நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இஃது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது[1]. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது[2] இந்நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துகள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் நூற்று நான்கு பாடல்கள் உள்ளன. இவற்றில் இரண்டு பாடல்களை ஜி.யூ.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்நூல் நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது ஆகும்.
விளம்பி நாகனார்
தொகுஇதன் ஆசிரியர் விளம்பி என்ற ஊரில் பிறந்த நாகனார் என்ற பெயர் உடையவராக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அல்லது இவர் ஆற்றிய தொழில் காரணமாக இவர் விளம்பி நாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுவாரும் உளர். இந்நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப்பாடல்கள் இரண்டும் திருமாலைப்பற்றி இருப்பதால் இவர் வைணவ பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் இந்நூல் வைணவ இலக்கியம் என்றும் கூறுவாறுமுளர். இவர் பெயரை நாயனார் நயினார் என்று கூறி, இந்நூலில் பல இடங்களில் சமண சமயக் கருத்துகளான பொய்யாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகியவை வலியுறுத்திக் கூறப்படுவதால் இதன் ஆசிரியர் விளம்பி நாகனார் ஒரு சமணர் என்றும் நான்மணிக்கடிகை சமணர்களின் இலக்கியம் என்று கூறுவாரும் உளர். இக்கருத்தை ஏற்பவர்கள் திருமாலைப்பற்றிய செய்யுட்கள் இரண்டும் இடைச்செருகல் என்று வாதிடுவர். கி.ஆ.பெ. விசுவநாதன் பதிப்பித்துள்ள மும்மணிகளும் நான்மணிகளும்[3] என்னும் நூலில் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும் நீங்கலான நூற்றுநான்கு பாடல்களே உள்ளன[4].
சங்க இலக்கியங்கள்
தொகுசங்க இலக்கியத்தை மேற்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்கள் என்று இரு பிரிவாகப் பிரிக்கலாம். மேற்கணக்கில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய பதினெட்டு நூல்கள் அடங்கும். கீழ்க்கணக்கில் நாலடியார், நான்மணிக்கடிகை அன்று தொடங்கும் பட்டியலிலும் பதினெட்டு நூல்கள் உண்டு. பத்துப்பாட்டு நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒரே புலவரால் இயற்றின ஒரு நீண்ட பாடல் உள்ளது. எட்டுத்தொகை நூல்களில் பலரின் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கீழ்க்கணக்கு நூல்கள் பலராலோ ஒரு சிலராலோ இயற்றின பாடல்களைக் கொண்டுள்ளன. மேற்கணக்கு நூல்களெல்லாம் ஆசிரியப்பாவிலோ பரிபாடலிலோ அல்லது கலிப்பாவிலோ உள்ளன. ஆனால் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் இரண்டு முதல் ஆறடி வரையுள்ள வெண்பாக்களினால் ஆனவையாகின்றன.
கீழ்க்கணக்கு நூல்கள்
தொகுகீழ்வரும் தனிப்பாடல் கீழ்க்கணக்கு நூல்களைப் பட்டியலிட்டு காட்டுகின்றது. கீழ்வரும் வெண்பா எளிதாக அவற்றை நினைவுகூரப் பயன்படுகின்றது. ஆயினும் அவ்வெண்பாவை எழுதியவர் யாரென்று தெரியாத பாடல்களில் இதுவும் ஒன்று.
- நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
- பால் கடுகங் கோவை பழமொழி -- மாமூலம்
- இன்னிலைய வாங் காஞ்சியுடன் ஏலாதி என்பவே
- கைந்நிலை யுமாம் கீழ்க்கணக்கு
எடுத்துக்காட்டு
தொகுகல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் இயமன் ஆகின்றன. வாழை மரம் தான் ஈனுகின்ற காயினாலேயே அழிந்துபோகிறது. செய்யத் தகாதவற்றைச் செய்பவர்களுக்கு அறமே இயமன். ஒரு குடும்பத்துக்குத் தீய ஒழுக்கம் கொண்ட பெண்ணே இயமனாவாள் என்ற பொருள்கொண்ட, நான்மணிக்கடிகைப் பாடலொன்றைக் கீழே காண்க. இப்பாடல் டி.எஸ் பாலசுந்தரம் பிள்ளை பதிப்பித்துள்ள நான்மணிக்கடிகை நூலில் 85-ஆவது பாடல்[5]
- கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
- மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
- அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
- இல்லத்துத் தீங்கொழுகு வாள்
இவ்வெண்பாபில் முதல் மூன்று கருத்துகளும் கூற்றம் (death) என்ற சொல்லில் முடியும் போது நான்காவது கருத்துக் கூற்றம் என்ற சொல்லுடன் தொடங்குகிறது. முதல் மூன்று கருத்துகளும் ஒரு படிவத்தைக் (Pattern) கொண்டுள்ளபோது நான்காவது கருத்துப் படிவமாற்றம் (pattern variation) ஒன்றைப் பயன்பாட்டில் கொண்டுவருவதற்கான நோக்கம் என்னவாக இருக்கக்கூடும்? கூர்ந்து மேற்கண்ட செய்யுள் அமைப்பைப் பார்ப்போமானால் ஒரே படிவத்தையே பயன் படுத்தியிருந்தால் செய்யுளுக்கு இப்பொழுது கிடைக்கும் இனிமை கிடைத்திருக்காது. மற்றும் கடைசிக் கருத்துக்குப் படிவமாற்றம் இன்றி அளிக்கப்பட்டிருந்தால் இப்பொழுது அதற்கு கிடைத்திருக்கும் அழுத்தம் (emphasis) படிவ மாற்றம் இல்லாதபோது கிடைத்திருக்காது.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ ஒரு சில பதிப்புகளில் நூற்று ஆறு வெண்பாக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன
- ↑ மூன்று வெண்பாக்கள் ஐந்தடிகளை கொண்டனவாக இருக்கின்றன
- ↑ மும்மணிகள் என்ற தொடர் திரிகடுகத்தையும் நான்மணிகள் எனும் தொடர் நான் மணிக்கடிகையையும் குறிக்கின்றன
- ↑ மும்மணிகளும் நான்மணிகளும், கி.ஆ.பெ விசுவநாதன், பாரி நிலையம், சென்னை 600 108, முதற்பதிப்பு 1954, 11 ஆம் பதிப்பு 2007
- ↑ பதிணெண்கீழ்க்கணக்கு நூல்கள் : நான்மணிக்கடிகை, இளவழகனார் என்கிற டி.எஸ்.பாலசுந்தரம்பிள்ளையின் உரையுடன், திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், முதற் பதிப்பு 1904, திருவரங்கனார் அச்சகம், சென்னை -600018, 1980