தாராபாய் ஷிண்டே

இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்

தாராபாய் ஷிண்டே (Tarabai Shinde; 1850-1910)[1] என்பவர் 19 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தந்தை மரபாட்சி மற்றும் சாதியை எதிர்த்த ஒரு பெண்ணியவாதி ஆவார். பிரசுர வேலையால் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். 1882 இல் இவர் வெளியிட்ட ”ஸ்திரீபுருஷ துலானா” (பெண்-ஆண் ஒப்பீடு) என்ற பதிப்பினால் நன்கறியப்பட்டவராவார். இந்தத் துண்டுப்பதிப்பு உயர்மட்ட சாதிக் குடும்பங்களில் காணப்பட்ட தந்தை மரபாட்சியைத்தின் விமர்சனமாக அமைந்தது. மேலும் இப்பிரசுரமே நவீன இந்தியப் பெண்ணியக் கருத்தின் முதல் வெளியீடாகவும் கருதப்படுகிறது.[2] பெண்களின் தாழ்நிலைக்கு இந்து சமய நூல்களே மூலகாரணமாக உள்ளதாகக் குற்றஞ்சாட்டிய இப்பிரசுரம் அக்காலகட்டத்தில் புரட்சிகரமான சவாலாக இருந்தது.[3]

தாராபாய் ஷிண்டே
பிறப்பு1850
புல்தானா, பெரார், பிரித்தானிய இந்தியா
இறப்பு1910
தேசியம்இந்தியன்
பணிபெண்ணிய ஆர்வலர், மகளிர் உரிமை ஆர்வலர், எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஸ்திரீபுருஷ துலானா (A Comparison Between Women and Men) (1882)

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம் தொகு

1850 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரார் மாகாணத்தில் புல்ஹானாவில் பாபுஜி ஹரி ஷிண்டேவுக்குப் பிறந்தார். இவர் புனேவில் சத்யசோதாக் சமாஜத்தை நிறுவினார். அவரது தந்தை வருவாய் துணை ஆணையர் அலுவலகத்தில் தலைமை எழுத்தராக இருந்தார்; மேலும் அவர் 1871 இல் "ஹின்ட் டூ த எஜுகேட்டட் நேட்டிவ்ஸ்" (Hint to the Educated Natives) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். இப்பகுதியில் பெண்கள் பாடசாலை இல்லை. தனது ஒரே மகளான தாராபாய்க்கு வீட்டிலேயே மராத்தி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்பித்தார். அவருடன் நான்கு சகோதரர்கள் இருந்தனர்.[4][5] தாராபாய்க்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தாலும் கூட அந்நாளைய பிற மராத்தியப் பெண்களைவிட குடும்ப வாழ்க்கையில் அவருக்கு அதிக சுதந்திரம் இருந்தது. அவரது பெற்றோரின் வீட்டிற்கே அவரது கணவர் வசிக்க வந்ததே இதற்கு காரணமாக அமைந்தது.[6]

சமூகப்பணி தொகு

தாராபாய் ஷிண்டே, சாவித்திரிபாய் புலே மற்றும் ஜோதிராவ் புலேவுடன் இணைந்து சமூக நலனுக்காக பாடுபட்டார், சத்யசோதக் சமாஜ் ("Truth Finding Community") என்ற நிறுவனத்தின் நிறுவன உறுப்பினராவார். பாலினம் மற்றும் சாதிய வேறுபாடுகளால் ஏற்படும் இன்னல்களையும், இவையிரண்டும் இணைந்து ஏற்படுத்தும் பாதிப்புகளையும் குறித்த விழிப்புணர்வினை தாராபாய் ஷிண்டேயுடன் சாவித்திரிபாய் புலேயும் ஜோதிராவ் புலேயும் பகிர்ந்து கொண்டனர்.

ஸ்திரீபுருஷ துலானா தொகு

சாதி என்ற சமூக சமத்துவமற்ற தன்மையை ஷிண்டே குறைகூறினார். அதேபோல் இந்து சமுதாயத்தில் சாதிக்கு பிரதான எதிர்ப்பாளராக இருந்த மற்ற ஆர்வலர்களுடைய ஆணாதிக்க கருத்துக்களை விமர்சித்தார். சுசீ தரு மற்றும் கே. லலிதா இருவரின் கூற்றுப்படி, "பக்தி நெறி காலத்திற்குப்பிறகு முழுவீச்சாக பெண் உரிமைக்காக எடுத்துரைத்த முதல் வெளியீடு ஸ்திரீபுருஷ துலானா" ஆகும். ஆனால் தாராபாயின் பணி குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் அக்கால அறிஞர்களும் செயற்பாட்டாளர்களும் இந்து விதவைகளின் இன்னல்களைக் குறித்தும், பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட எளிதில் அடையாளம் காணக்கூடிய அட்டூழியங்களைக் குறித்தும் அக்கறை கொண்டிருந்தபோது, தாராபாய் ஷிண்டே, வெளிப்படையாக தனிமையொருவராக, தந்தைவழி சமுதாய அமைப்பினால் பெண்களுக்கு நேரும் துன்பங்களையும் பகுத்தாய்வு செய்யக் குரல்கொடுத்தவராவார். எல்லா இடங்களிலும் பெண்கள் ஒடுக்கப்படுவதாகக் கருதுகிறார்".

1881 ஆம் ஆண்டு புனேயில் இருந்து வெளியான ”புனே வைபவ்” இதழில், இளம் பிராமண (உயர் ஜாதி) விதவையான சூரத்திலுள்ள விஜயலட்சுமிக்கு எதிரான ஒரு குற்றவியல் வழக்கு குறித்து வெளியான கட்டுரைக்கு எதிராக ”ஸ்திரீபுருஷ துலானா” வெளியிடப்பட்டது. விதவையான விஜயலட்சுமி, திருமண பிணைப்புக்குப் புறம்பாகப் பிறந்த தனது குழந்தையை சமூக அவதூறுக்கும் கொடுமைக்கும் பயந்து கொன்றதால் அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் அவரது மேல்முறையீட்டால் ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.[4][6][7] மறுமணம் செய்யத் தடைசெய்யப்பட்ட உயர் ஜாதி விதவைகளுடன் பணிபுரிந்த நிலையில், உறவினர்களால் கர்ப்பம் தரிக்கநேரிடும் துயர நிகழ்வுகள் குறித்து அறிந்திருந்தார். "நல்ல பெண்களுக்கும்" "பாலியல் தொழிலாளிகளுக்கும்" இடைப்பட்ட கயிற்றின்மேல் நடக்கும் துன்நிலையில் அந்த விதவைகள் இருந்ததை இந்தக் கட்டுரை பகுத்தாய்வு செய்தது. இது 1882 ஆம் ஆண்டில், புனேயில் உள்ள ஸ்ரீ சிவாஜி அச்சகத்தில் ஒன்பது அணா செலவில் 500 பிரதிகள் அச்சிடப்பட்டது.[8] ஆனால் சமகால சமுதாய மற்றும் பத்திரிக்கைகளின் விரோதமான வரவேற்புகளால் அவரால் மீண்டும் மீண்டும் பிரசுரிக்க முடியவில்லை.[9] எனினும், இது ஜோதிராவ் புலேயால் வரவேற்கப்பட்டு, பாராட்டப்பட்டது. தாராபாயை சிராஞ்சீவினி (அன்பு மகள்) என்று குறிப்பிட்டு, அவரது கட்டுரையைச் சக பணியாளர்களுக்கும் பரிந்துரைத்தார். 1885 ஆம் ஆண்டில் ஜோதிராவ் புலேயால் தொடங்கப்பட்ட சத்தியஷோதாக் சமாஜின் பத்திரிகையான சட்ஸர் பத்திரிகையின் இரண்டாவது வெளியீட்டில் இந்த குறிப்பு இடம்பெற்றிருந்தது. இருப்பினும், 1975 ஆம் ஆண்டு மறுபடியும் கண்டெடுக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்படும்வரை அறியப்படாமலேயே இருந்தது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Yashawant Dinkar Phadke, தொகுப்பாசிரியர் (1991) (in Marathi). Complete Works of Mahatma Phule. 
  2. 2.0 2.1 Tharu, Susie J.; Ke Lalita (1991). Women Writing in India: 600 B.C. to the Present (Vol. 1). Feminist Press. பக். 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-55861-027-8. https://books.google.com/books?id=u297RJP9gvwC&pg=PA221&dq=%22Tarabai+Shinde%22+-inpublisher:icon&cd=1#v=onepage&q=%22Tarabai%20Shinde%22%20-inpublisher%3Aicon&f=false. 
  3. University of Delhi. Indian Literature : An Introduction. Pearson Education. பக். 133. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-317-0520-X. https://books.google.com/books?id=mivv3p-msd8C&pg=PA133&dq=%22Tarabai+Shinde%22+-inpublisher:icon&cd=3#v=onepage&q=%22Tarabai%20Shinde%22%20-inpublisher%3Aicon&f=false. 
  4. 4.0 4.1 Feldhaus, Anne (1998). Images of women in Maharashtrian society. SUNY Press. பக். 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7914-3659-4. https://books.google.com/books?id=r_qf_OYAdqgC&pg=PA205&dq=%22Tarabai+Shinde%22+-inpublisher:icon&cd=9#v=onepage&q=%22Tarabai%20Shinde%22%20-inpublisher%3Aicon&f=false. 
  5. DeLamotte, Eugenia C.; Natania Meeker; Jean F. O'Barr (1997). "Tarabai Shinde". Women imagine change: a global anthology of women's resistance from 600 B.C.E. to present. Routledge. பக். 483. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-91531-7. https://books.google.com/books?id=ZO4n5-Y2UMAC&pg=PA483&dq=%22Tarabai+Shinde%22+-inpublisher:icon&cd=5#v=onepage&q=%22Tarabai%20Shinde%22%20-inpublisher%3Aicon&f=false. 
  6. 6.0 6.1 Guha, Ramachandra (2011). Makers of Modern India. The Belknap Press of Harvard University Press. பக். 119. 
  7. Roy, Anupama (24 February 2002). "On the other side of society". The Tribune. http://www.tribuneindia.com/2002/20020224/spectrum/book1.htm. 
  8. Devarajan, P. (4 February 2000). "Poignant pleas of an Indian widow". Business Line. http://www.thehindubusinessline.com/2000/02/04/stories/18044401.htm. 
  9. Anagol, Padma (2005). The emergence of feminism in India, 1850–1920. Ashgate Publishing. பக். 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7546-3411-6. https://books.google.com/books?id=YICroPrSyz4C&pg=PA239&dq=%22Tarabai+Shinde%22+-inpublisher:icon&cd=2#v=onepage&q=%22Tarabai%20Shinde%22%20-inpublisher%3Aicon&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராபாய்_ஷிண்டே&oldid=2764711" இலிருந்து மீள்விக்கப்பட்டது