நுளம்பர்

நுளம்பர் என்னும் மரபினர் கிபி எட்டாம் நூற்றாண்டுக்கும் 11 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தென்னிந்தியாவில் நுளம்பபாடி என்னும் பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ஆவர். தொடக்கத்தில் நுளம்பபாடி இன்றைய ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குள் அடங்கியிருந்தது. பிற்காலத்தில் இது தமிழ்நாட்டிற்குள்ளும் விரிவடைந்தது. தொடக்ககால நுளம்பபாடி, நுளம்பபாடி 1000 என அழைக்கப்பட்டது. விரிவடைந்த பின்னர் இது நுளம்பபாடி 32000 எனப்பட்டது. விரிவடைந்த நுளம்பபாடியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனத்பூர் பகுதி, கர்நாடக மாநிலத்தில் அடங்கும் சித்திரதுர்க்கா, தும்கூர், பெல்லாரி, பெங்களூர், கோலார் ஆகிய பகுதிகளும், தற்போது தமிழ்நாடு மாநிலத்தில் அடங்கும் தர்மபுரி, கிருட்டிணகிரி, வட ஆற்காடு மாவட்டப் பகுதிகளும் அடங்கியிருந்தன.

நுளம்ப மரபினர், கங்கர்களுக்கும், ராட்டிரகூடர்களுக்கும் அடங்கியே ஆட்சிசெய்து வந்ததாகத் தெரிகிறது. இவர்கள் தங்களைப் பல்லவர்களின் வழியைச் சேர்ந்தவர்களாகக் கூறுகின்றனர். ஏமாவதித்தூண் கல்வெட்டு மூலம் இவர்களுடைய மரபு பற்றிய சில தகவல்கள் தெரிய வந்துள்ளன.[1] இக்கல்வெட்டில் நுளம்ப மன்னர்களாக,

  1. திரிநயன பல்லவன்
  2. மங்கள நுளம்பாதிராசன்,
  3. சிம்மபோத்தன்
  4. சாரு பொன்னீரன்
  5. போலால் சோர நுளம்பன்
  6. நுளம்ப மகேந்திரன்
  7. ஐயப்பதேவன்,
  8. அன்னிகன்
  9. திலிப்பரசன்

ஆகியோரின் பெயர்கள் கிடைக்கின்றன.

குறிப்புகள்தொகு

  1. Epigraphia Camatica,Vol.XII,C.24,28,35,36.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுளம்பர்&oldid=1793189" இருந்து மீள்விக்கப்பட்டது