பகுபத உறுப்புகள்

தமிழ் இலக்கண வகை.
(பகுபத உறுப்புக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தனிச்சொல்லை மொழியியல் நோக்கில் நன்னூல் பதவியல் [1] என்னும் பகுதியில் அணுகுகிறது. பொருள் தரும் தனிச் சொல்லை அந்த நூல் பதம் எனக் குறிப்பிடுகிறது. பதத்தை அது பகுபதம், பகாப்பதம் என இரண்டு பகுதிகளாக்கிக் கொண்டுள்ளது. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன பகுபத உறுப்புக்கள்.[2]

சில எடுத்துக்காட்டுகள் தொகு

சொல் வினை பகுதி விகாரம் சந்தி இடைநிலை சாரியை எழுத்துப்பேறு விகுதி
நடந்தனள் செய்வினை நட ந் (த்) 'த்' இறந்தகால இடைநிலை, அன் - 'அள்' பெண்பால் வினைமுற்று விகுதி
படுத்தது செய்வினை படு - த் 'த்' இறந்தகால இடைநிலை, - 'து' ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
பட்டது செயப்பாட்டுவினை படு 'பட்டு' ஆனது - 'ட்' இறந்தகால இடைநிலை, - 'து' ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
செய்யாத எதிர்மறை வினை செய் யகர ஒற்று இரட்டியது விகாரம் - 'ஆ' எதிர்மறை இடைநிலை, 'த்' இறந்தகால இடைநிலை, - - 'அ' பெயரெச்ச விகுதி
எழுதுதல் தொழிற்பெயர் எழுது - - - - 'த்' 'அல்' தொழிற்பெயர் விகுதி

திருக்குறள் சொற்கள் தொகு

1 தொகு

அகரம் முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

அகரம் - [அ+கரம்] - அ (எழுத்தைச் சுட்டும் பெயர்ப் பகுதி). கரம் (எழுத்துச் சாரியை)
முதல - [முதல்+அ] - முதல் (முந்துதலைக் குறிக்கும் வினைப் பகுதி), அ (பன்மை வினைமுற்று விகுதி)
எழுத்து - எழுது (வினைச்சொல்), எழுத்து (வினைச்சொல் ஒற்று இரட்டிப் பெயர்ச்சொல்லாக மாறியது)
எல்லாம் - இடைச்சொல்
ஆதி - [ஆ+த்+இ] - ஆ (ஆதலையும், ஆக்குதலையும் குறிக்கும் பகுதி), த் (எழுத்துப்பேறு), இ (பெண்பால் பெயர்ச்சொல் விகுதி) [3]
பகவன் - [பகவு+அன்] - பகவு (பகுபடுதலைக் குறிக்கும் பெயர்), அன் (ஆண்பால் விகுதி)
முதற்றே - [முதல்+து+ஏ] - முதல் (முந்துதலைக் குறிக்கும் வினைப் பகுதி), து (ஒன்றன்பால் வினைமுற்றி விகுதி). ஏ (தேற்றப்பொருள் தரும் ஏகார இடைச்சொல்)

இதனால் தெரியவரும் பிழிவு.

ஆதி என்பது ஆகுவதும், ஆக்குவதுமாகிய பொருள். இது பெண்பால்.[4]
பகவன் என்பது நம்மோடும் பேரண்டத்தோடும் பகுதிப்பட்டுக் கிடக்கும் ஆண்.[5]
இந்த ஆதியாகிய பகவன் உலகுக்கு முதல் [6]
இந்த இருப்பு, இயக்க அமைதியானது, 'அ' எழுத்து பிற எல்லா உரு எழுத்துக்களுக்கும் ஆதியாகவும், அவற்றின் உள்ளே ஊடுருவிக் கிடக்கும் ஒலியெழுத்தாகவும் உள்ளது போன்றது.

2 தொகு

கற்றதனால் ஆய பயன் என் கொல் வால் அறவன் நல் தாள் தொழாஅர் எனின்.

கற்றதனால் – [கல் (கற்று) ற் அது அன் ஆல்] – கல் (அறிவைத் தோண்டுதலை உணர்த்தும் பெயர்ச்சொல் - பகுதி), கற்று (கல்+ற்+உ), ற் (இறந்தகால இடைநிலை), அது (பெயராக்கப் பின்னொண்டு), அன் (சாரியை), ஆல் (மூன்றாம் வேற்றுமை உருபு)
ஆய - [ஆ (ய்) அ] - ஆ (ஆதலை உணர்த்தும் பகுதி), ய் (உடம்படுமெய்), அ (பெயரெச்ச விகுதி)
பயன் – பயத்தலைக் குறிக்கும் பெயர்.
என் – வினாச்சொல்
கொல் - இடைச்சொல்
வால் – தூய்மையை உணர்த்தும் உரிச்சொல். சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களின் துகள்கள் சுழன்றுகொண்டிருக்கின்றன. ஆனால் அந்த வண்ணங்கள் தன்னை வெளிக்காட்டாமல் பிற உருப்பொருள்களைக் காட்டுகின்றன. இப்படி உருவ, அருவப் பொருள்களையும் உயிரின் இயக்கத்தில் அறிவாக இயங்கிக் காட்டுவதுதான் வாலறிவு.
அறிவு – அறியும் இயக்கமும், அறியப்படும் பொருளும் அறிவு. (பெயர்ச்சொல்)
நல் – நன்மை தருவதை உணர்த்தும் உரிச்சொல்
தாள் – காலடி இயக்கமாகிய முயற்சியை உணர்த்தும் பெயர்ச்சொல்
தொழாஅர் – [தொழு (தொழ்) ஆ அ ர்] – தொழு (பகுதி), தொழ் என ஈறு கெட்டு நின்றது விகாரம், ஆ (எதிர்மறை இடைச்சொல்), அ (அளபெடை), ர் தொல்காப்பியம் காட்டும் பலர்பால் வினைமுற்று விகுதி), - [தொழு ஆ (அ) ஆர்] எனப் பகுத்துக் காண்பது நன்னூல் வழி காணும் நெறி – ஆ (எதிர்மறை இடைச்சொல் மறைந்து நின்றது), ஆர் (பலர்பால் வினைமுற்று விகுதி)
எனின் – [என் இன்] – என் (என்று சொல்லு என்னும் பொருள்படும் வினைச்சொல்) சிலப்பதிகாரத்தில் ‘என்’ என்னும் அசைச்சொல்லால் காதைப்பாடல்கள் முடிகின்றன. அவை வெறும் அசைநிலைகள் மட்டுமல்லாமல் என்று சொல்லு என்னும் பொருளையும் தருவன.

இந்தச் சொல்லமைதி விளக்கத்தால் பெறப்படும் பிழிவு.

கற்றதன் பயன் அறிவின் முயற்சியைத் தொழுதல்.

மேற்கோள்கள் தொகு

 1. நன்னூல் நூற்பா 128 முதல் 145
 2. பகுதி விகுதி யிடைநிலை சாரியை
  சந்தி விகார மாறினு மேற்பவை
  முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும் (நன்னூல் 133)
 3. பணிவுடையன் இன்சொலன் ஆதல் என்னும் பெயரில் 'ஆ' வினைச்சொல்
 4. பெண்ணானவள் ஆண் விந்துவை ஆக்கியும், அதனோடு தானும் ஆகியும் நாமாக இருப்பவள். அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
  நின்றது மன்னவன் கோல் (திருக்குறள் 543)
  தானே மன்னவனாகியும், மக்களால் மன்னவன் ஆக்கப்பட்டும் ஆதியாகி நம்மை ஆள்பவன் இறை என்று வைக்கப்படும் அரசன்.
 5. எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
  உள் பகை உள்ளதாம் கேடு (திருக்குறள் 889) எள்ளுக்குள்ளே இருக்கும் பகவு எண்ணெய்.
 6. தோற்ற வரிசையில் முதல். விளைவாக வரும் கண்டுமுதல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுபத_உறுப்புகள்&oldid=3907197" இலிருந்து மீள்விக்கப்பட்டது