தாயும் சேயும் (மைக்கலாஞ்சலோ)
தாயும் சேயும் அல்லது பியேட்டா (Pietà) என்பது உலகப் புகழ்பெற்ற கலைஞர் மைக்கலாஞ்சலோ என்பவரால் செதுக்கப்பட்டு, வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ள கலையழகு மிக்க பளிங்குச் சிலை ஆகும். இச்சிலை சிலுவையில் தொங்கி இறந்த இயேசுவை அவர்தம் அன்னை மரியா தம் மடியில் கிடத்தியிருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது.
"தாயும் சேயும்" பியேட்டா (Pietà) | |
---|---|
ஓவியர் | மைக்கலாஞ்சலோ |
ஆண்டு | 1498–1499 |
வகை | கர்ராரா பளிங்குக் கல் |
இடம் | புனித பேதுரு பெருங்கோவில், வத்திக்கான் நகரம் |
பியேட்டா சிலையின் அழகுத் தோற்றம்
தொகுமறுமலர்ச்சிக் காலப் பளிங்குச் சிலைகளுள் தலைசிறந்த ஒன்றாகக் கருதப்படும் "Pietà" என்னும் அழகிய சிலையை மைக்கலாஞ்சலோ போனோரோட்டி இரண்டே ஆண்டுகளில் (1498–1499) செதுக்கி முடித்தார். இச்சிலை வத்திக்கான் நகரில் புனித பேதுரு பெருங்கோவிலில் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே காலெடுத்து வைத்ததும் வலது புறமாக உள்ள முதல் பீடத்தில் இன்று அச்சிலை உள்ளது. எண்ணிறந்த சிலைகளைச் செதுக்கிய மைக்கலாஞ்சலோ இந்த ஒரு சிலையில் மட்டுமே தம் பெயரைப் பொறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[1]
மைக்கலாஞ்சலோ செதுக்கிய சிற்பங்களுள் மிகத் துல்லியமாக நிறைவுசெய்யப்பட்ட இச்சிலை சிலுவையில் தொங்கி இறந்த இயேசுவை அவர்தம் அன்னை மரியா தம் மடியில் கிடத்தியிருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலையில் மறுமலர்ச்சிக் காலச் சிறப்புகளையும் இயல்புக் கலைச் சிறப்புகளையும் ஒருங்கே காணலாம்.
பெயர் விளக்கம்
தொகுஇத்தாலிய மொழியில் "Pietà" என்று அழைக்கப்படும் இச்சிலையின் பெயர் இலத்தீனிலிருந்து பிறந்ததாகும். பண்டைய உரோமையர்கள் இலத்தீனில் "pietas" (ஆங்கிலம்: piety) என்னும் சொல்லைப் "பெற்றோர் மட்டில் பிள்ளைகளுக்கான கடமை" என்று புரிந்துகொண்டார்கள். அதிலிருந்து "கடவுளர் மட்டில் மனிதருக்குள்ள கடமை" என்னும் பொருளும் பிறந்தது. அன்னை மரியாவும் அவர்தம் மடியில் மகன் இயேசுவும் இருப்பதைத் தமிழில் "தாயும் சேயும்" என்று பெயர்க்கலாம்.
வடிவமமைப்பு
தொகு"தாயும் சேயும்" சிலையின் வடிவத்தை எடுத்துக்கொண்டால் அது ஒரு பிரமிட் அமைப்புடையதைக் காணலாம். மரியாவின் தலை பிரமிடின் உச்சிபோல் உள்ளது. அங்கிருந்து கீழே இறங்கி வர வர சிலை விரிந்து மரியா அணிந்திருக்கும் உடை, பின்னர் கொல்கத்தா மலைப் பாறை என்று அகன்று முடிகிறது. முழு வளர்ச்சியடைந்த ஒரு மனிதரை அவர்தம் தாய் தம் மடியில் தாலாட்டுவது போலச் சிலையை அமைக்க வேண்டியிருந்ததால் இரு உடல்களும் அளவில் பொருத்தமில்லாதிருக்கின்றன. மரியாவின் உடலின் பெரும்பகுதி அவர் அணிந்திருக்கும் போர்வை போன்ற உடையால் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள உறவு இயல்பான விதத்தில் வெளிப்படுகிறது.
"தாயும் சேயும்" சிலைகளை மைக்கலாஞ்சலோவுக்கு முன் செதுக்கிய கலைஞர்கள் மரியாவை வயது முதிர்ந்த பெண்மணியாகவும், இயேசுவின் உடலைச் சிலுவையில் துன்புற்று காயப்பட்ட உடலாகவும் காட்டுவது வழக்கம். ஆனால் மைக்கலாஞ்சலோ மரியாவை ஓர் எழில்மிக்க இளம் பெண்ணாகச் செதுக்கியுள்ளார். இயேசுவின் உடலும் காயங்களால் புண்பட்ட உடலாகச் செதுக்கப்படவில்லை. ஆணிகள் அறையப்பட்ட கைப்பகுதியிலும் ஈட்டி பாய்ந்த விலாப்பகுதியிலும் சிறியதோர் அடையாளம் மட்டுமே உள்ளது. இயேசுவின் முகத்தில் அவர் அனுபவித்த துன்பங்களின் அறிகுறி இல்லை. "தாயும் சேயும்" சிலை சாவைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக, அமைதி தவழும் மகனின் முகமே அங்கு தோற்றமளிக்கிறது. அம்மகன் தம்மையே கடவுளுக்குக் கையளித்து அமைதியில் துயில்கின்றார்.
மரியாவின் வலது கை இயேசுவின் தோளுக்குக் கீழே அவரைத் தாங்கிப் பிடித்திருக்கிறது. மரியாவின் இடது கை பார்வையாளர்களை ஆழ்ந்த சிந்தனைக்கு அழைப்பதுபோல் உள்ளது. மரியா அமர்ந்திருக்கும் பீடம் போன்ற பகுதி கல்வாரி மலையின் உச்சியைக் குறிக்கிறது. அம்மலையில்தான் இயேசு சிலுவையில் அறையுண்டு உயிர்துறந்தார்.
சிலைத் தொகுப்பு முழுவதும் கல்லில் செதுக்கப்பட்டது போல் அல்லாமல் மெழுகு போன்று இளகியதொரு பொருளால் செய்யப்பட்டது போல் அமைந்திருப்பது மைக்கலாஞ்சலோவின் கலைத் திறனைக் காட்டுகிறது. அத்துணை நெகிழ்ச்சி அச்சிலையில் உள்ளது.
அளிக்கப்படும் விளக்கங்கள்
தொகுமைக்கலாஞ்சலோ தாம் வடித்த "தாயும் சேயும்" சிலையில் மரியாவை ஓர் இளம்பெண்ணாகச் செதுக்கியதற்குப் பல விளக்கங்கள் தரப்படுகின்றன. முதல் விளக்கம் சிலையை வடித்த கலைஞராலேயே அவருடன் ஒத்துழைத்த அஸ்கானியோ கொண்டீவி (Ascanio Condivi) என்பவருக்குக் கூறப்பட்டது. அதாவது, மரியா இயேசுவை ஈன்றவர் ஆயினும், கடவுளருளால் எப்போதுமே கன்னியாக இருந்தார். எனவே கன்னிப் பெண்ணுக்கே உரிய இளமைத் தோற்றத்தை மரியாவுக்கு அளிக்க மைக்கலாஞ்சலோ முடிவுசெய்து அதன்படி சிலையைச் செதுக்கினார்.
இன்னொரு விளக்கம் பின்வருமாறு: மைக்கலாஞ்சலோ இத்தாலியக் கவிஞர்களுள் தலைசிறந்தவராகக் கருதப்படும் தாந்தே என்பவரின் "திருவிளையாடல்" (Divina Commedia) என்னும் பேரிலக்கியத்தை நன்கு அறிந்தவர். அந்நூலின் 33ஆம் காண்டத்தில் அன்னை மரியாவை நோக்கி எழுப்பப்படும் ஒரு வேண்டுதல் உள்ளது. இத்தாலிய மொழியில் "Vergine madre, figlia del tuo figlio" (ஆங்கிலம்: Virgin mother, daughter of your son) என வரும் அவ்வேண்டுதலைத் தமிழில் "கன்னித் தாயே, உம் மகனின் மகள் நீரே" என்று பெயர்க்கலாம். இயேசு மூவொரு கடவுளாக இலங்குகின்ற பரம்பொருளில் இரண்டாவது ஆள் என்பது கிறித்தவ நம்பிக்கை. அவ்வாறாயின், கடவுளாகவும் உள்ள இயேசு ஒருவிதத்தில் மரியாவைப் படைத்தவர். எனவே மரியா இயேசுவின் "மகள்". அதே நேரத்தில் மரியா இயேசுவை இவ்வுலகுக்கு மகனாக ஈன்றளித்தவர். எனவே, இயேசு மரியாவின் மகன். மரியா இயேசுவின் தாய். இப்பொருளில் மரியா இயேசுவுக்கு "மகளாகவும்" தாயாகவும் இருக்கிறார். ஆகவே மைக்கலாஞ்சலோ மரியாவை "இளமை பொருந்திய தாய்" உருவத்தில் ஆக்கினார்.
மரியாவின் வாழ்க்கையில் கடவுளின் அருள் சிறப்பாகத் துலங்கியது. எனவே அவர் எப்போதும் இளமையின் அழகோடு திகழ்ந்தார் எனலாம்.
மற்றுமொரு விளக்கத்தின்படி, மரியா தம் மடியில் கிடக்கும் இயேசுவைத் தம் குழந்தையாகக் காண்கிறார். பால்மணம் மாறாத குழந்தையைத் தாய் அன்போடு மடியில் தாலாட்டுவதுபோல மரியா தம் மகனைத் தம் மடியில் கிடத்தி பாசத்தோடு அவரை நோக்குகின்றார்.
இறுதியாக, அனைவராலும் கைவிடப்பட்டு, உயிர்துறந்த நிலையில், குறுகிப்போய் மடியில் கிடக்கின்ற இயேசு மனிதரின் வலுவின்மைக்கு அடையாளமாக உள்ளார்.
வடித்தது யார் என்னும் சர்ச்சை
தொகுமைக்கலாஞ்சலோ செதுக்கிய இச்சிலை முதன்முதலில் புனித பெட்ரோனில்லா சிறுகோவிலில் வைக்கப்பட்டிருந்தது. அச்சிறுகோவில் பழைய புனித பேதுரு பெருங்கோவிலின் தென்பகுதியில், பிரான்சு நாட்டின் தூதுவராகத் திருத்தந்தை நாடுகளில் பணிபுரிந்த கர்தினால் ழான் தெ பில்லேர் (Jean de Billheres) என்பவரின் கல்லறை நினைவுச் சின்னத்தின் பகுதியாக இருந்தது. புனித பேதுரு பெருங்கோவிலை விரிவுபடுத்தியபோது ப்ரமாந்தே என்னும் கட்டடக் கலைஞர் பெட்ரோனில்லா சிறுகோவிலை அகற்றிவிட்டார்.
மைக்கலாஞ்சலோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜோர்ஜியோ வாசாரி (Giorgio Vasari) என்பவர் பின்வரும் சுவையான நிகழ்ச்சியைக் குறித்துள்ளார்.[2] மைக்கலாஞ்சலோ செதுக்கிய Pietà சிலை பெட்ரோனில்லா சிறுகோவிலில் நிறுவப்பட்டதும் பார்வையாளர்கள் அதன் அழகைக் கண்டு வியந்து பேசிக்கொண்டனராம். அப்போது ஒருவர் "இந்த அழகிய சிலையை கிறிஸ்தோஃபரோ சொலாரி (Cristoforo Solari) எத்துணை அற்புதமாகச் செதுக்கியுள்ளார்!" என்று கூறியது மைக்கலாஞ்சலோவின் காதில் விழுந்ததாம். தாம் இரண்டு ஆண்டுகள் கடின முயற்சிசெய்து உழைத்து உருவாக்கிய சிலை மற்றொரு கலைஞரால் உருவாக்கப்பட்டதாகக் கூறியதைக் கேட்டு அவர் கடுஞ்சினமுற்றாராம்.உடனேயே இரவோடு இரவாகச் சிலையருகே சென்று அதில் "புளோரன்ஸ் நகரைச் சேர்ந்த மைக்கலாஞ்சலோ போனோரோட்டி இதைச் செதுக்கினார்" என்று இலத்தீனி்ல் பொறித்துவைத்தாராம்.
பியேட்டா சிலையில் அன்னை மரியாவின் மார்பின் குறுக்கே அமைந்துள்ள நெடுநீளக் கச்சையில் MICHAELA[N]GELUS BONAROTUS FLORENTIN[US] FACIEBA[T] என்னும் சொற்றொடரை இன்றும் தெளிவாகக் காணலாம். பண்டைய கிரேக்கக் கலைஞர்களான அப்பேல்லெஸ் (Apelles), பொலிக்ளேய்ட்டோஸ் (Polykleitos) போன்றோர் தாம் செதுக்கிய பளிங்குச் சிலைகளில் இவ்வாறே தம் பெயரைக் குறித்ததுண்டு.
மைக்கலாஞ்சலோ செதுக்கிய பல சிலைகளுள் இச்சிலையில் மட்டுமே தம் பெயரைப் பொறித்தார். தாம் சினமுற்று அகந்தையோடு நடந்துகொண்டது பற்றி மனம் வருந்திய மைக்கலாஞ்சலோ அதன்பின் தாம் உருவாக்கிய எக்கலைப் பொருளிலும் தம் பெயரைப் பொறிப்பதில்லை என்று சூளுரைத்தாராம். இத்தகவலையும் ஜோர்ஜியோ வாஸாரி குறித்துள்ளார்.
சேதமுற்றதும் அதன் சீரமைப்பும்
தொகுபிற்காலத்தில் Pietà சிலை பலமுறை சேதமுற்றது. அதை இடம்பெயர்த்தபோது மரியாவின் இடது கைவிரல்கள் நான்கு பெரும் சேதமுற்றன. அதை ஜுசேப்பே லிரியோனி (Giuseppe Lirioni) என்பவர் 1736இல் சீர்ப்படுத்தினார்.
சிலைக்குப் பெருமளவில் சேதம் ஏற்பட்டது 1972, மே மாதம் 21ஆம் நாள் ஆகும். தூய ஆவிப் பெருவிழாவாகிய அன்று உள நோய் வாய்ப்பட்ட லாஸ்லோ தோத் (Laszlo Toth) என்னும் ஒருவர் கோவில் காவலர்களின் கண்களுக்குத் தப்பிச் சென்று சிலையைப் பலமுறை தம் கையில் வைத்திருந்த சுத்தியலால் தாக்கினார். அப்போது "நானே இயேசு கிறிஸ்து!" என்று அவர் கத்திக்கொண்டே இருந்தார். சுமார் 50 சில்லுகள் தெறித்துப் பறந்தன. குறிப்பாக, மரியாவின் இடது கை, மூக்கு ஆகியவை பெரும் சேதமுற்றன. கீழே விழுந்த சில்லுகளில் பலவற்றை அருகே நின்றிருந்த மக்கள் எடுத்துக்கொண்டார்கள். பின்னர் சில துண்டுகளைச் சிலர் திருப்பிக் கொடுத்தனர். காணாமற்போன துண்டுகளை உருவாக்க மரியா சிலையின் பின்புறமிருந்து ஒரு பளிங்குக்கல் பகுதி வெட்டி எடுக்கப்பட்டது.
சிலையைச் சீரமைக்கும் பணி முடிந்ததும் அது ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது. ஆனால், சிலையைச் சுற்றி குண்டுகள் துளைக்க முடியாத கண்ணாடிக் கூண்டு அமைக்கப்பட்டது.
அமெரிக்கப் பயணம்
தொகு"தாயும் சேயும்" சிலை 1964இல் நியூயார்க நகருக்கு அனுப்பப்பட்டது. அங்கு நடந்த "உலகக் கண்காட்சியில்" வத்திக்கான் மேடையில் அச்சிலை பார்வைக்கு வைக்கப்பட்டது. அதன் அழகைப் பல்லாயிரக் கணக்கான மக்கள் கண்டு மகிழ்ந்தார்கள். வத்திக்கானிலிருந்து நியூயார்க் நகருக்குப் பெயர்ந்து செல்லும்போது சிலைக்குச் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதா என்பதைக் கண்டறிய, முதலில் சிலையின் ஒரு பிரதி அனுப்பிவைக்கப்பட்டது. அது யாதொரு சேதமுமின்றி போய்ச் சேர்ந்ததைத் தொடர்ந்து மைக்கலாஞ்சலோவின் கலைப் படைப்பாகிய அசல் சிலை அனுப்பப்பட்டது. முதலில் நியூயார்க் சென்ற சிலையின் பிரதி இன்று அந்நகரில் தூய யோசேப்பு குருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
ஆதாரங்கள்
தொகு- ↑ Ascanio Condivi; Alice Sedgewick (1553). The Life of Michelangelo. Pennsylvania State University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-271-01853-4. மைக்கலாஞ்சலோ.
- ↑ Giorgio Vasari, Life of Michelangelo. Alba House, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8189-0935-8 மைக்கலாஞ்சலோ வாழ்க்கை வரலாறு.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகுபடத் தொகுப்பு
தொகுதிருச் சிலைகள்
தொகு-
"தாயும் சேயும்" சிலை. காப்பிடம்: பொகேமியா. காலம்:1390-1400
-
"தாயும் சேயும்" சிலை. காப்பிடம்: ஆசுத்திரியா. காலம்: சுமார் 1420
-
மரத்தால் ஆன "தாயும் சேயும்" சிலை. காப்பிடம்: கொலோன், செருமனி. காலம்: 15ஆம் நூற்றாண்டு
-
"தாயும் சேயும்" சிலை. கலைஞர்: மைக்கலாஞ்சலோ. காப்பிடம்: புளோரன்சு கலைக்கூடம்
-
"தாயும் சேயும்" சிலை. காப்பிடம்: லெபனான்
-
பவனி செல்லும் "தாயும் சேயும்" சிலை. கலைஞர்: சால்வடோர் கார்மோனா (1760). காப்பிடம்: சாலமான்கா பெருங்கோவில், எசுப்பானியா
-
"தாயும் சேயும்" சிலை. கலைஞர்: கிரகோரியோ பெர்னாண்டெசு. காப்பிடம்: வால்லாதோலித் கலைக்கூடம், எசுப்பானியா"
-
"தாயும் சேயும்" சிலை. பவேரிய ரோக்கோக்கோ கலை. காலம்: 18ஆம் நூற்றாண்டு
ஓவியங்கள்
தொகு-
"தாயும் சேயும்" சுவரோவியம். காப்பிடம்: புனித பாந்தலேய்மோன் கோவில், கோர்னோ நெரேசி, மாசெடோனியா. ஆண்டு: 1164
-
தந்தையாம் கடவுளோடு "தாயும் சேயும்" ஓவியம். காப்பிடம்: லூவெர் கலைக்கூடம், பிரான்சு. காலம்: 1400-1410
-
"தாயும் சேயும்" ஓவியம். காப்பிடம்: கிராக்கோவ், போலந்து. காலம்: சுமார்: 1450
-
"தாயும் சேயும்" ஓவியம். ஓவியர்: என்ங்கெராண் ஷரோன்டோன். காப்பிடம்: அவிஞ்ஞோன். காலம்: 15ஆம் நூற்றாண்டு
-
"தாயும் சேயும்" ஓவியம். ஓவியர்: ரோஷியே வான் டெர் வேய்டென். தூய யோவான் மற்றும் புரவலர் அருகிருக்கின்றனர். காப்பிடம்: மாட்ரிட், எசுப்பானியா
-
"தாயும் சேயும்" ஓவியம். ஓவியர்: பியேத்ரோ பெருஜீனோ. காப்பிடம்: புளோரன்சு
-
இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்படுகிறார். கலைஞர்: ஆஞ்செலோ ப்ரோன்சீனோ. காலம்: 1540-1545. பெசான்சோன் கலைக்கூடம், பிரான்சு
-
"தாயும் சேயும்" ஓவியம். ஓவியர்: லூயிஸ் தே மொராலெஸ். காலம்: 16ஆம் நூற்றாண்டு
-
"தாயும் சேயும்" ஓவியம். ஓவியர்: எல் கிரேக்கோ. காலம்:1571-1576. காப்பிடம்: பெலடெல்பியா
-
"தாயும் சேயும்" ஓவியம். ஓவியர்: வில்லியம்-அடோல்ஃப் பூகெரோ. ஆண்டு: 1876. காப்பிடம்: டால்லஸ், அமெரிக்கா