பெரியபுராணம்

63 நாயன்மார்கள் வரலாறு
(திருத்தொண்டர் புராணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலை சேக்கிழார் விவரிக்கிறார்.

திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது.[1][2] இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராசர் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.[1]

காப்பியப் பகுப்பு தொகு

பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.

காப்பிய கதையானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.

முதற் காண்டத்தில்,

  1. திருமலைச் சருக்கம்,
  2. தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,
  3. இலை மலிந்த சருக்கம்,
  4. மும்மையால் உலகாண்ட சருக்கம்,
  5. திருநின்ற சருக்கம்

என்ற ஐந்து சருக்கங்களும்,

இரண்டாம் காண்டத்தில்,

  1. வம்பறா வரிவண்டுச் சருக்கம்,
  2. வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்,
  3. பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்,
  4. கறைக்கண்டன் சருக்கம்,
  5. கடல்சூழ்ந்த சருக்கம்,
  6. பத்தராய்ப் பணிவார் சருக்கம்,
  7. மன்னிய சீர்ச் சருக்கம்,
  8. வெள்ளானைச் சருக்கம்

என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.

13 சருக்கங்களிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கையும் அவற்றில் பேசப்படும் சிவனடியார்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு:

சருக்க எண் பாடல்கள் அடியார்கள்
1 349 -
2 201 7
3 422 7
4 298 6
5 633 7
6 1734 6
7 303 6
8 115 8
9 41 5
10 47 5
11 24 7
12 58 7
13 53 1

பழமொழி தொகு

நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.

பெரிய புராண ஆராய்ச்சி தொகு

இராசமாணிக்கனார் எழுதிய பெரியபுராண ஆராய்ச்சி எனும் நூல் பெரியபுராணத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்.[3]

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 மு. வரதராசன் (2012 (மறுபதிப்பு)). தமிழ் இலக்கிய வரலாறு. சாகித்திய அகாதெமி. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8172011644. 
  2. http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202142.htm
  3. http://www.tamilvu.org/library/nationalized/pdf/03-rasamanickam/periyapuranamarachi.pdf

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியபுராணம்&oldid=3809958" இலிருந்து மீள்விக்கப்பட்டது