முதலாம் பகதூர் சா

முதலாம் பகதூர் ஷா
(பகதூர் ஷா I இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முதலாம் பகதூர் சா (Bahadur Shah I - அக்டோபர் 14, 1643 – 27 பெப்ரவரி 1712) 1707 ஆம் ஆண்டு முதல் 1712 வரை இந்தியாவை ஆட்சி செய்த முகலாயப் பேரரசராவார். இவரது இயற்பெயர் குதுப் உத்-தீன் முகம்மத் முவாசம் என்பதாகும். பின்னர் இவரது தந்தையார் இவருக்கு சா ஆலம் என்னும் பெயரைக் கொடுத்தார். இவர் பதவி ஏற்றபோது பகதூர் சா என்பதைத் தனது அரியணைப் பெயராக ஏற்றுக்கொண்டார்.

பகதூர் சா
முகலாயப் பேரரசின் பேரரசர்
Shah Alam Bahadur (reigned 1707-1712), circa 1675 Painting from LACMA
8வது இந்திய முகலாயப் பேரரசர்
ஆட்சி1707 - 1712
முன்னிருந்தவர்முகமது ஆசம் ஷா
பின்வந்தவர்சகாந்தர் சா
மனைவி
  • நிசாம் பாய்
வாரிசு(கள்)சகாந்தர் சா
அரச குலம்தைமூரிய வம்சம்
தந்தைஔரங்கசீப்
சமயம்இசுலாம்

இளமைக்காலம் தொகு

முவாசம், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்புக்கும், ராஜௌரியின் அரசரின் மகளான நவாப் பாய் பேகம் சகேபா என்பவருக்கும் இரண்டாவது மகனாக, 1643 ஆம் ஆண்டு புர்கான்பூரில் பிறந்தார். ஔரங்கசீப்பின் காலத்தில் அவரது வடமேற்கு ஆட்சிப் பகுதிக்கு ஆளுனராக முவாசம் நியமிக்கப்பட்டிருந்தார். இப்பகுதியில், சீக்கிய மதம் வழங்கிவந்த பஞ்சாப்பும் உள்ளடங்கியிருந்தது. ஔரங்கசீப்பின் கடுமையான ஆணைகளைத் தனது பகுதியில் முவாசம் தளர்த்தியிருந்தார். இதனால் இப்பகுதிகளில், சஞ்சலமான அமைதி நிலவியது. இவர் சீக்கியர்களின் கடைசிக் குருவான குரு கோவிந்த் சிங்குடன் நட்புடன்கூடிய தொடர்புகளை வைத்திருந்தார்.

ஆட்சிக்காலம் தொகு

ஔரங்கசீப் இறந்ததுமே முவாசமுக்கும், அவரது உடன்பிறந்தோருக்கும் இடையே பதவிப் போட்டி தலை தூக்கியது. இவரது தம்பிகளில் ஒருவரான முகமது ஆசம் ஷா, தன்னைப் பேரரசனாக அறிவித்து, தில்லி நோக்கிப் படையெடுத்து வந்தான். மூன்று மாதம் வரை பதவியின் இருந்த அவர், "பகதூர் சா"வுடன் இடம்பெற்ற போரில் இறந்தார். இன்னொரு சகோதரரான முகம்மத் காம் பாசுக்கு என்பவரும் 1709 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார்.

ஔரங்கசீப் பேரரசில், சாரியாச் சட்டங்களைக் கடுமையான விதிகளுடன் நிறைவேற்ற ஆணை பிறப்பித்திருந்தார். இதனால், பேரரசுக்கு உட்பட்ட மராட்டியர்கள், சீக்கியர்கள், ராசபுத்திரர்கள் போன்ற பல பிரிவினர் மத்தியில் தீவிரவாதம் தலைதூக்கியிருந்தது. இதனால் ஔரங்கசீப் இறந்தபோது கிளர்ச்சிகள் பரவலாக இருந்தன. பகதூர் சா ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது பேரரசு உறுதியற்ற நிலையிலேயே இருந்தது. தந்தையுடன் ஒப்பிடும்போது மிதவாதியாக இருந்த பகதூர் சா, வேகமாகச் சிதைந்துகொண்டிருந்த பேரரசின் தீவிரவாதப் பகுதியினரோடு உறவுகளை மேம்படுத்த முயன்றார். பகதூர் சா, சீக்கியத் தளபதி, பந்தா சிங் பகதூரின் படைகளைப் பின்வாங்க வைத்தார். அவரது மகன் ஆசிம்-உசு-சானின் உதவியோடு அசாமிலும் தனது கட்டுப்பாட்டை நிலை நாட்டினார்.

இவரது காலத்தில் இசைக்கு மீண்டும் ஆதரவு அளிக்கப்பட்டது. கோவில்கள் எதுவும் அழிக்கப்படவில்லை. இவரது குறுகிய ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் பேரரசு ஒன்றாக இருந்தாலும், உட்பூசல்கள் உயர்நிலையில் இருந்தன. எனினும் இவரது தந்தையாரால் ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான பாதிப்புக்களை இவரால் சீர்படுத்த முடியவில்லை.

 
முதலாம் பகதூர் சாவினால் கட்டப்பட்ட மெகரௌலியில் உள்ள மோத்தி மசூதி.

போர்த்திறமை இன்மை, முதிர்ந்த வயது போன்ற இவரது குறைபாடுகள் பேரரசின் பிரச்சினைகளை மேலும் கூட்டின. இவரது குறுகியகால ஆட்சிக்குப் பின்னர் முகலாயப் பேரரசு ஒரு நீண்ட கால இறங்குமுக நிலையை எய்தியது. இவர் ஒரு துணிவுள்ளவரும், புத்திக்கூர்மை கொண்டவரும் எனக் கூறப்படுகிறது. எனினும் இவரது தந்தையின் அடக்கு முறைகளினால் இவரது திறமைகள் பாதிக்கப்பட்டன. பொதுவாகப் பலரும் இவர் ஒரு மென்மையான, நீதியான மனிதர் என்றும்; படித்த, மதிப்புக்குரிய, ஒழுக்கமான ஒருவராக இருந்தாரென்றும் ஏற்றுக்கொள்கின்றனர். தனக்கு முன் இருந்தவர்களைப் போல் பெருமைக்குரியவராக இல்லாதிருந்தாலும், அவருக்குப் பின் வந்தவர்களுடன் ஒப்பிடும்போது ஓரளவு வெற்றிகரமான ஒருவராக இருந்தார். இவரது சடுதியான இறப்புக்குப் பின்னர் முகலாயப் பேரரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. இவருக்குப் 12 ஆண்மக்களும், 183 பெண்மக்களும் இருந்தனர்.

பகதூர் சா 1712 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் தேதி, லாகூரில் சடுதியாக இறந்துவிட்டார். இவரது உடல், மெகரௌலியில், 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூபி குருவான குதுப்புத்தீன் பக்தியார் காக்கி என்பவரின் தர்காவுக்கு அருகேயுள்ள ஓரிடத்தில் பிற முகலாய வம்சத்தைச் சேர்ந்தோரின் கல்லறைகளுக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_பகதூர்_சா&oldid=3657649" இலிருந்து மீள்விக்கப்பட்டது