திருமாணிக்குழி வாமனபுரீசுவரர் கோயில்

(திருமாணிகுழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருமாணிகுழி - திருமாணி வாமனபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தளங்களில் 17வது தளங்களில் ஒன்றாகும். [1]

தேவாரம் பாடல் பெற்ற
திருமாணிக்குழி வாமனபுரீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருமாணிக்குழி
அமைவிடம்
ஊர்:திருமாணிக்குழி
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர்
தாயார்:அம்புஜாட்சி, மாணிக்கவல்லி
தல விருட்சம்:கொன்றை
தீர்த்தம்:சுவேத, கெடில நதி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்

தொன்மம் தொகு

 
கோயில் விமாணத்தில் சிவன் உருவம்

அசுர மன்னனாக மகாபலி சக்கரவர்த்தி நல்லாட்சி புரிந்து நற்பெயரைப் பெற்றவனாகவும், அதிக வலிமை வாய்ந்த அரசனாகவும் இருந்தான். வாமனர் என்ற ஓர் ஏழை பிராமணனாக அவதாரம் எடுத்த நாராயணன் மகாபலியிடம் மூன்றடி மண் கேட்கிறார். மகாபலி தனது குருவான சுக்ராச்சாரியாரின் எச்சரிக்கையையும் மீறி அதற்கு சம்மதிக்கிறான். குட்டையாக இருந்த வாமனன் விசுபரூபம் எடுத்து நிற்கிறார். அவர் முதல் அடியை வானத்திலிருந்து பூமிக்கு வைக்கிறார், இரண்டாவது அடியை பூமியிலிருந்து பாதாள உலகத்திற்கு வைக்கிறார். மன்னன் மகாபலி, தன் வாக்கை நிறைவேற்ற முடியாமல், மூன்றாவது அடிக்கு தன் தலையைக் கொடுக்கிறான். வாமனன் அவன் தலையில் தன் காலை வைத்து அவனை பாதாளத்திற்கு அனுப்புகிறார். இருந்தாலும் தீராப் பழியாலும் தோசத்தாலும் நாராயணன் அல்லல்பட்டார். தனது துயர் நீங்க கெடில ஆற்றங்கரையான இத்ததலத்தில் ஈசனைப் பூசித்து தோசம் நீங்கப் பெற்றார் என்று நம்பப்படுகிறது. பிரம்மச்சாரியாக வாமன அவதாரம் எடுத்த நாராயணன் சிவனை பூசித்ததால் இத்தலம் திருமணிக்குழி (மணி என்றால் பிரம்மச்சாரி என்று பொருள்) என பெயர் பெற்றது என்று கூறப்படுகிறது.[2]

அமைவிடம் தொகு

இக்கோயில் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து திருவந்திபுரம் வழியாக பாலூர், பண்ருட்டி செல்லும் சாலையில் திருவந்திரபுரத்திற்கு அடுத்தபடியாக சுந்தரர்பாடி என்னுமிடத்திற்கு அருகிலுள்ள சாத்தாங்குப்பம் வழிகாட்டி செல்லும் சாலையில் கெடில நதிப்பாலத்தை அடுத்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. [1] இக்கோயில் கடலூரில் இருந்து 15 கி. மீ. தொலைவில் உள்ளது

சிறப்பு தொகு

தனக்கு ஏற்பட்ட தோசத்தை இங்கு வந்து சிவனை வழிபட்டு வாமனன் நீக்கிக் கொண்டதல், இத்தலத்திலேயே எத்தடையும் இல்லாமல் எப்போதும் பூசித்தபடி இருக்க விரும்புவதாக சிவனிடம் வாமனன் வேண்டினார். சிவனும் அவருக்கு அவ்வரத்தை அளித்தார். மேலும் வாமனன் வழிபடும்போது அவருக்கு இடைஞ்சல் நேராமல் இருந்து திரையாக காக்குமாறு பதினொரு ருத்திர்களில் ஒருவரான குபேர பீம ருத்திரரை பணித்தார். அதன்படி இத்தலத்தில் கருவறையை குபேர பீம ருத்திரர் திரையாக இருந்து மறைத்து வருகிறார் என்பது ஐதீகம். இதனால் கருவறை எப்போதும் குபேர பீம ருத்திரர் உருவம் கொண்ட திரையால் மூடப்பட்டிருக்கும். சிவனை வழிபட விரும்புபம் அடியார்கள் குபேர பீம ருத்திரரை வழிபட்டு அவரின் அனுமதி பெற்ற பின்பே திரையை நீக்கி தரிசனம் செய்ய முடியும். எனவே அவருக்கே முதல் பூசை செய்யபடும். அதுவும் ஒருசில நொடிகளுக்கு மட்டுமே ஆகும். பின்னர் மீண்டும் திரை மூடப்படும். இதனால் இங்குள்ள நந்திகூட பிற கோயில்களில் உள்ளதுபோல தலையை சாய்த்துக் கொண்டிருப்பது போல இல்லாமல் திரை நீங்கினால் உடனே பார்க்க ஏதுவாக தலையை நேராக வைத்திருப்பார்.[3]

திருவண்ணாமலையில் பரணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படும். ஆனாங் இங்கு உரோகினி நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. "Sri Vamaneeswarar temple". தினமலர். 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2015.
  3. 3.0 3.1 "ஜி. மகேஷ் - வாமனபுரீஸ்வரர் ஆலயம்: திரையிலே துலங்கும் அதிசயம்!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2023.

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு