நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்

நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் (Nallur Chinnathambi Pulavar) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். ஏழு வயதிலேயே பாடல்கள் இயற்ற ஆரம்பித்தவர். 18-19ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் வில்வராய முதலியார், ஒல்லாந்தர் அரசினால் “தேச வழமை” நூலை திருத்தி அமைக்க பணிக்கப்பட்ட அறிஞர்.

வாழ்க்கைக் குறிப்புதொகு

சின்னத்தம்பிப் புலவரின் தந்தை வில்லவராய முதலியார் நல்லூரில் அக்காலத்திலே செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்து விளங்கியர். கூழங்கைத் தம்பிரான் இவரது வீட்டிலே இராக்காலத்திலே வித்தியாகாலட்சேபஞ் செய்து வந்தனர். சின்னத்தம்பிப் புலவர், தம்பிரான் காலக்ஷேபத்தின் பொருட்டுப் படித்துப் பொருள் சொல்லி வந்த பாட்டுக்களையெல்லாம் ஏழு வயதளவில் அவதானம் பண்ணி உடனே அவ்வாறே ஒப்பித்து வந்தனர். ஒருநாள் அப்புத்திரனார் வீதியிலே நின்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு புலவர் வில்லவராய முதலியார் வீடு எங்கேயென்று வினாவ, அப்புத்திரனார் அவரைப் பார்த்து,

பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை
வீசுபுகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன்
வாசலிடைக் கொன்றை மரம்.

என்று கூறினர். அதுகேட்ட புலவர் அவரை மெச்சி இச்சிறு பருவத்தே இத்துணைச் சிறந்த கவியினாலே விடை கூறிய நீ வரகவியாதல் வேண்டுமென ஆசி கூறிச் சென்றார்[1].

அரங்கேற்றம்தொகு

சின்னத்தம்பிப் புலவர் பதினைந்து வயசளவிற் சிதம்பரம் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே மறைசையந்தாதி பாடி அரங்கேற்றினார். அப்போது அவ்வாதீனத்து வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகர் என்பவர் சொல்லிய பின்வரும் கவி அவருடைய இயல்பை விளக்குகின்றது:

செந்தா தியன்மணிப் பூம்புலி யூரரைச் சேர்ந்துநிதம்
சிதா தியானஞ்செய் வில்லவ ராயன் றிருப்புதல்வன்
நந்தா வளஞ்செறி நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர்
அந்தாதி மாலையை வேதாட வேசர்க் கணிந்தனனே.

இயற்றிய பிரபந்தங்கள்தொகு

  • மறைசையந்தாதி - இது வேதாரணியேசுரர் மேற் பாடப்பெற்றது. இதற்கான உரையை உடுப்பிட்டி அ.சிவசம்புப் புலவரும், மதுரை மாகா வித்துவான் சபாபதி முதலியார் எழுதியுள்ளார்கள்
  • கல்வளையந்தாதி - இது யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் கல்வளையில் உள்ள விநாயகர் மீது பாடப் பெற்றது. இதற்கான உரையை வல்வெட்டித்துறை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ஸ்ரீ.வைத்திலிங்கம் பிள்ளை எழுதியுள்ளார்.
  • கரவை வேலன் கோவை - கரவெட்டி பிரபு திலகராகிய வேலாயுதம் பிள்ளை மேற் பாடப்பட்டது. இக்கோவையை அரங்கேற்றியபோது ஒவ்வொரு செய்யுட்கும் ஒவ்வொரு பொற்றேங்காய் பரிசாக அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இச் செய்யுட்கள் சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் அவர்களால் “செந்தமிழ்” பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
  • பறாளை விநாயகர் பள்ளு - சுழிபுரம், பறாளை என்னும் இடத்திலுள்ள விநாயகப் பெருமானின் மேற் பாடப்பட்டது.
  • நாலு மந்திரி கும்மி[2] - இது சண்டிலிப்பாய் எம். வேலுப்பிள்ளை என்பவரால் யாழ்ப்பாணம், கரவெட்டி வடக்கு, ஞானசித்தியந்திரசாலையில் 1934 இல் பதிக்கப்பெற்றது.[3] இந்நூல் மீண்டும் 2004-ஆம் ஆண்டில் மூல ஏட்டுச் சுவடியில் இருந்து புலவர் ச. திலகம் என்பவரின் பதிப்பில் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டது. நாலு மந்திரி கதை எனப் பிரபலமான இக்கதை கும்மி வடிவில் எழுதப்பட்டது இதுவொன்றே ஆகும்.[4]

மேற்கோள்கள்தொகு

தளத்தில்
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ., யாழ்ப்பாணச் சரித்திரம், 1912, யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம் (நான்காம் பதிப்பு, 2000, சென்னை: Maazaru DTP)
  2. ஞானசித்தி (இதழ்), கரவெட்டி, சனவரி 14, 1935
  3. வேலுப்பிள்ளை, எம்., தொகுப்பாசிரியர் (1934). நாலு மந்திரி கும்மி. கரவெட்டி வடக்கு ஞானசித்தியந்திரசாலை. https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdjZI7&tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF#book1/. 
  4. திலகம், ச., தொகுப்பாசிரியர் (2004). நாலு மந்திரி கும்மி. தஞ்சாவூர் சரசுவதி மகால். https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM7lJUy&tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF#book1/.