புறத்திரட்டு என்னும் நூலில் காணப்படும் சில பாடல்கள் நாரத சரிதை என்னும் நூலின் பெயரிட்டுக் காட்டப்பட்டுள்ளன. [1] இதனால் இப் பெயருடைய நூல் இருந்தது என்பதை அறியமுடிகிறது. இதில் வரும் பாடல்களில் வரும் பொருளை ஒப்புநோக்கி, சு. வையாபுரிப்பிள்ளை இந்த நூலைச் சமணநூல் எனக் கருதுகிறார். 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூல் யாப்பருங்கல விருத்தி இதன் பாடலை மேற்கோள் காட்டுவதால் நாரத சரிதை நூலின் காலம் 10 ஆம் எனக் கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீபுராணம் என்னும் வடமொழி நூலில் நாரதன். பர்வதன் ஆகியோரின் கதைகள் விரிகின்றன. அவற்றிலுள்ள நாரதன் கதையைக் கூறுவதால் இந்த நூல் 'நாரதன் சரிதை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியரைப் பற்றிய செய்தி எதுவும் தெரியவில்லை. இந்த நூல் அரிச்சந்திர சரிதம் என்னும் பெயருடன் முதலில் பதிப்பிக்கப்பட்டிருந்தது. நாரதன் ஓர் அரசன் என்றும், பிற்காலத்தில் துறவு பூண்டான் என்றும் பிற நூல்களின் கதையைப் போல இந்த நூலின் கதையும் அமைந்திருக்கும் என்பதைப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன.

புறத்திரட்டில் காணப்படும் பாடல்கள் தொகு

  • நாரதன் சிறப்பையும் நகரத்தையும் கூறும் பாடல்கள் [2]
  • பெண்மையைப் பழிக்கும் பாடல் [3]
  • துறவு பற்றிய பாடல் [4]
  • புறத்திரட்டில் காணப்படும் இந்நூலின் பிற பாடல்கள் [5]
  • உரைநூல்களில் [6] காணப்படும் இந்நூலின் பாடல் [7]

அடிக்குறிப்பு தொகு

இதன் கீழ் வரும் பாடல்கள் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டவை

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 400. 
  2. வல் என்ற சொல்லும் புகழ் வாய்மை வழீஇய சொல்லும்
    இல் என்ற சொல்லும் இலன் ஆகலின் யாவர் மாட்டும்
    சொல்லும் குறை இன்மையின் சோரரும் இன்மையாலே
    கொல் என்ற சொல்லும் உரை கற்றிலன் கொற்ற வேந்தன்

    மன்னன் மேவும் கோயில் மேரு மான மற்று இம் மண் எல்லாம்
    என்னலாய ஊரிடத்து இலங்கு மாளிகைக் குலம்
    பொன்னின் மேருவின் புறம் பொருப்பு நேர அப் புறம்
    துன்னு நேமி வெற்பு என்பர் சூழ் மதில் பரப்பையே

  3. வெவ் விடம் அமுது என விளங்கும் கண்ணினார்க்கு
    எவ்விடம் உடம்பினில் இழிக்கத் தக்கன
    அவ்விடம் ஆடவர்க்கு அமிர்தம் ஆதலால்
    உய்வு இடம் யாது இனி உரைக்கற் பாலையே

  4. அருந்திய குறையில் துன்பம் ஆங்கு அவை நிறையில் துன்பம்
    பொருந்து நோய் பொறுத்தல் துன்பம் பொருந்திய போகத் துன்பம்
    மருந்தினுக்கு உஞற்றல் துன்பம் மற்றவை அருந்தல் துன்பம்
    இருந்தவாறு இருத்தல் துன்பம் யார் கொலோ துன்பம் இல்லார்

    வாழ்கில் நாம் மக்களும் நம் வழிநின்றார் என உள்ளம்
    தாழ்கின்றார் தாழ்கில்லார் தமது இல்லா ஆனக்கால்
    ஆழ்கின்ற குழி நோக்கி ஆதாரம் ஒன்று இன்றி
    வீழ்கின்றார் மெய்யதாம் மெய் தாங்க வல்லீரோ

  5. பெற்றவை பெற்றுழி அருந்திப் பின்னரும்
    மற்றும் ஓர் இடவயின் வயிறு தான் நிறைந்து
    இற்றை நாள் கழித்தனம் என்று கண் படூஉம்
    ஒற்றை மா மதிக்குடை அரசும் உண்டு அரோ

    புழு மலக் குடருள் மூழ்கி புலால் கமழ் வாயில் தேய்த்து
    விழும் அவை குழவி என்றும் விளங்கிய காளை என்றும்
    பழுநிய பிறவும் ஆகிப் பல் பெயர் தரித்த பொல்லாக்
    குழுவினை இன்பமாக கொள்வரோ குருடு தீர்ந்தார்

  6. யாப்பருங்கல விருத்தி, நேமிநாத உரை
  7. ஆசை அல்குல் பெரியாரை அருளும் இரையில் சிறியாரை
    கூசு மொழியும் புருவமும் குடிலம் ஆகி இருப்பாரை
    வாசக் குழலும் மலர்க் கண்ணும் மனமும் கரிய மடவாரை
    பூசல் பெருக்க வல்லாரைப் பொருந்தல் வாழி மட நெஞ்சே

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரத_சரிதை&oldid=1451041" இலிருந்து மீள்விக்கப்பட்டது