முதன்மை பட்டியைத் திறக்கவும்

நைதரசன் ஆக்சைடு (Nitrogen Oxide) அல்லது நாக்சு (NOx) என்பது பொதுவாக நைட்ரசனும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் நைட்ரசன் ஆக்சைடு சேர்மங்களின் சுருக்கப் பெயராகும். குறிப்பாக ஒரு நைட்ரசன் மூலக்கூறும் ஒன்றோ இரண்டோ ஆக்சிசன் மூலக்கூறும் சேர்ந்து உருவாகும் நைட்ரிக் ஆக்சைடு (NO) அல்லது நைட்ரசன் டை-ஆக்சைடு (NO2) என்னும் வேதிச்சேர்மங்களே நாக்சு என்று வழங்கப்பெறும். இவை எரிப்புச் செலுத்தங்களில் (combustion processes), குறிப்பாக உயர்வெப்ப எரிப்புக்களின் போது உருவாகும் தன்மையுடையவை.

இயல்சூழ் (ambient) வெப்ப நிலைகளில் காற்றிலே கலந்திருக்கும் நைட்ரசனும் ஆக்சிசனும் ஒன்றோடு ஒன்று பிணைவதில்லை. ஆனால் தான்நகர்ச்சி வண்டிகளில் உள்ளெரிப்பு எந்திரங்களில் காற்றும் எரிபொருளும் கலந்து எரியும்போது மிக அதிக வெப்பம் உருவாகி, அந்த உயர்வெப்ப நிலைகளில் நைட்ரசனும் ஆக்சிசனும் ஒன்றோடு ஒன்று வேதிவினையாற்றி இணைந்து பலவித நைட்ரசன் ஆக்சைடு சேர்மங்களை உருவாக்குகின்றன. அதனால், வாகன நெரிசல் அதிகம் இருக்கும் பெருநகர்ப்புறங்களில் காற்றில் இந்த நாக்சுச் சேர்மங்களின் கலப்பு அதிகமாக இருக்கும்.

நாக்சு மூலக்கூறுகளும் ஆவியாகும் கரிமச் சேர்வைகளும் சூரிய ஒளியில் வேதிவினையாற்றும்போது சூழல் மாசுபடுகிறது. குறிப்பாக வேனிற்காலங்களில் இந்தப் பிரச்சினை அதிகமாகி, ஆசுத்துமா உள்ளவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், மூச்சுத் தொந்தரவுகளும், நுரையீரல் பாதிப்புகளும் ஏற்பட முதன்மைக் காரணிகளாகின்றன.

காற்றிலே கலந்திருக்கும் ஈரப்பதத்தினோடு வேதிவினையாற்றி அமில மழைக்கும் இவை காரணமாகின்றன. கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் இந்த வேதி வினையைக் குறிக்கலாம்.

2NO2 + H2O → HNO2 + HNO3

நாக்சு தரும் பிரச்சினைகள்தொகு

  • புவிநிலையில் ஓசோன் உருவாக ஒரு முக்கியமான பொருளாக நாக்சு இருக்கிறது. ஓசோன் மூச்சுத் தொந்தரவுகளை உருவாக்க வல்லது.
  • வேதிவினைகளின் வழியாக உருவாகும் நைட்ரேட்டு துகள்களும் நைட்ரசன் டை-ஆக்சைடு இவையும் மூச்சுப் பிரச்சினைகளுக்குத் துணைபோகும் பொருட்கள்.
  • அமில மழை பெய்யக் காரணமாகிறது.
  • மண்ணுக்கு அதிகச்சத்தாக அமைந்து நீரின் தரம் குறையக் காரணமாக இருக்கிறது.
  • சூழ்வெளித் துகள்கள் அதிகரிக்கக் காரணமாயிருந்து, பார்வை மங்கல் பிரச்சினைகளையும் உருவாக்குகிறது.
  • நச்சு வேதிப் பொருட்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது.
  • புவி வெப்பத்திற்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.

நாக்சும், அதன் வேதிவினைச் சேர்மங்களும் காற்றிலே பரவக் கூடியவை என்பதால், அவை உருவாகும் இடங்களில் மட்டுமின்றி அவற்றை ஒட்டியுள்ள பிற பகுதிகளிலும் மேற்கண்ட பிரச்சினைகளைப் பார்க்கலாம். அதனால், நாக்சைக் குறைக்கும் முறைகளை அது உருவாகும் இடத்தில் மட்டுமின்றி, அதனை ஒட்டிய சுற்றுப் பகுதி முழுவதும் கையாள வேண்டும்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைதரசன்_ஆக்சைடு&oldid=2741788" இருந்து மீள்விக்கப்பட்டது