திருவிவிலியம் இணையத்தளம்

திருவிவிலியம் என்னும் பெயரில் அமைந்துள்ள இணையத்தளம் (திருவிவிலியம் இணையத்தளம்) தமிழ் மொழியில் விவிலியத்தை வழங்கி, பிற மொழிபெயர்ப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கவும், விவிலிய பாடத்தை விளங்கிக்கொள்ளவும் வழியாக அமைந்துள்ள தலைசிறந்த வலைத்தளமாக உள்ளது.

சீகன்பால்கு, சூல்ட்சு ஆகியோர் மொழிபெயர்த்த தமிழ் விவிலியம். "மோசேசென்கிறவ்ர் யெழுதிவைத்த முதலாம் பொஷ்த்தகம்" (தொடக்க நூல்). ஆண்டு: 1723. இடம்: தரங்கம்பாடி.

திருவிவிலியம் இணையத்தளத்தின் சிறப்புக் கூறுகள்தொகு

இந்த இணையத்தளத்தின் சிறப்புக் கூறுகள் பல. அவற்றைக் கீழ்வருமாறு பட்டியலிடலாம்:

1. திருவிவிலியம் என்னும் பொதுப்பகுதியில்

 • திருவிவிலியம் பற்றி
 • திருவிவிலிய வரலாறு
 • நூல்கள் - கால அட்டவணை
 • திருவிவிலிய வரைபடங்கள்
 • தமிழ் திருவிவிலிய வரலாறு
 • பொது மொழிபெயர்ப்பு பற்றி

என்னும் உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் கருத்தாழம் கொண்ட பல கட்டுரைகள் தரப்பட்டுள்ளன.

2. திருவிவிலிய மொழிபெயர்ப்புகள் அடங்கிய பகுதி மையமாக உள்ளது. தமிழிலும் ஆங்கிலத்திலும் விவிலிய மொழிபெயர்ப்புகள் உள்ளன. அவை:

 • தமிழ் பொதுமொழிபெயர்ப்பு (Ecumenical Translation) (ஆண்டு:1995)
 • சேம்சு அரசர் தமிழ் மொழிபெயர்ப்பு (King James Bible - தமிழ்)
 • உரோமன் கத்தோலிக்க (பழைய) தமிழ் மொழிபெயர்ப்பு (ஆண்டு:1973)
 • New American Bible - ஆங்கில மொழிபெயர்ப்பு
 • King James Bible - ஆங்கிலம்
 • New Revised Standard Version - ஆங்கிலம்

இந்த ஆறு மொழிபெயர்ப்புகளும் ஒரே இடத்தில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு எனப் பிரித்துத் தரப்பட்டிருப்பது சிறப்பு. விவிலிய நூல் ஒன்றைத் திறந்ததும் அதிகாரம், வசனம் என்னும் பிரிவுகளை உடனடி அடையாளம் காணும் வகையில் பாடம் அமைக்கப்பட்டுள்ளது.

3. விவிலிய பாடங்களைப் பார்க்கும் அதே வேளையில் அவற்றைக் கேட்பதற்கும் இந்த இணையத்தளத்தில் வழியிருக்கிறது.

4. திருவிவிலிய பாடங்களின் ஒப்பீடு என்னும் வசதி இந்த இணையத்தளத்தில் உள்ளது. மேலே கூறப்பட்ட ஆறு மொழி பெயர்ப்புகளையும் ஒரே நேரத்தில் விரித்துவைத்து ஒப்பிட்டுப் பார்க்க இயலும். ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது சொற்றொடர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எவ்வாறு பெயர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாக அறிய இயலுகிறது.

5. விவிலிய நூல்களில் வரும் சொற்கள் எந்தெந்த இடத்தில் காணக்கிடக்கின்றன என்பதையும் இங்கே அறியலாம். எடுத்துக்காட்டாக, கடவுள் என்னும் சொல் விவிலியத்தில் எங்கெல்லாம் வருகிறது என்பதை உடனே கண்டுகொள்ள இயலுகிறது. அதே சொல் வேற்றுமை விகுதி பெற்றுவரும் வடிவங்களையும் காணமுடிகிறது. விவிலியத்தின் தமிழ் பொதுமொழிபெயர்ப்பில் அடங்கியுள்ள நூல்களிலும்

 • கடவுள் என்னும் சொல் 1109 முறையும்
 • கடவுளை என்னும் சொல் 308 முறையும்
 • கடவுளுக்கு என்னும் சொல் 293 முறையும்
 • கடவுளோடு என்னும் சொல் 29 முறையும்
 • கடவுளிடம் என்னும் சொல் 71 முறையும்
 • கடவுளின் என்னும் சொல் 755 முறையும்
 • கடவுளது என்னும் சொல் 37 முறையும்
 • கடவுளால் என்னும் சொல் 27 முறையும்
 • கடவுளில் என்னும் சொல் 3 முறையும்
 • கடவுள்மீது என்னும் சொல் 19 முறையும் வருகின்றன.

மேலும் ஒவ்வொரு விவிலிய நூலிலும் இச்சொற்கள் பயன்படும் சொற்றொடர் தரப்படுகிறது. தனித்தனி நூல்களில் அச்சொல் வழக்கு எவ்வாறு உள்ளது என்பதையும், அச்சொல் பயன்படும் சூழலையும் அறிந்துகொள்ள இயலுகிறது. இது விவிலிய ஆய்வாளர்களுக்குப் பெரும் துணையாகும்.

6. இந்த இணையத்தளத்தின் இன்னொரு சிறப்புக்கூறு அதில் அடங்கியிருக்கின்ற இனிய பாடல்கள் ஆகும். கிறித்தவர்கள் இறைவேண்டலின்போதும், வழிபாட்டின்போதும், திருப்பலியிலும் பயன்படுத்துகின்ற அழகிய 1133 பாடல்கள் இங்கே உள்ளன. அவற்றுள் பெரும்பான்மை தமிழிலும் சில ஆங்கிலத்திலும் உள்ளன. இசை நல்ல முறையில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

7. விவிலிய பாடங்களை மையமாகக் கொண்டு வழங்கப்படுகின்ற ஞாயிறு மறையுரைகள் பார்வைக்கும் கேட்பதற்கும் உகந்த விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

8. ஒவ்வொரு நாளும் திருப்பலியில் வாசிக்கப்படுகின்ற விவிலிய வாசகங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் வாழ்வுக்கு உகந்த தியானச் சிந்தனைகள் வழங்கப்படுகின்றன.

9. விவிலியக் கல்வி என்னும் தலைப்பில் விவிலிய நூல்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆய்வு செய்யப்படுகின்றன. இது இணையவழிக் கல்வித் திட்டத்தின் பகுதியாக உள்ளது.

10. விவிலிய வினாடி வினா பகுதி உள்ளது.

11. கத்தோலிக்கர் பயன்படுத்துகின்ற இறைவேண்டல் தொகுப்பு தரப்பட்டுள்ளது.

12. விவிலியக் கருப்பொருள்களை விளக்கும் சிறுசிறு கட்டுரைகள் கிறிஸ்துவில் புதுவாழ்வு என்னும் தலைப்பின் கீழ் உள்ளன.

13. திருச்சபை ஏடுகள் என்னும் தலைப்பின் கீழ் இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) வெளியிட்ட 16 ஏடுகளும், முன்னுரை மற்றும் சிறு விளக்கங்களுடன் தரப்பட்டுள்ளன.

14. உலகளாவிய உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆட்சிமுறையை நெறிப்படுத்துகின்ற Canon Law என்று அறியப்படுகின்ற திருச்சபைச் சட்டத் தொகுப்பு முழுவதும் இந்த இணையத்தில் தமிழில் உள்ளது. 1752 உட்பிரிவுகளைக் கொண்ட இச்சட்டத் தொகுப்பு விரிவாகவும் விளக்கமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. மூன்று அடுக்காக அமைகின்ற பட்டியலில் நூலின் பகுதிகளை முழுமையாகவோ தனித்தனியாகவோ பார்வையிட இயலுகிறது. சட்டத்துறை சார்ந்த கலைச்சொல் தொகுதி ஆங்கிலம் மற்றும் தமிழ் அகரவரிசையில் அமைக்கப்பட்டுள்ளது.

விவிலிய அறிவை வளர்க்கும் இணையம்தொகு

தமிழில் விவிலியத்தை விளக்கியுரைத்து, அதன் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை அருகருகே தந்து, விவிலிய அறிவை வளர்க்கத் துணைபுரிகின்ற இந்த இணையத்தளம் விவிலிய வலைப்பதிவுத் துறையில் ஒரு சிறப்பிடம் வகிக்கிறது.

வெளி இணைப்புதொகு