தமிழ் இணையச் சிற்றிதழ்கள்

உலகை உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்ட கணிப்பொறிகளின் பங்கும் பயன்பாடும் தேவை என்றாகி விட்டது. குறிப்பாகத் தகவல் தொடர்புத் துறையில் கணிப்பொறிகளும் அதன் வழியிலான இணையத் தொடர்புகளும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டன. இணையத் தொடர்பு வாயிலாக உலகில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பல்வேறு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. இணையப் பயன்பாட்டின் அதிகரிப்பிற்குப் பின்பு அச்சு ஊடகங்களில் வெளியாகும் சில தமிழ்ச் செய்தித்தாள்களும், இதழ்களும் இணையத்தில் இடம் பெறத் தொடங்கின. தற்போது அச்சு ஊடகத்தில் வெளிவராத பல இதழ்கள் இணையத்தில் புதிதாக வலம் வரத் தொடங்கியிருக்கின்றன. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பண்பாடுகள், வாழ்வியல் நெறிமுறைகள் என்று பல புதிய தகவல்களையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

தமிழ் முதல் இணைய இதழ்தொகு

ஒரு நிறுவனத்தின் அல்லது அமைப்பின் முழுமையான தகவல்களை எழுத்துக்களாகவோ, படங்களாகவோ அல்லது இரண்டுமாகச் சேர்த்துத் தரக்கூடியது இணையதளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. “1995 ஆம் ஆண்டில் ”கணியன்” (www.kanian.com) என்கிற பெயரில் செய்யப்பெற்ற வலையேற்றம்தான் தமிழில் முதலில் செய்யப்பட்ட இணையதளம்” என்கிறார்கள்.

அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்து விதமான படைப்புகளையும் இணைய தளங்களில் அச்சு இதழ்களைப் போன்று பகுதிகளாகவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும் படிக்கவும் வாய்ப்பாக இணைய இதழ்களாக உருவாக்கினர். இவ்வாறு உருவாக்கப்பட்ட இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழ் “தமிழ் சினிமா” (www.tamilcinema.com) தான் என்கிறார் இதன் ஆசிரியர் மா. ஆண்டோ பீட்டர். ஆனால் 1992-93 ஆண்டுகளில் எஸ்.சி. தமிழ் இலக்கிய மன்றம் , “அ” என்று ஒரு மின்னிதழை நடத்தியது. இதுதான் முதல் தமிழ் மின்னிதழாக இருக்க வேண்டும் என்று கு.கல்யாணசுந்தரம் என்பவர் தெரிவிக்கிறார்.

இதனால் முதல் தமிழ் இணைய இதழ் மற்றும் முதல் தமிழ்த் தளம் எது என்பதிலான கருத்து வேறுபாடுகள் இன்னும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன.

வலைப்பூக்கள்தொகு

இணைய இதழ்களைப் போன்றே தனிப்பட்ட சிலரின் கருத்துக்கள், படைப்புகள், படங்கள் என்று சிலரால் வலைப்பதிவு செய்யப்படுகின்றது. தனியார் நிறுவனங்கள் இதற்கான வலைப்பதிவு இட வசதிகளை இலவசமாக வழங்கி வருகின்றது. தமிழில் செய்யப்படும் இந்த வலைப்பதிவுகளைத் தமிழ் வலைப்பூக்கள் (Tamil Blogs) என்கிறார்கள். “இந்த தமிழ் வலைப்பூக்கள் தமிழர் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. பூகோள ரீதியாக எந்தப் பிரச்சனையுமில்லாமல் தமிழர்கள் நண்பர்கள் வட்டம் அமைத்துக் கொள்கிறார்கள். நிறைய ஆக்கங்களைத் தமிழில் உருவாக்குகிறார்கள். பகிர்ந்து கொள்கிறார்கள். வலைப்பதிவு தமிழ் மொழியின் முக்கியமான பரிணாம வளர்ச்சி. தமிழில் புது ரத்தம் பாயந்தது போன்ற உற்சாகம்” என்கிறார் திசைகள் இணைய இதழ் ஆசிரியரான அருணா சீனிவாசன்.

இந்த தமிழ் வலைப்பூக்களில் முதல் வலைப்பதிவை நவன் என்பவர் 2003-ம் ஆண்டில் ஜனவரி 26ல் உருவாக்கினார் என்று இந்த வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நவன் பதிவிற்கு முன்பே கார்த்திக்ராமாஸ் என்பவர் 2003-ம் ஆண்டில் ஜனவரி முதல் தேதியன்றே ஒரு வலைப்பதிவு செய்திருக்கிறார் என்று சிந்தாநதி இணைய இதழில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த இரு வலைப்பதிவுகளில் நவன் செய்த வலைப்பதிவுதான் அனைவருக்கும் தெரிந்த முதல் வலைப்பதிவாக இருக்கிறது.

வலைப்பூக்களைப் புதுப்பிப்பதற்கு கால அளவிலான வரைமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. வலைப்பதிவர்கள் விரும்பும்போது மட்டும் வலைப்பதிவு செய்யப்படுகின்றது.

சிற்றிதழ்கள்தொகு

வணிக இதழ்களின் செயல்பாட்டில் பிடித்தமில்லாத நிலையிலும், ஒரு படைப்பாளன் தனது படைப்புகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை வெளியிடப்படாமல் நிராகரிக்கப்படும் நிலையிலும் தனது கருத்துக்களை மாற்று வழியில் வெளிப்படுத்த விரும்பியவர்கள் கொண்டு வந்ததுதான் பெரும்பான்மையான சிற்றிதழ்கள். இந்தச் சிற்றிதழ்களின் பெயர்கள் கூட சற்று வித்தியாசமாக இருக்கும். சில சிற்றிதழ்களுக்கு ஓரெழுத்துத் தலைப்பாக ‘அ’, ‘ஓ’, ‘ழ’ என்று பெயரிடப்பட்டன. சில சிற்றிதழ்களுக்கு ‘சுண்டெலி’, ‘வெட்டிப்பயல்’, ‘மாமியா’ என்று நகைச்சுவையாகப் பெயர்கள் வைக்கப்பட்டது. ‘இலக்கிய வட்டம்’, ‘கசடதபற’, ‘சதங்கை’, ‘சூறாவளி’ என்று சிறப்பான பெயர்கள் கூட சில சிற்றிதழ்களுக்கு வைக்கப்பட்டன.

குறுகிய வட்டத்துக்குள் குறைவான வாசகர்களைக் கொண்டு கையெழுத்துப் பிரதியாகவோ, குறைந்த அளவிலான அச்சுப்பிரதியாகவோ அந்த சிற்றிதழ் வெளிக்கொண்டு வருபவரது கருத்துக்களையும், அவருடைய கருத்துக்களைச் சார்ந்துள்ள கருத்துக்களையும் அதிகமாகக் கொண்டு வெளியாகி வருவது என்கிற ஒரு வரையறைக்குள்தான் இந்த சிற்றிதழ்கள் இருக்கின்றன. இதனால் இந்த சிற்றிதழ்கள் அச்சிலும், படைப்பிலும் தரம் சற்று குறைவாகத்தான் இருக்கின்றன என்கிற கருத்து பரவலாக இருக்கிறது.

பெரிய இதழ்களில் கிடைக்காத நல்ல மதிப்பு மிக்க படைப்புகள் மட்டுமே இடம்பெறக் கூடிய ஒரு சில சிறப்பான சிற்றிதழ்களும் உண்டு. இந்த சிற்றிதழ்கள் தரம் மிக்க படைப்புகளை வெளியிட்டு இலக்கியச் சூழலில் ஒரு புதிய மாற்றத்தைக் கூட கொண்டு வந்தது. இதன் மூலம் சிற்றிதழ்களில் வெளியான பல படைப்புகள் மிகப்பெரும் பாராட்டுக்கும், விமர்சனத்துக்கும் கொண்டு வரப்பட்டன. இந்த சிற்றிதழ்களுக்காகத் தனியாக வாசகர்கள் உருவானதுடன் வாசகர் அமைப்புகளும் கூட துவங்கப்பட்டது. இந்த சிற்றிதழ்களில் அதிகமான இதழ்கள் வணிக நோக்கமின்றி வெளியிடப்படுவதாலும், தரமில்லாதிருப்பதாலும் பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாகத் தொடர்ந்து வெளியிட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் இந்த சிற்றிதழ்கள் துவங்கப்பட்ட சில மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ நிறுத்தப்பட்டு விடுகின்றன. சில இதழ்கள் மட்டும் தங்கள் வாழ்க்கையை நீடிக்கத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், “சிற்றிதழ் என்றாலே சிறந்த இதழ் என்றுதான் அர்த்தம். இதைத்தான் தற்போது சீரிதழ் என்றும் சொல்லி வருகிறார்கள். எனவே சிறந்த கருத்துக்களைச் சொல்லக்கூடிய எல்லா இதழ்களும் சிறந்த இதழ்கள்தான். இதில் சிறந்த இதழ் என்று பிரிக்க வேண்டிய அவசியமில்லை. எதிர்காலத்தில் தமிழ்ச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்” என்று சிற்றிதழ்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார் உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவர் கவிஞர் வதிலை பிரபா.

தமிழ் இணையச் சிற்றிதழ்கள்தொகு

  • அச்சில் வெளிவரும் தமிழ் சிற்றிதழ்களைப் போலவே இணையத்தில் வெளிவரும் பல தமிழ் இணைய இதழ்களும் உள்ளது. குறிப்பிட்ட எல்லைக்குள் குறைவான வாசகர்களைச் சென்றடையும் சிற்றிதழ்களைப்போல் இணைய இதழ்களுக்கான இணைய எல்லை விரிவாக இருந்தாலும் இணைய இதழ்களைப் படிக்க இணையம் பயன்படுத்தக்கூடிய திறன் இன்றியமையா தேவையாக உள்ளன. மேலும் இணையத்தைப் பயன்படுத்தும் பலருக்கும் தமிழில் இலக்கிய ஆர்வம் குறைவாக இருக்கிறது. இதனால் தமிழ் இணைய இதழ்களுக்கான வாசகர்கள் எல்லை அகலமானதாக இருக்கிற நிலையிலும் வாசகர்களது எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.
  • உலகில் புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழின் மேல் கொண்ட ஆர்வத்தாலும், தமிழனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் எண்ணத்திலும் தோற்றுவித்த தமிழ் இணைய இதழ்கள் அதிகமாக இருக்கின்றன. இவைகளுக்கான வாசகர்கள் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்த தமிழ் இணைய இதழ்களை சிற்றிதழ்களாகவே கருத வேண்டியிருக்கிறது.
  • அச்சு இதழ்கள் வளரும் எழுத்தாளர்கள் நெருங்க இயலாத அளவிலேயே உள்ளன. இணைய இதழ்கள் புதிய எழுத்தாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதுடன் அவர்களை வார்த்தெடுக்கும் பயிற்சிக் களங்களாகவும் அமைகின்றன. அந்த விதத்தில் இணைய இதழ்கள் இளைய சமுதாயத்தில் தமிழார்வத்தைத் தூண்டும், அணையாமல் பாதுக்காக்கும் அரிய பணிகளைச் செய்கின்றன. அதே சமயம் இணைய இதழ்கள் சிற்றிதழ்களைப் போல்தான் உள்ளது” என்கிற நிலாச்சாரல் இணைய இதழின் ஆசிரியரான நிலா என்கிற நிர்மலா ராஜீவின் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
  • அதிக வாசகர்களைக் கொண்டு அச்சுப் பிரதியாக வெளியாகும் பல நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்களில் பல இணைய இதழ்களாகவும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவை அச்சுப் பிரதியில் உள்ள படைப்புகளை அப்படியே இணையத்தில் வெளியிட்டு வருவதால் இவற்றை இணையச் சிற்றிதழ்களின் கீழ் கொண்டு வர இயலாது.
  • இது போல் வணிக நோக்கத்தில் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் செயல்பட்டு வரும் சில இணைய இதழ்கள் தமிழ் பதிவையும் கொண்டு இருக்கின்றன. இந்த இணைய இதழ்களின் தமிழ் வழியிலான வாசகர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும் மொத்தத்தில் அனைத்து மொழிகளின் பயன்பாட்டில் அதிக வாசகர்களைக் கொண்டிருக்கும் என்பதால் அவற்றையும் இணையச் சிற்றிதழ்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியாது.
  • இணையத்தில் மட்டுமே என வெளியாகும் அனைத்துத் தமிழ் இணைய இதழ்களையும், தமிழில் வெளியாகும் வலைப்பூக்களையும் கூட தமிழ் இணையச் சிற்றிதழ்கள் என்கிற ஒரு வரையரைக்குள் கொண்டு வரலாம்.

இவற்றையும் பார்க்கதொகு