தொழில் முனைவோர்


தொழில் முனைவோர் (Entrepreneur) என்பவர் ஒரு நிறுவனத்திற்கு சொந்தக்காரர் ஆவார். அத்தொழில் முயற்சியில் வரக்கூடிய சிக்கல்களுக்கு தம் துணிகர முயற்சி மற்றும் யோசனையைக் கொண்டு செயல்படும் பொறுப்புடையவராக இவர் திகழ்கிறார். தொழில்முனைவோர் ஆத்மார்த்தமான விருப்பத்துடன் கூடிய தலைவராக இருந்து நிலம், தொழிலாளி, மற்றும் முதலீடு ஆகியவற்றை இணைத்து சந்தையில் புதிய பொருட்கள் அல்லது சேவைகளை தொடர்ந்து உருவாக்குகிறார்.[1] பிரெஞ்சு வார்த்தையான லோன்வோர்ட் என்ற பதத்தை முதன் முதலில் விளக்கியவர் அயர்லாந்து நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் கண்டில்லோன் என்ற பொருளாதார வல்லுனர் ஆவார். ஆங்கிலத்தில் தொழில் முனைவோர் என்ற பதமானது தனதுஅதீத முயற்சியின் மூலம் நிறுவனத்தை நடத்தி செல்லும்போது ஏற்படும் விளைவுகள் அனைத்திற்கும் பொறுப்பானவரே தொழில் முனைவோர் என்று குறிக்கிறது.

1800 ஆம் ஆண்டில் பிரெஞ்சு பொருளாதார வல்லுநர் ஜீன்-பப்டைசடே தொழில் முனைவோர் என்ற சொல்லுக்கு புது விளக்கம் அளிக்கலாம் என்று நம்பினார். யார் ஒருவர், குறிப்பாக ஒரு ஒப்பந்ததாரர், ஒரு நிறுவனத்தை எடுத்து நடத்துகிறாரோ தொழிலாளிக்கும் முதலீட்டிற்கும் ஒரு பாலமாக இருக்கிறாரோ அவரே தொழில் முனைவோர் என்று அவர் கூறுகிறார்.[2]

தொழில் முனைவுதிறன் என்பது புதிய முயற்சியின் பொழுது அடிக்கடி நிகழும் தோல்வியிலிருந்து மீள்வதாகும். தொழில் முனைவோர் என்ற வார்த்தை நிறுவனர் என்ற சொல்லோடு தொடர்புடையது. பொதுவாக தொழில் முனைவோர் என்ற பதமானது, பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கி அதன் மூலம் மதிப்புகளை உருவாக்கி சந்தையில் தனக்கென உரிய வாய்ப்பிடத்தை அமைத்து கொள்பவரைக் குறிக்கிறது. தொழில் முனைவோர் சந்தை வாய்ப்புகளைக் கண்டறிந்து தமது மூலதனத்தைத் திறம்பட பயன்படுத்துகிறார். அது மட்டுமல்லாது தன் பகுதியில் நடைபெறும் மாற்றங்களிலும் பங்கெடுத்துக்கொள்கிறார்.

தொழில் முனைவோர்கள் தன்னம்பிக்கையுள்ளவர்களாகவும் தொழில் சார்ந்த சவால்கள் மற்றும் நிதிச் சவால்களை எதிர்கொண்டு வாய்ப்புகளைப் பெறுவதில் ஆர்வமுடன் இருப்பவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

வியாபார தொழில் முனைவோர்கள் முதலீட்டு சமூகத்தின் முக்கிய அடிப்படையாக பார்க்கப்படுகிறார்கள். ஒரு சில தனிச்சிறப்புடைய தொழில் முனைவோர் "அரசியல் தொழில் முனைவோர்" அல்லது "சந்தை தொழில் முனைவோர்" என்று அழைக்கப்படுகின்றனர். இருப்பினும் சமூகத் தொழில் முனைவோரின் முக்கிய குறிக்கோள் சமூக மற்றும் சூழல் நலனை உருவாக்குவதை உள்ளடக்கியதாகும்.

தொழில் முனைவோர் ஒரு தலைவர் தொகு

ஒரு தொழில் முனைவோருக்கு தலைமைப்பண்பு, நிர்வாகத்திறமை மற்றும் குழு உருவாக்கம் போன்ற முக்கிய பண்புகள் இருக்க வேண்டும் என்று ராபர்ட் பி. ரிச்சி கூறுகிறார். இந்த கருத்து ரிச்சர்ட் கண்டில்லோன் என்பவரின் எஸ்ஸை சூர் ல நேச்சர் டு காமெர்ஸ் என் ஜெனெரல் (1755) (Essai sur la nature du Commerce en General) மற்றும் ஜீன் பப்டிச்டே செ என்பவரின் திரீடைசே ஆன் பொலிடிகல் எகானமி (Treatise on Political Economy)(1803-or 1834)[3] ஆகிய புத்தகங்களில் இருந்து பெறப்பட்டதாகும்.

தொழில் முனைவோர் என்பவர் தேவைகளின் மூலம் எழுகிறார் என்பது மிகுதியாக வழங்கப்படும் பொதுவான ஒரு கருத்து. பல்வேறு வாய்ப்புகள் நிலவுகையில் அவற்றை அனுகூலமாக்கிக் கொள்ள உகந்த நிலையில் இருப்போர் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஒரு தொழில் முனைவோர் என்பவர் மற்றவர்களை காட்டிலும் தீர்வு வழங்கும் திறனைக் கொண்டவராய் அறியப்படுகிறார். இந்த பார்வையில், தொழில் முனைவோராக விழைவோருக்கு கிடைக்கத்தக்கதாய் இருக்கும் தகவல் விபர விநியோகம் ஒரு புறமும், சமுதாயம் தொழிமுனைவோரை உருவாக்கும் வீதத்தை சூழ்நிலைக் காரணிகள் (மூலதனம் பெறுதல்,போட்டி ஆகியவை) எவ்வாறு பாதிக்கின்றன என்பது இன்னொரு புறமும் ஆய்வு செய்யப்படுவதாய் இருக்கிறது.[மேற்கோள் தேவை]

இது தொடர்பான விடயத்தில் ஆஸ்திரிய பள்ளியின் புகழ்பெற்ற தத்துவாசிரியரான ஜோசப் சும்பீட்டர் பிரபலமாக அறியப்படுகிறார். தொழில் முனைவோரை படைப்பாளிகளாகக் கண்ட அவரது ”படைப்பாக்கமிக்க அழிப்பு” என்ற பதம் பிரபலமான ஒன்று. தொழில்முனைவினால் ஒரு பொருளோ அல்லது நிறுவனமோ சந்தையில் நுழையும் போது ஏற்படும் மாற்றங்களை இந்தப் பதம் குறிக்கிறது.

தொழில் முனைவோரைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொகு

’ஒரு தொழில் முனைவோர் என்பவர் ஒரு கண்டுபிடிப்பாளர். வேலை செய்யுமிடம் அல்லது சந்தையில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தி அதன் மூலம் திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கிறார் அல்லது புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்குகிறார்’ என்ற கருத்தை சும்பீட்டர் முன்வைக்கிறார். மற்ற கல்வியாளர்களான சே, கேசான் மற்றும் கண்டில்லோன் ஆகியோர் ஒரு தொழில் முனைவோர் என்பவர் உற்பத்தியை ஒருங்கிணைத்து அதன் மூலம் ஏற்படும் பொருளாதார மாற்றத்திற்கு காரணமாகிறார் என்று கூறுகிறார்கள். ஒரு தொழில் முனைவோர் என்பவர் புதிய தீர்வுகளை சிந்தனை செய்யத்தக்க ஒரு சிறந்த, படைப்புத் திறனுடைய மனிதர் என்று ஷக்லே வாதிடுகிறார். இவைகள் தொழில் முனைவோர் களத்தில் காணப்படும் சில விளக்கங்கள் ஆகும். இது களத்தில் காண்பவர்க்கும் கல்வி ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையே உள்ள புரிதல் இடைவெளியைக் காட்டுகிறது. பெரும்பாலான ஆராய்ச்சிகள் தொழில் முனைவோரின் ஆளுமைக்கூறை நோக்கியே உள்ளது. ஒரு தொழில் முனைவோருக்கு ஆளுமைக்கூறு பண்பு அவசியம் இருக்கவேண்டும் என்றாலும் கூட அவைகள் சூழ்நிலைக் காரணிகளால் பாதிக்கப்படுகிறது என்று கோப் (2001) வாதிடுகிறார்.

ஷேன் மற்றும் வெங்கட்ராமன் (2000) ஆகியோர், ஒரு தொழில் முனைவோர் என்பவர் வாய்ப்புகளை உணர்ந்து அவற்றைப் பயன்படுத்திக் கொள்பவரே என்று வாதிடுகின்றனர். உக்பசரண் எட் அல் (2000) என்பவரின் கூற்றுப்படி வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது என்பது தொழில் முனைவோரைச் சார்ந்தது. மேலும் பல்வேறு வகையினர் அவர்களுடைய சொந்த வாழ்க்கைச் சூழல் மற்றும் தொழிலைச் சார்ந்து காணப்படுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

சமூகத் தொழில் முனைவோர் தொகு

சமூகத் தொழில் முனைவோர் வியாபார சந்தையில் மேம்பட்ட சரக்கு மற்றும் சேவைகளை சமூகத்திற்கு வழங்கி தனது சமூக அந்தஸ்தை உருவாக்கிக் கொள்வதை குறிக்கோளாகக் கொண்டுள்ளார். அவருடைய முக்கியமான குறிக்கோள் சமூகத்திற்கு நல்ல சேவைகளை வழங்கி சமூகத்தை மேம்படுத்துவதும், மற்றும் லாப நோக்கமில்லாத திட்டங்களை செயல்படுத்துவதும் ஆகும். "சமூகத் தொழில் முனைவோர்கள் தாம் சார்ந்துள்ள சமுதாயத்திற்கு பெரும் பங்காற்றுகிறார்கள். கடினமான சமுதாயப் பிரச்சினைகளுக்கு இவர்கள் அறிவுப்பூர்வமான தீர்வுகளை தங்களுடைய வியாபாரத்தின் அடிப்படையில் காண்கிறார்கள்" என்று சஹ்ரா எட் அல் (2009:519) கூறுகிறார்.

குறிப்புகள் தொகு

  1. Arthur O' Sullivan; Steven M. Sheffrin (2003). Economics: Principles in action. Upper Saddle River, New Jersey 07458: Prentice Hall. பக். 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-063085-3 இம் மூலத்தில் இருந்து 2016-12-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161220014709/https://www.savvas.com/index.cfm?locator=PSZu4y&PMDbSiteId=2781&PMDbSolutionId=6724&PMDbSubSolutionId=&PMDbCategoryId=815&PMDbSubCategoryId=24843&PMDbSubjectAreaId=&PMDbProgramId=23061. பார்த்த நாள்: 2021-02-24. 
  2. நிர்வாக யுக்திகள் மற்றும் ஆசிரியருக்கான வழிகாட்டி (Guide to Management Ideas and Gurus), டிம் ஹிண்டில், ஒரு பொருளாதார நிபுணர், பக்கம் 77,
  3. பார்க்க வில்லியம் ஜ.பௌமல், ராபர்ட் எ. லிடன் & காரல் ஜ.சரம், குட் கேபிடலிசம், பேட் கேபிடலிசம், அண்டு தி எகனோமிக்ஸ் ஆப் க்ரோத் அண்டு பிரச்பிரிட்டி 3 (Good Capitalism ,Bad capitalism and the economics of growth and prosperity))(2007)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்_முனைவோர்&oldid=3747016" இலிருந்து மீள்விக்கப்பட்டது