தமிழ்ப் பண்பாட்டு மையம்


தமிழ்ப் பண்பாட்டு மையம்தொகு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பல துறை, மையங்கள், புலங்களில் தமிழ்ப் பண்பாட்டு மையமும் (Centre for Tamil Culture) ஒன்றாகும். பண்பாட்டு உணர்வுகளைப் பேணவும், பண்பாட்டு மரபுகளைப் போற்றிக் காக்கவும் இம்மையம் தொடர்ந்து இயங்கி வருகிறது.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் தோற்றம்தொகு

தமிழகத்தின் தென்பகுதியாக விளங்குவது செட்டி நாட்டுப் பகுதியாகிய காரைக்குடியாகும். இப்பகுதியில் வாழும் இளம்பருவத்தோர் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று கனவு கண்டவர் வள்ளல் ராம. அழகப்பச் செட்டியார் ஆவார். அக்கனவு நனவாகிய விதமாக அவருடைய பெயரில் 1985-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழக அரசின் சிறப்புச் சட்ட விதிகளின்படி அழகப்பர் கல்லூரியில் இருந்த முதுகலைத் துறைகள் இணைந்து அழகப்பா பல்கலைக்கழகம் உருவானது.

பல்கலைக் கழகத்தின் நோக்கங்களும் தகுதிகளும்தொகு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் 420 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் நான்கு புலங்கள், 34 துறைகள், 7 மையங்கள், 3 உறுப்புக் கல்லூரிகள், 39 இணைப்புக் கல்லூரிகள் எனப் பரந்து வளர்ந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் தன்னுடைய நோக்கங்களாக, கற்பித்தல், ஆய்வுக்கு முக்கியத்துவம் அளித்து ஆய்வை மேன்மையடையச் செய்தல், அனைவருக்கும் கல்வி அளித்தல், கல்வியறிவைப் பரவலாக்கல், சமுதாயத்தோடு தொடர்புடைய கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுதல் என்பனவற்றைக் கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, அதனுடைய முதற் கொள்கையாக, செயலிற் செம்மை என்பதைத் தனது இலச்சினையிலும் இலக்கிலும் கொண்டுள்ளது. இன்றைய நிலையில் தென்னிந்திய அளவில் பல்கலைக்கழகங்களில் முதலிடமும் தேசியத் தர நிர்ணயக் குழுவின் மூன்றாம் சுற்றுத் தரமதிப்பீட்டில் ('A+' (3.64 CGPA) என்னும் தகுதியும் பெற்றுத் திகழ்கிறது.

தமிழ்ப் பண்பாட்டு மையம்தொகு

இத்தகைய சிறப்பு மிக்க அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2016 ஆண்டு பிப்ருவரி மாதம் 12- ஆம் நாள் தமிழ்ப் பண்பாட்டு மையம் தோற்றுவிக்கப்பட்டது.

தமிழ்மொழியைத் தெய்வமாகத் தமிழ்த்தாயாக வழிபடும் வழக்கம் தென்பகுதிக்கு உரிய சிறப்பாகும். அதற்கும் மேலாகத் தமிழ்த்தாய்க்குத் திருவுருவச் சிலை செய்து தமிழ்த்தாய்  கோயில் எழுப்பி வழிபட்டு வருவது காரைக்குடியின் சிறப்பாகும்.

வட்டார வழக்குக்கேற்பவும் தமிழை வெறும் மொழியாகக் கொள்ளாமல் தம் இனத்தின் உயிர்ப்பும் உணர்வுமாகக் கருதும் பண்பாட்டைத் தனது பெயரில் கொண்டுள்ளது அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகும்.

பொருளும் விளக்கமும்தொகு

பண்பாடு என்பது ஆழமான பரந்து விரிந்த பொருளை உடைய ஒரு சொல். பண்பு என்பது தனிமனிதப் பண்பையும் பண்பாடு என்பது ஒரு சமூகத்தையும் குறிப்பதாகும். மக்கள் சமூகத்தின் பக்குவப்பட்ட தெளிந்த மன இயல்புடன் கூடிய நடத்தை நெறியே பண்பாடு ஆகும். பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்[1] பண்புடையார் பட்டுண்டு உலகம்[2] என்றெல்லாம் நம் இலக்கியங்கள் உரைப்பது பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து பெற்ற பண்பாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கூற்றுகளாகும்.

பட்டயப் படிப்புதொகு

தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில் தமிழ்ப் பண்பாட்டுப் பட்டயச் சான்றிதழ் படிப்பு 2017-18ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப் பெற்று தொடர்ந்து வருகிறது.

அருங்காட்சியகம்தொகு

இப்பண்பாட்டைத் தமிழர் வாழ்வில் இன்றும் என்றும் காக்கத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இணைப்பாக அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழினம் உலகில் தோன்றிய பழங்குடியாகும். உலக அரங்கில் தமிழர்கட்கு நிகராகக் கருதப்படும் கிரேக்கர், உரோமாபுரியினர், எகிப்தியர், பாரசீகியர், மெசபடோமியர் போன்றோர்தம் பண்பாடு காலத்தால் அழிந்து விட்டது, ஆதலால், தமிழ்ப் பண்பாடும் அத்தகைய நிலையை அடைந்து விடக்கூடாது என்பதற்காகவே தமிழ்ப் பண்பாட்டு மையமும் தமிழ்ப் பண்பாட்டு அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகத்தில்...தொகு

அருங்காட்சியகத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்தம் குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் திணைநிலை வாழ்வியல் தொல்காப்பியம் குறிப்பிடும் முதற்பொருள் கருப்பொருள் அடிப்படையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பண்பட்ட செம்மார்ந்த நாகரீக வாழ்க்கை வாழ்ந்த பண்டைத்தமிழரின் வரலாறு வாழ்வியல் நெறிமுறை படக் காட்சியாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டைத் தமிழரசர்கள் ஆகிய சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்களின் ஓவியம் அவர்தம் இலச்சினையுடன் வரையப் பெற்றுள்ளது. தமிழர்களின் ஓவியங்களாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறை ஓவியங்கள், சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், தஞ்சைப் பெரிய கோயில் ஓவியம் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

பண்டைத்தமிழரின் வாழ்விடமான கூரை வீடு ஒன்றும் மாதிரியாக அமைக்கப்பட்டுள்ளது. கூரை வீட்டைச் சுற்றிலும் கம்பு, கேழ்வரகு, தினை, சோளம், நெல் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தமிழர்களின் வீடுகளில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட புழங்கு பொருள்களான மண்பாண்டங்கள் செம்பு, பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் வழிபாட்டுக் கருவிகள், விளையாட்டுக் கருவிகள், இசைக்கருவிகள், ஆடைகள், அணிகலன்கள், உழவுக்கருவிகள், பல்வேறு தொழில்சார் கருவிகள், போர்க்கருவிகள், உணவு தானியங்கள் போன்றவற்றைப் பாதுகாத்து வைக்கும் மண்குதிரை, ஓலைச்சுவடி, எழுத்தாணி போன்ற கற்றல்- கற்பித்தல் கருவிகள், மாட்டு வண்டி, கூட்டு வண்டி போன்ற போக்குவரத்துச் சாதனங்கள், கைவினைப் பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்த்தாய் மற்றும் தமிழ்ப் புலவர்களான ஔவையார், இளங்கோவடிகள், கம்பர் மற்றும் பாரதியார், சிவகங்கை மாவட்டச் சுதந்திரப் போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியார் போன்றோர் திருவுருவச் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

செயற்பாடுகள்தொகு

தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பாக தமிழர்தம் பண்பாடு, கலை ஆகியவற்றை ஆவணப்படுத்தும் விதமாக நான்கு பன்னாட்டுக் கருத்தரங்குகள், இரண்டு தேசிய கருத்தரங்குகள் ஆகியவை நடைபெற்றுள்ளன. இக்கருத்தரங்கக் கட்டுரைகளைத் தொகுத்து சர்வதேச நூலக எண்ணுடன் தொகுப்பு நூலாகப் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது. பண்பாடு குறித்த பல்வேறு சிறப்புத் தகவல்களுடனும் ஆய்வுத் தரவுகளுடனும் இத்தொகுப்பு அமைந்துள்ளது. இதுதவிர, வேரும் விழுதும் என்னும் பெயரில் ஆராய்ச்சி இதழ் ஒன்றும் தேமதுரம் என்னும் பெயரில் மின்னிதழ் ஒன்றும் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில் மேலும் தொடர்ந்து வெளியாகி வருகிறது


வெளி இணைப்புகள்தொகு

  1. https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/dec/08/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3300328.html
  2. https://www.vikatan.com/government-and-politics/education/109108-tamil-cultural-museum-opened-at-alagappa-university
  1. . 
  2. .