நாடியா அஞ்சுமான்

ஆப்கானிய கவிஞர்

நாடியா அஞ்சுமான் (Nadia Anjuman; திசம்பர் 27, 1980 - நவம்பர் 4, 2005)ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கவிஞராவார்.

வாழ்க்கை தொகு

நாடியா அஞ்சுமான், ஆப்கானித்தானின் வடமேற்கிலுள்ள ஹெறாத் நகரில் 1980இல் பிறந்தார். செப்டம்பர் 1995இல், தலிபான்கள் ஹெராத்தை கைப்பற்றி, அப்போதைய மாகாண ஆளுநரான இஸ்மாயில் கானை வெளியேற்றினர். புதிய தாலிபான் அரசாங்கம் ஆட்சியில் இருந்ததால், பெண்களின் சுதந்திரம் மிகவும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தலிபான்கள் பெண்கள் பள்ளிகளை மூடி, பெண்களுக்கான தனி அறிவுறுத்தல்களைத் தடை செய்ததால், தனது பத்தாம் ஆண்டு பள்ளிப் படிப்பில் ஒரு திறமையான மாணவியான, இவர் அப்போது கல்வியின் மீது நம்பிக்கை இல்லாமல் எதிர்காலத்தை எதிர்கொண்டார்.

1996 இல், அஞ்சுமான் மற்ற உள்ளூர் பெண்களுடன் அணிதிரண்டு ஹெறாத் பல்கலைக்கழக பேராசிரியர் முஹம்மது அலி ரஹ்யாப் வழிகாட்டுதலின் பேரில் இளம் பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட "தங்க ஊசி தையல் பள்ளி" என்ற மறைமுக கல்வி வட்டத்தில் கலந்து கொள்ளத் தொடங்கினார். இந்த பள்ளியின் உறுப்பினர்கள் வாரத்திற்கு மூன்று முறை தையல் கற்றல் என்ற போர்வையில் (தாலிபான் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை) கூடிவருவார்கள். உண்மையில் கூட்டங்கள் இலக்கியம் பற்றிய விவாதங்களுடன் ஹெறாத் பல்கலைக்கழக பேராசிரியர்களின் சொற்பொழிவுகளாக இருந்தன.[1] திட்டம் ஆபத்தானது; பிடிபட்டால், சிறைத் தண்டனை, சித்திரவதை மற்றும் தூக்கிலிடப்படலாம். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, பங்கேற்பாளர்கள் தங்கள் குழந்தைகளை கட்டிடத்திற்கு வெளியே காவலாளியாக இருந்தனர். மதக் காவலர்கள அணுகுவதை அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை செய்வார்கள். அந்த நேரத்தில் மாணவர்கள் தங்கள் புத்தகங்களை மறைத்துக் கொண்டு தையல் வேலைகளை மேற்கொள்வார்கள். இக்காலகட்டத்தில் தலிபான்களின் ஆட்சி முழுவதும் இந்தத் திட்டம் தொடர்ந்தது.[2]

இலக்கிய அறிமுகம் தொகு

பேராசிரியர் இரஹ்யாப் எழுத்து மற்றும் இலக்கியத்தில் இவருக்கு வழிகாட்டியாக ஆனார். பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாத ஒரு காலத்தில், இரஹ்யாப் பதினாறு வயது அஞ்சுமானுக்கு பயிற்சி அளித்து, ஒரு தனித்துவமான எழுத்தினை வளர்க்க உதவினார். ஹாபிஸ் ஷிராஸி, பிடல் தெஹ்லவி, பாரோ பாரோக்ஸாத் உட்பட இவரை ஈர்க்கும் பல எழுத்தாளர்களை அவர் இவருக்கு அறிமுகப்படுத்தினார்.

தலிபான் ஆட்சி 2001இல் அகற்றப்பட்டபோது அஞ்சுமானுக்கு 21 வயது. முறையான கல்வியைத் தொடர இப்போது சுதந்திரம் கிடைத்தது. இவர் இலக்கியம் படிக்க ஹெறாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 2002இல் பட்டம் பெற்றார்.[3] இலக்கியத்தில் தனது பட்டத்தைப் பெற்றபோது, "குல்-இ-தோடி" ("மலரின் புகை") என்ற தலைப்பில் கவிதை புத்தகத்தை வெளியிட்டார். இது ஆப்கானித்தான், பாக்கித்தான் ஈரான் ஆகிய நாடுகளில் பிரபலமானது.

திருமணம் தொகு

ஹெறாத் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் பட்டம் பெற்று அங்குள்ள நூலகத்தின் தலைவரான பரித் அகமத் மஜித் நெயா என்பவரை அஞ்சுமான் மணந்தார். இவர் ஒரு பெண் என்பதால், இவரது எழுத்து அவர்களின் நற்பெயருக்கு அவமானம் என்று இவரது கணவனின் குடும்பத்தினர் கருதினர். ஆனாலும் இவர் தொடர்ந்து கவிதைகளை எழுதினார். 25 வயதான அஞ்சுமன் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்பு இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருந்தான்.

படைப்புகள் தொகு

அஞ்சுமன் தனது முதல் கவிதைத் தொகுதியான குலே துடி அல்லது "இருண்ட மலர்" என்ற தலைப்பில் 2005இல் வெளியிட்டார். இவர் 2006இல் இரண்டாவது கவிதைத் தொகுதியை யெக் சபாத் டால்ஹோர் ("கவலையின் மிகுதி") என்ற பெயரில் வெளியிடத் தொடங்கினார். அதில் தனது திருமணத்தில் தனிமை மற்றும் சோகத்தை வெளிப்படுத்தும் கவிதைகள் அடங்கும்.

இறப்பு தொகு

நவம்பர் 4, 2005 அன்று, இவருக்கும் இவரது கணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இவரது கணவர் இவரை அடித்து காயப்படுத்தினார்.[4] சில மணிநேரங்களுக்குப் பிறகு, அஞ்சுமன் இறந்தார்.[5] [6] இதற்காக இவரது கணவர் கைது செய்யபட்டு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.[7]

இந்த கொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது. [8] அவர்களின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் எட்வர்ட்ஸ், "நாடியா அஞ்சுமானின் மரணம், ஆப்கானித்தானுக்கு பெரும் துயரமானதும் பெரும் இழப்புமாகும். . . . இது விசாரிக்கப்பட வேண்டும். மேலும் இதற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நீதிமன்றத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். " [9]

மேற்கோள்கள் தொகு

  1. "Afghanistan: Author Awaits Happy Ending To 'Sewing Circles Of Herat'" இம் மூலத்தில் இருந்து ஜூலை 8, 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040708045554/http://www.rferl.org/featuresarticleprint/2004/03/176a7386-97d6-4f9b-bec7-b403f88633cc.html. 
  2. "The defiant poets' society" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304035415/http://www.thesundaytimes.co.uk/sto/news/world_news/article163648.ece. 
  3. More details on Nadia Anjuman's story as told by her friends, family, classmates, and teachers can be found in the introduction to the anthology, Load Poems Like Guns: Women's Poetry from Herat, Afghanistan edited and translated by Farzana Marie.
  4. Gall, Carlotta (November 8, 2005). "Afghan Poet Dies after Beating by Husband". https://www.nytimes.com/2005/11/08/international/asia/08afghan.html. 
  5. "Afghan poet dies after battering". November 6, 2005. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4412550.stm. 
  6. Bergner, Jeffrey T. (August 2008). Country Reports on Human Rights Practices for 2008: Vols. I and II. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781437905229. https://books.google.com/books?id=NqIkQz68_fgC&q=nadia+anjuman&pg=PA2260. 
  7. Lamb, Christina (November 13, 2005). "Woman poet 'slain for her verse'". The Sunday Times. Archived from the original on மார்ச் 3, 2016. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 7, 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  8. Gall, Carlotta (November 8, 2005). "Afghan Poet Dies after Beating by Husband". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2005/11/08/international/asia/08afghan.html. Gall, Carlotta (November 8, 2005). "Afghan Poet Dies after Beating by Husband". The New York Times. Retrieved September 10, 2015.
  9. "Afghan woman poet beaten to death". Daily Times. November 8, 2005 இம் மூலத்தில் இருந்து மார்ச் 3, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303223641/http://archives.dailytimes.com.pk/foreign/08-Nov-2005/afghan-woman-poet-beaten-to-death. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடியா_அஞ்சுமான்&oldid=3560453" இலிருந்து மீள்விக்கப்பட்டது