தேவேந்திரகுல வேளாளர் (பொதுப் பெயர்)

தேவேந்திரகுல வேளாளர் எனப்படுவோர் பட்டியல் சமூகத்தின் பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு சமூகம் ஆகும். தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள், பட்டியல் சமூத்தவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் இட ஒதுக்கீடு உரிமைகளைப் பெற்று வருகின்றனர்.[1]

சட்டத் திருத்தம்

பிப்ரவரி 2, 2011 அன்று ஏழு பட்டியலின உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என குழுவாக்குவது தொடர்பான கோரிக்கையை சட்டப்பூர்வமாக ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அறிவித்தது.[2]

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஏழு பட்டியலின உட்பிரிவை சேர்ந்தவர்களை, தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் 19 மார்ச் 2021 அன்று நிறைவேற்றப்பட்டது.[3][4] [5][6]இதே சட்ட திருதத மசோதா மாநிலங்களவையில் 22 மார்ச் 2021 அன்று நிறைவேற்றப்பட்டது.[7]

வரலாறு

தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளர், பண்ணாடி, வாதிரியான் ஆகிய ஏழு சாதிகளை உள்ளடக்கி என்ற தேவேந்திரகுல வேளாளர் எனும் ஒரே பொதுப் பெயரில் பெயரிடக் கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் க. கிருஷ்ணசாமி போன்ற பல்வேறு பட்டியல் சமூக அமைப்புகளின் தலைவர்களின் கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றது.[8] இக்கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் வகையில் மூத்த ஆட்சிப் பணி அலுவலர் ஹன்ஸ்ராஜ் வர்மாவை தலைவராகக் கொண்டு 04 மார்ச் 2019 அன்று குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழு அரசால் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அதன் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது. இக்குழு இந்த நேர்வுக்கு தொடர்புடைய பல்வேறு தரப்பினருடைய கோரிக்கைகள் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் அறிக்கைகளை கருத்தில் கொண்டு மாநிலப் பட்டியலினத்தில் உள்ள வாதிரியான் உட்பிரிவினையும் உள்ளடக்கி தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்று மேற்குறிப்பிட்ட 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை இனி தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு, மாநில அரசுக்கு பரிந்துரைக்கும் என 4 டிசம்பர் 2020 அன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்தார்.

தேவேந்திரகுல வேளாளர் குறித்த ஆராய்ச்சியை இந்தியாவின் சென்னையில் உள்ள, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் (Madras University), முனைவர் ஷோபனா ஷர்மா மற்றும் பேராசிரியர் முனைவர் எஸ்.சுமதி ஆகியோர் அடங்கிய மானுடவியலாளர் குழு மேற்கொண்டு அரசிடம் சமர்ப்பித்தது. மானுடவியல் ஆராய்ச்சி அறிக்கை ASIA PACIFIC INSTITUTE OF ADVANCED RESEARCH இல் வெளியிடப்பட்டுள்ளது.[9]

1951 ஆம் ஆண்டு வரை அரசாங்க பதிவில் இருந்த தேவேந்திர குல வேளாளர் என்கிற பெயர் திரும்பவும் சட்டமாக்கப்பட்டது.[10]

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கல் மக்களவையில், தேவேந்திரகுல வேளாளர்களின் பெருமைமிக்க வரலாற்றை 18 பிப்ரவரி 2021இல் பதிவு செய்தார். மேலும் இந்த சமூகம் எப்படி தவறாக ஆங்கிலேய காலத்தில் பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட்டது என்கின்ற உண்மையை பதிவு செய்தார்.[11]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்