தேசிய காந்தி அருங்காட்சியகம், புது டில்லி
தேசிய காந்தி அருங்காட்சியகம், புது டில்லி, தற்போது இந்தியத் தலைநகரமான புது டில்லியில், ராஜ்காட் பகுதியில் காந்தி சமாதிக்கு முன் அமைந்துள்ளது. மகாத்மா காந்தி என அழைக்கப்படும் இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று வழி நடத்திய காந்தி தொடர்பான காட்சிப் பொருட்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. அவர் சொந்தப் பயன்பாட்டுக்காக வைத்திருந்த பொருட்கள், கையெழுத்துப் பிரதிகள், நூல்கள், சஞ்சிகைகள், பிற ஆவணங்கள், நிழற்படங்கள், நிகழ்படங்கள் போன்ற பல இக் காட்சிப் பொருட்களுள் அடங்கியுள்ளன.
வரலாறு
தொகு1948 ஆம் ஆண்டு சனவரி 30 ஆம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் இந்த அருங்காட்சியகத்துக்கான காட்சிப் பொருட்களைச் சேகரிக்கும் வேலை மும்பாயில் தொடங்கப்பட்டது. பின்னர் இவ் வேலை டில்லிக்கு மாற்றப்பட்டது. 1951 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கோட்டா சாலையில் உள்ள ஒரு கட்டிடம் இந்த அருங்காட்சியகத்துக்கான ஒரு மையமாக ஆக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு நடுப்பகுதியில், மான்சிங் சாலையில் இருந்த பெரிய மாளிகை ஒன்றுக்கு மாற்றப்பட்டது. இறுதியாக 1959 ஆம் ஆண்டு இதற்கென அமைக்கப்பட்ட தற்போதைய இடத்துக்கு மாற்றப்பட்டது. 1961 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய சனாதிபதி இராசேந்திரப் பிரசாத் அவர்களால் இது திறந்து வைக்கப்பட்டது.