திருவல்லிக்கேணி இந்து மேல் நிலைப் பள்ளி

இந்து மேல்நிலைப்பள்ளி,(Hindu Higher Secondary School) (HHSS), இந்தியாவிலுள்ள சென்னை திருவல்லிக்கேணியில் பெரிய தெருவில் அமைந்துள்ளது. 1852 ஆம் ஆண்டு கிழக்கு இந்திய நிறுவனத்தால் நிறுவப்பட்ட இப்பள்ளி தென் இந்தியாவின் மிக பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்று ஆகும். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலேயர்களால் நிர்வகிக்கப்பட்டு நடத்தப்படும் பள்ளிகளுக்கு அனுப்ப தயங்கியிருந்த நேரத்தில் இந்த பள்ளி நிறுவப்பட்டது,

பள்ளியின் பெயர் வரலாறுதொகு

1852 ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணியில் இரண்டு ஆண்கள் பள்ளிகள் இருந்தன. ஒன்று தமிழ் மாணவர்களுக்கான திராவிடப் பாடசாலை (பாடசாலை என்பது சமசுகிருத மொழியில் பள்ளி எனப் பொருள்படும்), மற்றொன்று தெலுங்கு மாணவர்களுக்கான 'இந்து பாலுர பாடசாலை'. 1860 ஆம் ஆண்டு இவ்விரண்டு பள்ளிகளும் இணைக்கப்பட்டு ' திருவல்லிகேணி ஆந்திர திராவிட பாலுர பாடசாலை' எனப் பெயரிடப்பட்டது. இப்பள்ளி நாளடைவில் ' ட்ரிப்லிகேன் ஆங்கிலோ வெர்னாகுலர் ஸ்கூல்' என்றும் பின்னர் 1897ஆம் ஆண்டு "இந்து மேல்நிலைப்பள்ளி" என்றும் பெயர் மாற்றப்பட்டது. இப்பெயரே இந்நாள் வரை இப்பள்ளிக்கு நிலைத்துள்ளது. [1]

பள்ளியின் நிறுவனர் எனக் கருதப்படும் ராவ் பகதூர் எம்.ஏ. சிங்கராச்சாரியார் தலைமையிலான நிர்வாகத்தின் அயராத முயற்சியின் விளைவாகவும், ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய அய்யர், புகழ்பெற்ற மாண்புமிகு வி.எஸ். சீனிவாச சாஸ்திரி, ஸ்ரீ பி.ஏ. சுப்பிரமணிய அய்யர், ஸ்ரீ ஆர்.நம்பி ஐயங்கார் மற்றும் ஸ்ரீ டி.பி. சீனிவாச வரதன், ஆகியோரின் அயராத முயற்சியால் இப் பள்ளி பெருமை பெற்று விளங்குகிறது. இன்றும் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி, பணிகள் செவ்வனே நடைபெறுகின்றன. இப் பள்ளியின் பயன்பாட்டில் உள்ள பள்ளியின் பிரதான கட்டிடம் 1897 ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாண ஆளுநர், அதிமேதகு சர் ஆர்தர் ஹேவ்லாக் அவர்களால் திறக்கப்பட்டது.

கட்டிட அமைப்புதொகு

இப் பெரிய பள்ளி கட்டிடத்தின் கட்டுமானப் பணி 1897 இல் நிறைவடைந்தது, ஆங்கில எழுத்தான 'எல்' வடிவ சிவப்பு செங்கல் கட்டிடம் கட்டிடக் கலைஞர் ஹென்றி இர்வின் என்பவரால் வடிவமைக்கப்பட்டது என்று கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. பள்ளி இந்த பாரம்பரிய கட்டிடத்தில் இன்றும் உள்ளது. மூன்று மாடி கட்டிடம் நம்பெருமாள் செட்டி, என்பவரால் 40,000 சதுர அடிகள் (3,700 m2). நிலப்பரப்பில் கட்டப்பட்டது. பரந்த மற்றும் அகலமான வராண்டாக்கள் மற்றும் பெரிய சன்னல்கள், பள்ளியின் வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்தை உறுதிசெய்வதாக உள்ளன. அதே நேரத்தில் உயர்ந்த கூரைகள் மற்றும் முன்புற வளைவுகளின் வரிசைகள் பள்ளி கட்டிடத்திற்கு ஒரு அழகிய தோற்றத்தை அளிக்கின்றன. பின்னர், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் கூடுதல் கட்டுமானம் செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டிடம் இப்போது ஆங்கில எழுத்தான 'டி' வடிவத்தில் உள்ளது.[1]

இக் கல்வி நிறுவனம் கட்டிடத்தை நல்ல பழுதுபார்க்கும் நிலையில் பராமரித்து வந்தாலும், அதன் வளங்கள் மீதான கோரிக்கைகள் காலப்போக்கில் அதிகரிக்கும். வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்ற பெயரில் சென்னையில் பல அடையாளங்கள் மறைந்து வருவதால், இந்த கட்டிடம் எதிர்கால தலைமுறையினருக்கு அதன் அனைத்து மகிமையிலும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், இப் பள்ளியின் வாயில் வழியாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், மேலும் வரவிருக்கும் தசாப்தங்களில் ஆயிரக்கணக்கானோர் படிக்க இருக்கின்றனர் என்பதை மறக்காமல் கட்டிட பாதுகாப்பை உறுதி செய்வது நம்முடைய கடமையாகிறது என்கிற விபரம் இப் பள்ளியின் 155ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் பள்ளி அறிக்கையில் காணப்படுகிறது.

இப்பள்ளியில் பயின்ற முக்கிய பிரபலங்கள்தொகு

கல்வித் துறையிலும், திறமை சார்ந்த செயல்பாடுகளிலும் இப் பள்ளி வழங்கிய மிகச்சிறந்த அடிப்படையுடன், பள்ளி மாணவர்கள் உலகம் முழுவதும் பரவலாக பரவியுள்ளனர். நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் டாக்டர் சுப்பிரமணியன் சந்திரசேகர், மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் டாக்டர் சுப்பரோயன், மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் பனகல் ராஜா, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஸ்ரீ பி.ராமராவ் , காந்தியன் மற்றும் சத்தியாகிராஹி ஸ்ரீ என்.எஸ் வரதாச்சாரி, "அதிசய மருந்துகளின் வழிகாட்டி" ஸ்ரீ ஒய்.சுப்பாராவ் "தி இந்து" பத்திரிகையின் ஸ்ரீ கஸ்தூரி சீனிவாசன், புகழ்பெற்ற குற்றவியல் வழக்கறிஞர் ஸ்ரீ வி.டி. ரங்கசாமி ஐயங்கார், இந்திய அட்டர்னி ஜெனரல் ஸ்ரீ கே. பராசரன், போன்ற பலர் இப் பள்ளியில் பயின்றவர்களாக உள்ளனர்.

மேலும், பிரபல கருநாடக இசை பாடகரான ஜி. என். பாலசுப்பிரமணியம்,[2] நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான கமல்ஹாசன்,[3] மற்றும் எஸ். வி. ரங்கராவ், நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்[3] போன்றவர்கள் இப் பள்ளியில் படித்த முக்கிய பிரபலங்கள் ஆவார்கள்.

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு