலா திவாலானவர் அல்ல என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு நிர்மாலாவின் நியமனத்தை செல்லும்படியாக்கியது. ஆனால் திடீரென நிர்மலா தனது வேட்புமனுவை திருப்பிப் பெற்றுக் கொண்டார். இந்தச் சம்பவம்குறித்து சென்னை ஆளுனர் சுந்தர் லால் குராணா முதல்வர் எம்ஜியாரிடம் எப்படி திவாலான ஒருவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விளக்கம் கேட்டார். இதனால் கோபம் கொண்ட எம்ஜியார் மேலவையைக் கலைக்க உத்தரவிட்டார்.[17][18][19][20][21] சட்டமன்ற மேலவையை கலைக்க மே 14 ஆம் தேதி கீழவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை (நீக்கம்) சட்டம், 1986 இல் நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்ட் 30, 1986 இல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. நவம்பர் 1, 1986 இல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்து சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்டது.[3]

மீட்டுருவாக்கமும் கைவிடலும் தொகு

2006 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தேர்தல் அறிக்கையில் கலைக்கப்பட்ட மேலவையை மீண்டும் அமைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் 1989, 1996 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்ற போதும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அப்போதெல்லாம் மேலவையை மீண்டும் கொண்டு வருவதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போதிய ஆதரவில்லாததால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. திமுக அரசுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிமுக அரசுகள் திமுக வின் தீர்மானங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டன. 2006 இல் மு. கருணாநிதி ஐந்தாவது முறையாகத் தமிழக முதல்வரான பின் அதற்கான பணிகள் தொடங்கின. மே 24, 2006 இல் தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் ஆளுநர் உரையில் மேலவையை மீண்டும் கொண்டுவர சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என்ற குறிப்பு இடம் பெற்றிருந்தது. நான்காண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 12, 2010 இல் தமிழக சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[11][17][22][23] மே 4, 2010 இல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைச் சட்டம், 2010 ஐ நடுவண் அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.[24] அடுத்த இரு நாட்களில் அந்தச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.[25] 30 செப்டம்பர் 2010 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் மேலவை தொகுதிகள் பட்டியலை வெளியிட்டார்.[26] மேலவையை மீண்டும் அமைப்பதற்கான பணிகள் நடந்தன. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வரான பின்னர், இம்மீட்டுருவாக்கம் கைவிடப்பட்டது.[27]

மேலவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் தொகு

தமிழ்நாடு சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினர்கள் இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 1952 இல் ராஜகோபாலாச்சாரி ஆளுநர் ஸ்ரீ பிரகாசாவால் மேலவைக்கு நியமனம் செய்யப்பட்டு முதல்வரானார். 1967 இல் முதல்வராகப் பதவியேற்ற கா. ந. அண்ணாதுரை முதல்வரான பின் மேலவைக்கு கீழவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[28][29][30][31]

அவைத் தலைவர்கள் தொகு

1861-1937 காலகட்டத்தில் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலின் அவைத்தலைவர் பிரசிடன்ட் (President of the Council) என்றழைக்கப்பட்டார். 1861 இல் உருவாக்கப்பட்ட நாள் முதல் 1920 இல் சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சிமுறை உருவாகும் வரை சென்னை மாகாண ஆளுநரே கவுன்சிலின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தார். இரட்டை ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின் இந்தியர்கள் அவைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். முதலிரண்டு இந்திய அவைத்தலைவர்களான பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரியும் எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளையும் ஆளுநரால் நேரடியாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்குப் பின் வந்த அவைத்தலைவர்களை அவையின் உறுப்பினர்களே தேர்ந்தெடுத்தனர். 1937-86 காலகட்டத்தில் கவுன்சிலின் அவைத்தலைவர் சேர்மன் (Chairman of the Council) என்றழைக்கப்பட்டார்.[32] கவுன்சிலின் அவைத்தலைவர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[7][33][34][35]

# பெயர் தொடக்கம் முடிவு கட்சி
சென்னை மாகாண ஆளுநர்கள் (1861–1920)
1 வில்லியம் தாமஸ் டெனிசன் 18 ஃபெப்ரவரி 1861 26 நவம்பர் 1863
2 எட்வர்ட் மால்ட்பி (தற்காலிகம்) 26 நவம்பர் 1863 18 ஜனவரி 1864
3 வில்லியம் தாமஸ் டெனிசன் 18 ஜனவரி 1864 27 மார்ச் 1866
4 ஃபிரான்சில் நேபியர் (நேபியர் பிரபு) 27 மார்ச் 1866 19 ஃபெப்ரவரி 1872
5 அலெக்சாண்டர் ஜான் அர்புத்நாட் (தற்காலிகம்) 19 ஃபெப்ரவரி 1872 15 மே 1872
6 வியர் ஹென்றி ஹோபார்ட் (ஹோபார்ட் பிரபு) 15 மே 1872 29 ஏப்ரல் 1875
7 வில்லியம் ரோஸ் ராபின்சன் (தற்காலிகம்) 29 ஏப்ரல் 1875 23 நவம்பர் 1875
8 பக்கிங்காம் பிரபு 23 நவம்பர் 1875 20 டிசம்பர் 1880
9 வில்லியம் ஹட்டல்ஸ்டன் (தற்காலிகம்) 24 மே 1881 5 நவம்பர் 1881
10 மோன்ட்ஸ்டூவர்ட் எல்ஃபின்ஸ்டோன் கிராண்ட் டஃப் 5 நவம்பர் 1881 8 டிசம்பர் 1886
11 ராபர்ட் போர்க் (கன்னிமாரா பிரபு) 8 டிசம்பர் 1886 1 டிசம்பர் 1890
12 ஜான் ஹென்றி கார்ஸ்டின் 1 டிசம்பர் 1890 23 ஜனவரி 1891
13 பென்ட்லி லாலி (வென்லாக் பிரபு) 23 ஜனவரி 1891 18 மார்ச் 1896
14 ஆர்தர் எலிபாங்க் ஹேவ்லாக் 18 மார்ச் 1896 28 டிசம்பர் 1900
15 ஆர்தர் ரசல் (ஆம்ப்ட்ஹில் பிரபு) 28 டிசம்பர் 1900 30 ஏப்ரல் 1904
16 ஜேம்ஸ் தாம்சன் (தற்காலிகம்) 30 ஏப்ரல் 1904 13 டிசம்பர் 1904
17 ஆர்தர் ரசல் (ஆம்ப்ட்ஹில் பிரபு) 13 டிசம்பர் 1904 15 ஃபெப்ரவரி 1906
18 கேப்ரியல் ஸ்டோல்ஸ் (தற்காலிகம்) 15 ஃபெப்ரவரி 1906 28 மார்ச் 1906
19 ஆர்தர் லாலி (வென்லாக் பிரபு) 28 மார்ச் 1906 3 நவம்பர் 1911
20 தாமஸ் கிப்சன்-கார்மைக்கேல் (கார்மைக்கேல் பிரபு) 3 நவம்பர் 1911 30 மார்ச் 1912
21 முர்ரே ஹாமிக் (தற்காலிகம்) 30 மார்ச் 1912 30 அக்டோபர் 1912
22 ஜான் சின்க்ளையர் (பென்ட்லான்ட் பிரபு) 30 அக்டோபர் 1912 29 மார்ச் 1919
23 அலெக்சாண்டர் கார்டியூ 29 மார்ச் 1919 10 ஏப்ரல் 1919
24 ஃபிரீமான் ஃபிரீமான்-தாமஸ் (வில்லிங்க்டன் பிரபு) 10 ஏப்ரல் 1919 12 ஏப்ரல் 1924
இரட்டை ஆட்சிமுறை (1920–1937)
1 பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி 1920 1923 கட்சி சார்பற்றவர்
2 எல். டி. சாமிகண்ணு பிள்ளை 1923 செப்டம்பர் 1925 நீதிக்கட்சி
3 எம். ரத்தினசாமி செப்டம்பர் 1925 1926
4 சி. வி. எஸ். நரசிம்ம ராஜூ 1926 1930 சுயாட்சிக் கட்சி
5 பி. ராமசந்திர ரெட்டி 1930 1937 நீதிக்கட்சி
மாநில சுயாட்சி (1937–1946)
1 யு. ராமா ராவ் 1937 1945 இந்திய தேசிய காங்கிரசு
இந்தியக் குடியரசு (1950–1986)
1 ஆர். பி. ராமகிருஷ்ண ராஜூ 1946 1952 இந்திய தேசிய காங்கிரசு
2 டாக்டர் பி. வி. செரியன் 1952 20 ஏப்ரல் 1964 இந்திய தேசிய காங்கிரசு
3 எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் 1964 1970 இந்திய தேசிய காங்கிரசு
4 சி. பி. சிற்றரசு 1970 1976 திமுக
5 ம. பொ. சிவஞானம் 1976 1986 தமிழரசுக் கழகம்

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 S. Krishnaswamy (1989). The role of Madras Legislature in the freedom struggle, 1861-1947. People's Pub. House (New Delhi). பக். 5–70.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Krishnaswamy" defined multiple times with different content
  2. K. C. Markandan (1964). Madras Legislative Council; Its constitution and working between 1861 and 1909. S. Chand & CO. பக். 76. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "The State Legislature - Origin and Evolution". தமிழ்நாடு Government. Archived from the original on 13 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help) பிழை காட்டு: Invalid <ref> tag; name "tnassembly" defined multiple times with different content
  4. 4.0 4.1 "Tamil Nadu Legislative Assembly". Government of India. Archived from the original on 2 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 17 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Rajaraman, P. (1988). The Justice Party: a historical perspective, 1916-37. Poompozhil Publishers. பக். 206. http://books.google.com/books?id=GGMmAAAAMAAJ. 
  6. Mithra, H.N. (2009). The Govt of India ACT 1919 Rules Thereunder and Govt Reports 1920. BiblioBazaar. பக். 186–199. ISBN 1-113-74177-5, ISBN 978-1-113-74177-6. http://books.google.com/books?id=aw5r4QyRijMC&pg=RA2-PA186. 
  7. 7.0 7.1 Rajaraman, P. (1988). The Justice Party: a historical perspective, 1916-37. Poompozhil Publishers. பக். 212–220. http://books.google.com/books?id=GGMmAAAAMAAJ. 
  8. "Tamil Nadu Legislative Assembly". Indian Government. Archived from the original on 2 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 25 November 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. 9.0 9.1 Christopher Baker (1976), "The Congress at the 1937 Elections in Madras", Modern Asian Studies, 10 (4): 557–589
  10. Low, David Anthony (1993). Eclipse of empire. Cambridge University Press. பக். 154. ISBN 0-521-45754-8, ISBN 978-0-521-45754-5. http://books.google.com/books?id=QBaYddlnKBEC&pg=PA154. 
  11. 11.0 11.1 Ramakrishnan, T (8 April 2010). "Legislative Council had chequered history". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 8 April 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. "Public Administration Special", Pratiyogita Darpan, 2 (22): 60, 2008
  13. Sharma, B. K. (2007). Introduction to the Constitution of India. PHI Learning Pvt. Ltd. பக். 207–218. ISBN 81-203-3246-6, ISBN 978-81-203-3246-1. http://books.google.com/books?id=srDytmFE3KMC&pg=PA207. 
  14. "C. N. Annadurai: a timeline". தி இந்து. தி இந்து குழுமம். 2009-09-15. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.[தொடர்பிழந்த இணைப்பு]
  15. "Rs. 4.5 lakh-fine slapped on `Vennira Aadai' Nirmala". தி இந்து. தி இந்து குழுமம். 2002-06-14. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.[தொடர்பிழந்த இணைப்பு]
  16. "Court imposes Rs. 4.65-lakh fine on Vennira Adai Nirmala". தி இந்து. தி இந்து குழுமம். 2007-06-06. Archived from the original on 2007-06-08. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.
  17. 17.0 17.1 "TN to get back Upper House". ரெடிப்.காம். 2006-05-24. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.
  18. indiaabroad (2009-03-04). "Jayaprada's status as MP in jeopardy". யாகூ!. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.[தொடர்பிழந்த இணைப்பு]
  19. ராண்டார் கை (2009-03-17). "Crime Writer's Casebook-ANJALI DEVI CASE-2". Galatta. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.[தொடர்பிழந்த இணைப்பு]
  20. ராண்டார் கை (2009-03-26). "Crime writer's casebook- Vennira Aadai Nirmala Case-2". Galatta. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.[தொடர்பிழந்த இணைப்பு]
  21. India Today, Vol 11 (1986). Council Caper. Living Media. http://books.google.com/books?lr=&client=firefox-a&cd=1&id=u-YOAQAAIAAJ&dq=tamil+nadu+legislative+council+abolition+actress&q=nirmala#search_anchor. பார்த்த நாள்: 2009-12-23. 
  22. "Assembly votes for Legislative Council". The Hindu. 12 April 2010. பார்க்கப்பட்ட நாள் 13 April 2010.
  23. Arun Ram (2006-05-26). "Tamil Nadu to have Upper House". Daily News and Analysis. Diligent Media Corporation. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.
  24. "Cabinet clears State Legislative Council proposal". The Hindu. 4 May 2010. http://beta.thehindu.com/news/cities/Chennai/article421898.ece. பார்த்த நாள்: 5 May 2010. [தொடர்பிழந்த இணைப்பு]
  25. "Parliament nod for Council Bill". The Hindu. 6 May 2010 இம் மூலத்தில் இருந்து 9 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100509111118/http://beta.thehindu.com/news/states/tamil-nadu/article423517.ece. பார்த்த நாள்: 7 May 2010. 
  26. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-10-27.
  27. "Legislative Council will not be revived: Jayalalithaa". Archived from the original on 2011-05-27. பார்க்கப்பட்ட நாள் 2011-06-07.
  28. C. V. Gopalakrishnan (2001-05-31). "Of Governors and Chief Ministers". தி இந்து. தி இந்து குழுமம். Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2009-12-17.
  29. T. V. R. Shenoy (22 August 2001). "From Rajaji to Jayalalithaa". Rediff. http://www.rediff.com/news/2001/aug/22flip.htm. 
  30. Pushpa Iyengar, Sugata Srinivasaraju, "Where The Family Heirs Loom", Outlook India, பார்க்கப்பட்ட நாள் 16 November 2009
  31. Gopal K. Bharghava, Shankarlal C. Bhatt. Land and people of Indian states and union territories. 25. Tamil Nadu. Delhi: Kalpaz Publications. பக். 525. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8178353563. http://books.google.com/books?id=wyCoMKZmRBoC&pg=PA525&dq=1967+Tamil+Nadu+election#v=onepage&q=1967%20Tamil%20Nadu%20election&f=false. 
  32. Johari, J. C. THE CONSTITUTION OF INDIA A Politico-Legal Study. Sterling Publishers Pvt. Ltd. பக். 226. ISBN 81-207-2654-5, ISBN 978-81-207-2654-3. http://books.google.com/books?id=JDWjAzP0mHEC&pg=PA226. 
  33. "Legislative Council to be revived: Karunanidhi". The Hindu. 7 April 2010. பார்க்கப்பட்ட நாள் 5 May 2010.
  34. Naidu, R. Janardhanam; K. Ramalingam, V. Subbiah. Bharani's Madras handbook. http://books.google.com/books?lr=&client=firefox-a&cd=4&as_brr=0&id=oG8dAAAAMAAJ&dq=cherian+rama+rao+madras+legislative+council&q=rama+rao#search_anchor. 
  35. "List of Governors of Madras, Provinces of British India". Worldstatesman. பார்க்கப்பட்ட நாள் 5 May 2010.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_சட்ட_மேலவை&oldid=3845082" இலிருந்து மீள்விக்கப்பட்டது