காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்
(திருக்கச்சியேகம்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் (Ekambareswarar Temple) என்பது பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1] இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் தலவிருட்சம் மாமரம் ஆகும்.

தேவாரம் பாடல் பெற்ற
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் is located in தமிழ் நாடு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்
புவியியல் ஆள்கூற்று:12°50′50″N 79°41′58″E / 12.847296°N 79.699572°E / 12.847296; 79.699572
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஏகாம்பரேஸ்வரர்
ஏகாம்பரநாதர்
திருவேகம்பர்
தாயார்:காமாட்சி
ஏலவார்குழலி
தல விருட்சம்:மாமரம்
தீர்த்தம்:சிவகங்கை (குளம்), கம்பாநதி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சமயக்குரவர் மூவர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:சோழர்,பாண்டியர் காலக் கல்வெட்டுகள் மற்றும் பல
வரலாறு
அமைத்தவர்:பல்லவ, சோழ அரசர்கள்
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்துக் கோபுரம்

திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம் இதுவாகும்.[2][3]

திருத்தல வரலாறு

தொகு

இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று.

திருத்தலப் பெருமை

தொகு
 
மாமரம்

இக்கோயிலில் மூம்மூர்த்திகள் வழிபட்ட கம்பர் ( வெள்ளக்கம்பர், கள்ளக் கம்பர், நல்லக்கம்பர்) அமைய பெற்றமையால் திருவேகம்பம் என்ற பெயர் பெற்றது.

இது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.

இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.

கோயில் வரலாறு

தொகு

ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம் மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது.

 
ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம்

இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் பொ.ஊ. 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது.

இக்கோயிலின் வெளிமதில் பொ.ஊ. 1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் இங்கு பாழ்பட்டு கிடந்த பழைய சிலைகள் உள்ளிட்ட புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாமும் இக்கோயிலோடுu சேர்த்து புதுப்பிக்கப்பட்டன. இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் (வராகமும் கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது.

பாடற் தொகுப்புகள்

தொகு

திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் அருளியதும், அதனுடைய இரண்டாங்காண்டமென்று சொல்லப்படுவதுமாகிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் இயற்றிய கச்சி ஆனந் தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பர நாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி ஆகிய இவைகளும் இத்தலத்தைப்பற்றிய நூல்களாகும்.

கல்வெட்டுக்கள்[4]

தொகு

1. திருக்கோயிலுள் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி (பொ.ஊ. 1250) சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், இராசராசன்ருருபிறரில் விஜயகண்ட கோபாலன், விஜயநகரசதாசிவன் முதலியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. உத்தம சோழன் கல்வெட்டில் வீரராணியார் அவன் தேவி எனக் கூறுகிறது.

2. நடராசர் மண்டபத்தில் புக்கராயன் (பொ.ஊ. 1406) கல்வெட்டு மூன்று இருக்கின்றன.

3. ஆயிரக்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது.

4. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு, பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் (பொ.ஊ. 1469) ஏகம்பர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி (பொ.ஊ. 1250) காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசுபெற்றது பொ.ஊ. 1250 எனத் தெரிகிறது.

5. ராயர்மண்டபத்தில் கம்பண உடையார் ஆனந்த ஆண்டுக் கல்வெட்டு இருக்கிறது.

6. காமாட்சி அம்மன் கோயில் அச்சுதராயன் (பொ.ஊ. 1534) படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி கண்டிருக்கிறது.

7. கோபுரம்: விஜயநகரமல்லிகார்ச்சுனனுடைய (பொ.ஊ. 1456) கல்வெட்டு இருக்கிறது.


வெளி இணைப்புக்கள்

தொகு

சென்னைக்கு அருகில் உள்ள சிவன் தலம். மேலும் திருமாலின் திவ்வியதேசங்களின் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ekambareswarar Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 37,38
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-25. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
  4. South Indian Inscriptions, Volume IV

படத்தொகுப்பு

தொகு