பகுப்பு பேச்சு:சமூகம்

குறிப்புகள் தொகு

அரசியல் முறைமைகள் தொகு

பொருளியல் முறைமைகள் தொகு


கூவாகம்: கூத்தாண்டவர் அரவாணிகள் விழா தொகு


சமூகம், சமூகம் சார்ந்த கட்டமைப்புகளிலும், இன்று வரையிலும் கூட பெரும்பாலான இனம், ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வருவது நம் கண் முன்னே காணும் நிஜம். ஆயினும் பொது வெளிச் சமூகத்தில் பிறர் உணர்வோடு தன்னைப் பொருத்தி பார்க்கும் பொது நோக்குடையோரின் முயற்சியால் வரலாற்றில் காலங்காலமாய் மறுக்கப்பட்ட உடல்களின், கலாச்சாரங்களின் மீதான கவனமும், புரிந்துணர்வும் அதிகப்பட்சமாய் உணரப்படும் காலம் இது.

பெரும்பான்மை சமூகத்தில் காணப்படும் இருபாலின நிலையினை கேள்விக்குட்படுத்துவதும், இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு சமூகவெளியில் முறையான அங்கீகாரமும், அடிப்படையான வாழ்வுரிமையும் இல்லாத இனமான அரவாணிகளின் (மாறியபாலினர்) மௌன வரலாற்றைக் கிளறுவதும், இதுவரை திறக்கப்படாத பக்கங்களைத் திறந்து காட்டுவதுமே அர்த்தநாரீஸ்வரம்.

நமது தந்தைமை ஆதிக்க சமூகத்தில் சமூகத்தாலும், சமூக கட்டமைப்புகளாலும் இன்று வரையிலும் தொடர்ச்சியாக அரவாணிகள் இனம் ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகிறது. ஒரு உடல் அரவாணியாவது என்பது அவரின் தேர்வு அல்ல. பிறப்பால் ஆணாகப் பிறந்தாலும் உணர்வுகள் ரீதியாகப் பெண் உணர்வையே உணர்கின்றனர் அரவாணிகள். சிறு வயதில் பெற்றோரின் ஆசைகளுக்கும், வீட்டு வேலைத் தேவைகளுக்கும் ஆட்படுத்தப்படும் அரவாணிகள் பருவ வயதில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகக் கொந்தளிப்பான தருணங்களுக்குள்ளாகின்றனர்.

ஒரு அரவாணியின் வாழ்வு நிலைப் பாதையில் மிகவும் வேதனையான பருவம் இது. உடலாலும், மனதாலும் தேர்வுக்குள்ளான பால் நிலையை தக்க வைத்துக் கொள்ள முயலும் போது சமூகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பு வெளியான குடும்பத்திலிருந்தும் தனிமைப் படுத்தப்படுகின்றனர். பின்பு சமூகம், சமூகம் சார்ந்த கட்டமைப்புகள், பொதுவெளி, கலாச்சார, பண்பாட்டு தளங்களில் இருந்தும் தள்ளி வைக்கப்படுகின்றனர். இது நமது சமூகத்தின் தந்தைமை ஆதிக்கத்தின் வெளிப்பாடே.

ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலையில் உள்ளோருடன் இவர்களை ஒப்பிடுகையில் அரவாணிகளின் நிலை உச்சபட்சமான துயரம் நிரம்பியது. பொதுவெளிச் சமூகத்தின் விவாதங்கள் கூட அதிகபட்சமாய் பெண்ணியம் சார்ந்த பேச்சோடு நின்று விடுகின்றன.

ஒரு சிலத் தருணங்களில் மதமாற்றம் போன்றவை விளிம்பு நிலை மக்களின் நிலையினை மாற்றுகின்றன. ஆனால், அரவாணிகள் பிறப்பால் எந்தவொரு சாதியினை சார்ந்து இருந்தாலும், எந்தவொரு மதத்தினையோ, மொழியினையோ சார்ந்து இருந்தாலும் பொது வெளியில் ஒதுக்குதல் அனைவருக்கும் ஒன்றே. இவ்வாறு தனிமைக்குள்ளாகும் அரவாணிகள் தமது பிறப்பு குடும்பத்திலிருந்து விலகி அரவாணிகள் குடும்பத்தோடு இணைகின்றனர். இது அவர்களின் மன அழைப்பை ஏற்று வாழும் ஒரு நிலை. பால் நிலைத் தேர்வான பெண்மை அவர்களுக்குள் சிறகு விரிக்கின்றன. முழு விடுதலையான உணர்வை இத் தருணத்தில் அரவாணிகள் உணர்கின்றனர்.

மரபு ரீதியான இனப் பெருக்கத்தின் அடிப்படையிலான தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே அரவாணிகள் சமூகம், தமது பாரம்பரியத்தை வரலாற்றோடு இனம் கொண்டு ஒரு சமூகத்தையும், தனித்துவமான குடும்ப அமைப்புகளையும், தனித்துவமான சடங்குகளையும், வாய்மொழி மரபுகளையும் பேணி வருகிறது. பல்வேறு தனித்துவம் கொண்ட வேறுபட்ட கூறுகளையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்ட தேசமாய் விளங்கும் இந்தியா முழுக்க அரவாணிகள் சமூகம் தனக்கென ஒரு பொதுப் பண்பாட்டையும், பொது கலாச்சார சடங்குகளையும், பொது வழக்காற்றையும் கொண்டுள்ளது. பொதுவான நாட்டார் வழக்காற்றிலிருந்து அரவாணிகள் வழக்காறு முற்றிலும் வேறுபட்டது.

அரவாணிகள் சமூகத்தின் பிரதிநிதிகளாக வரலாற்றிலும், பொது இலக்கியத்திலும் உலாவரும் கதாபாத்திரங்கள். இயற்கையாலும், வரலாற்றாலும் வஞ்சிக்கப்பட்ட அரவாணிகளின் தனித்த பண்பாடு, சடங்குகள், வழக்காறுகள் ஆகியவற்றை உங்களோடு தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன்...

ஒரு அரவாணியின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு கூத்தாண்டவர் திருவிழா. அந்த அளவிற்கு அரவாணிகளின் உணர்வோடு பின்னிப் பினைந்த ஒரு சமுதாயச் சடங்குஅது. அரவாணிகள் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரவாணிகள் வரலாற்றில் அழியாப் புகழ் பெற்ற புண்ணியத்தலம்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மடப்புரம் சந்திப்பிலிருந்து 30.கி.மீ தூரத்தில் உள்ளது கூவாகம் கிராமம். இங்குள்ள அரவாணிகளின் தெய்வமாகிய கூத்தாண்டவர் ஆலயத்தில் ஒவ்வோர் சித்திரா பௌர்ணமியன்றும் பல்லாயிரக் கணக்கான அரவாணிகள் கூடுவர்.

பாண்டிச்சேரியிலுள்ள பிள்ளையார் குப்பம், மடுகரை சிதம்பரம் அருகில் கொத்தடை, தேவனாம்பட்டினம் பகுதிகளிலும் கூத்தாண்டவர் ஆலயம் அமைந்திருந்தாலும், விழுப்புரம் கூவாகம் ஆலயத்திற்கு மட்டுமே அரவாணிகள் அதிகம் வருகின்றனர். மகாபாரதப் பெருங்காதையில் அர்ஜானனால் கவரப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட வேடுவப் பெண்ணான நாகக்கன்னியின் மகன் அரவான்.

குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க ‘எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதப்பலி தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்’ என ஆருடம் கூறுகிறது. பாண்டவர் தரப்பில் இவ்வாறு சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்களாகக் காட்டப்படுபவர்கள் மூவர். அர்ஜானன், அவன் மகன் அரவான், ஸ்ரீகிருஷ்ணர்.

அர்ஜானனும், கிருஷ்ணரும் தான் இந்த போருக்கான முகாந்திரம் உடையவர்கள் என்பதால் அரவானைப் பலியாக்க முடிவு செய்து அவனை அணுகுகின்றனர். அரவானும் பலிக்கு சம்மதித்தாலும், தனக்கான இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை துய்த்த பின்பே தான் பலிக்களம் புகுவேன் என உரைக்கிறான். வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை எந்தப் பெண்ணும் அதனை ஏற்கவில்லை. இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து அரவானை மணக்கிறார். ஒரு நாள் இல்லற வாழ்விற்குப்பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக் கோலம் பூணுகிறாள் மோகினி. இந்த சாராம்சத்தின் அடிப்படையில் மோகினியாய் தம்மை உணரும் அரவாணிகள் கூடி வரும் இடமே கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா.

சித்திரா பௌர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே அரவாணிகள் விழுப்புரத்திற்கு வந்துவிடுகின்றனர். அனைத்து விடுதிகளும் அரவாணிகளால் நிரம்பிவிடுகின்றன. எங்கு நோக்கிலும் அரவாணிகள். இந்த நிகழ்வு ஓர் சமயம் சார்ந்த நிகழ்வாக இருப்பினும் இந்தியாவின் பல பாகங்களில் இருந்துவரும் அரவாணிகளை ஒன்றினைக்கும் விழாவாகவே அமைகிறது. அரவாணிகள் தங்கள் தோழிகளை சந்திக்கவும், உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், நலம் விசாரிக்கவும், தங்கள் கலைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் இது அமைவதால், சமுதாயத்தின் கேலிப் பார்வைகள், ஒதுக்குதல் கூவாகத்தில் இல்லை.

‘‘கடந்த 35 வருஷமா கூவாகம் வறேன். ஊர் சனங்க எப்போதும் எங்க கூட அன்பா பழகுறாங்க. முன்பெல்லாம் விழுப்புரத்துல இறங்கி வண்டி கட்டிக்கிட்டு போவோம். கோயில்ல வில்லிபாரதக் கதை படிப்பாங்க. ராத்திரி பூரா கும்மியடிச்சுப் பாடுவோம். தாலியறுத்த அரவாணிகளுக்கு எங்க ஆளுங்க சமச்சி போடுவோம். இப்ப பேப்பர், டி.வி.யிலே இதைக் காட்டுகிறாங்க. வாலிப பசங்க நிறைய வர்றாங்க. அவங்க அரவாணிகளை ரொம்ப சீண்டி கிண்டல் பண்ணுறாங்க. பசங்க தொந்தரவு தாங்கமுடியல. அரசாங்கம் கோயிலுக்கு போறதுக்கு நல்ல ரோடும், வழியில கரண்ட்டும் நாங்க தங்குவதற்கு சத்திரமும் ஏற்பாடு செஞ்சிக் கொடுத்தால் நல்லாயிருக்கும்’’ என்கிறார் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த கீதா என்னும் அரவாணி.

சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக தம்முள் வரித்துக் கொண்டு கோயில் அர்ச்சகர் கையால் தாலி கட்டிக் கொள்கின்றனர் அரவாணிகள். விடியவிடியத் தங்களது கணவனான அரவானை வாழ்த்தி பொங்கல் வைத்து கும்மியடிச்சிட பாட்டமும், ஆட்டமுமாக இரவு கழிகிறது. பொழுது மெல்ல புலரத் துவங்க,அதுவரை ஆனந்தமாய் இருந்த அரவாணிகள் முகத்தில் மெல்ல சோக ரேகைகள் படரத் துவங்குகின்றன.

அரவானின் இரவு களியாட்டம் முற்றுப் பெற்று களப்பலிக்குப் புறப்படுகிறான். நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மரத்தால் ஆன அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக் களமான அமுதகளம் கொண்டு செல்லப்படுகிறான்.வழியெங்கும், சோகத்துடனும், அழுத கண்ணீருடனும் அரவாணிகள்.

மதுர கோட்ட வீதியிலே மன்னர் தானும் போகயில-அட வளரும் நானும் போகயில கோயில் வாசல் தாண்டிப் போகயில - கரும் கூந்தல் அவுந்திட பாத்திங்களா கரும் கூந்தல் அவுந்திட பாத்திங்களா அம்பது லட்சமும் தாலி கட்டி - நல்ல ஒம்பது லட்சமும் தாலி கட்டி வச்சி படைக்காத நம்ப கூத்தாண்டவர் வடக்க போறார் பாருங்கடி

என வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப் படுகின்றது. தன் தாலி அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் பூணுகின்றனர்.

முள் என உணர்ந்தும் முயன்று நடக்கும் அரவாணிகளின் இந்தப் பாங்கு காண்போரைக் கலங்கச் செய்யும். இந்தத் தியாகங்கள் எந்தப் பாதுகாப்புக்கு உரியது?

‘தர்மயுத்தம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட போரின் மதிப்பீடுகள் அதிகாரத்தினைக் கைப்பற்றுபவதற் காகத்தானே. இதற்கு பலி வேடுவ இன அரவான். இன ஒதுக்கலின் அடையாளமாக அரவான் மகாபாரதத்தில் வரையப்பட்டுள்ளான். அரச குல ராஜகுமாரனான அபிமன்யுவுக்குத் தந்த மேலாண்மை அரவானுக்குத் தரப்படாமலே, அவன் வில் வித்தை திறன் நிரூபிக்கப்படாமலே பலியாக்கப்பட்டிருக்கிறான். இது ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியபின் அதற்கு ஆபத்தாக வரக்கூடிய - ஆட்சியில் பங்களிப்பை கோரக்கூடிய - எதிர்க்குரல்களை ஒழிக்கும் போர் நடைமுறைகளாகவே உள்ளது.

மோகினியாய் தம்மை உருகொள்ளும் அரவாணிகள் வெள்ளைப்புடவையில் இந்த அநீதிக்கு சாட்சியாக, அரவானின் மீது திணிக்கப்பட்ட இன ஒதுக்கலுக்கு அடையாளமாக நிற்கின்றனர். மலைவாழ் வேடுவப் பெண்ணின் மகனை மணந்து பழங்குடி இன மருமகள்களாக ஒவ்வோர் கூத்தாண்டவர் திருவிழாவிலும் தம்மை அரவாணிகள் வெளிப்படுத்துவதாலோ என்னவோ, அரவாணிகளும் ஒதுக்குதலுக்குள் ஆட்படுத்தப்படுகின்றனர்.

இந்த வர்ணாஸ்ரம உளவியலை தகர்க்கும் சக்தியாக அரவாணிகள் உருவெடுப்பம் என்பது சமீபத்திய அவர்களின் செயல்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. --- ப்ரியாபாபு.

இதனை சமூகம் பகுப்புப் பக்கத்தில் இருந்து வெட்டி இங்கே ஒட்டியுள்ளேன். இதனை அகற்றிவிடலாம் என்றே தோன்றுகின்றது. --கோபி 16:38, 13 ஜூன் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:சமூகம்&oldid=237904" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சமூகம்" page.