நிக்கல்சனின் நீர்மமானி

நிக்கல்சனின் நீர்மமானி (Nicholson's Hydrometer) என்பது நீர்ம நிலையிலுள்ள பொருட்களின் ஒப்படர்த்தியைக் காணப் பயன்படும் ஒரு கருவியாகும். இக்கருவி பாரன்கீட் நீர்மமானியின் ஒரு மேம்படுத்தப்பட்ட அமைப்பாகும். வில்லியம் நிக்கல்சன் (1753-1815) என்பவரால் இது அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

அமைப்பு தொகு

நிக்கல்சனின் நீர்மமானி நீரில் மிதக்கக்கூடிய ஒரு மாறாக் கனவளவுக் கருவியாகும். இக்கருவியில் ஐந்து செமீ விட்டமும் பத்து செமீ உயரமும் கொண்ட ஒர் பொல்லாலான உலோக உருளை உள்ளது. இரு முனைகளும் கூம்பு வடிவிலுள்ளன. மேல்புறக் கூம்பில் ஒரு கம்பி பொருத்தப்பட்டுள்ளது. கம்பியின் மறு முனையில் ஒரு தட்டு உள்ளது. இத்தட்டில் சிறு நிறைகள் வைக்க முடியும். இக்கம்பியில் ஒரு குறி இடப்பட்டுள்ளது. கீழ்ப்பக்க கூம்பில் ஒரு சிறு வாளி இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் தேவையான அளவு சிறு ஈயக்குண்டுகள் இடப்பட்டுள்ளன. இதனால் நீரில் மிதக்கவிடும் போது நீர்மமானி செங்குத்தாக மிதக்க முடிகிறது.

சோதனை தொகு

உலர்ந்த நிலையில் நிக்கல்சன் நீர்மமானியின் நிறையினைத் துல்லியமாகக் காணவேண்டும் (W). இந்த நிலையில் மானியை நீரில் மிதக்க விடவேண்டும். தட்டில் தேவையான சிறு நிறைகளை வைத்து தண்டிலுள்ள குறிவரை மூழ்கச் செய்யவேண்டும் (w). இதன்பின்பு ஒப்படர்த்தி காண வேண்டிய நீர்மத்தில் மிதக்கவிட்டு குறிவரை மூழ்க வைத்து நிறையைக் காணவேண்டும் (x).

இப்போது ஒப்படர்த்தி = குறிவரை நீர்மத்தில் மூழ்கத் தேவையான மொத்த நிறை / குறிவரை நீரில் மூழ்கத் தேவையான மொத்த நிறை = (W+x) / (W+w).[2]

 
பாரன்கீட் நீர்மமானி.

கோட்பாடு தொகு

மிதக்கும் பொருளின் நிறையும் அதனால் விலக்கப்படும் நீர்மத்தின் நிறையும் சமமாக இருக்கிறது.

பாரன்கீட் நீர்மமானி தொகு

பாரன்கீட் நீர்மமானி (Fahrenheit hydrometer): இக்கருவியில் கீழ்பகுதியில் காணப்படும் வாளிக்குப் பதிலாக போதிய சுமை ஏற்றப்பட்ட ஒரு குமிழ் உள்ளது. ஆனால், செயல்பாடு ஒன்றே. இதனை தானியேல் கேப்ரியல் பார்ன்கீட் (1686–1736) என்பவர் கண்டுபிடித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Nicholson's Hydrometer". பார்க்கப்பட்ட நாள் 18 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. School Physics by Elroy McKendree Avery, 1895, American Book Company, New York, பக். 70.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்சனின்_நீர்மமானி&oldid=3502689" இலிருந்து மீள்விக்கப்பட்டது