பசேலியோஸ் கிளேமிஸ் பாவா
மோரான் மார் பசேலியோஸ் கிளீமிஸ் (மலையாளம்: മോറന് മോര് ബസേലിയോസ് ക്ലിമ്മിസ് കാതോലിക്കോസ് ബാവ) சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் உயர் தலைமைப் பேராயர் ஆவார். அவரது இயற்பெயர் ஐசக் தோட்டுங்கல் ஆகும்.

இவர் சூன் 15, 1959ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தின் திருவல்லாவில் முக்கூர் என்னும் ஊரில் பிறந்தார். தற்போது உள்ள கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இவர் ஆவார்.[1]
கல்வி தொகு
இவர் 1976-1979 காலகட்டத்தில் திருவல்லா மறைமாவட்ட இளங்குருத்துவக் கல்லூரியில் பயின்றார். 1979-1982 ஆண்டுக் காலத்தில் ஆலுவாவின் மங்கலப்புழாவில் அமைந்துள்ள தூய யோசேப்பு திருத்தந்தைக் கல்விநிறுவனத்தில் மெய்யியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
1983-1986 ஆண்டுகளில் இவர் பூனே திருத்தந்தை குருத்துவக் கல்லூரியில் பயின்று இறையியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
திருப்பணி தொகு
ஐசக் தோட்டுங்கல் 1986, சூன் 11ஆம் நாள் குருவாகத் திருநிலை பெற்றார். 1986-1989 ஆண்டுகளில் அவர் பெங்களூரு தர்மாரம் கல்லூரியில் இறையியல் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் உரோமை நகரில் புனித அக்வீனா தோமையார் திருத்தந்தைப் பல்கலைக் கழகத்தில் இறையியல் பட்டப்படிப்பு பயின்று 1997இல் கிறித்தவ ஒன்றிப்பு இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஆயர் பட்டம் தொகு
உரோமையில் படிப்பை முடித்துத் திரும்பிய ஐசக் தோட்டுங்கல் பத்தேரி மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாகப் பணிபுரிந்தார். ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் குடிபெயர்ந்து வாழ்கின்ற சீரோ-மலபார் கத்தோலிக்க மக்களிடையே ஆன்ம பணிபுரிய திருத்தந்தைப் பார்வையாளராக அவர் 2001, சூன் 21ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் நியமிக்கப்பட்டார்.
2001, ஆகத்து 15ஆம் நாள் அவர் திருவல்லாவின் திருமூலபுரத்தில் ஆயராகத் திருநிலை பெற்று "ஐசக் மார் கிளீமிஸ்" என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார்.
திருவல்லா மறைமாவட்ட ஆயர் தொகு
2003, செப்டம்பர் 11ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மார் கிளீமிசை திருவல்லா மறைமாவட்டத்தின் ஆறாவது ஆயராக நியமனம் செய்தார்.
திருவல்லா உயர் மறைமாவட்டத் தலைமைப் பேராயர் தொகு
2006, சூன் 10ஆம் நாள் மார் கிளீமிஸ் திருவல்லா உயர் மறைமாவட்டத்தின் தலைமைப் பேராயராக உயர்த்தப்பட்டார்.
திருவனந்தபுரத்தில் பட்டம் என்னும் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க நிலையத்தில் 2007, பெப்ருவர் 7-10இல் கூடிய சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் மன்றம், மார் கிளீமிசை சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் உயர் தலைமைப் பேராயராகத் தேர்ந்தெடுத்தது. பெப்ருவரி 9ஆம் நாள் அத்தேர்தல் முடிவை திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அங்கீகரித்தார். அம்முடிவு மறுநாள் திருவனந்தபுரம் புனித மரியா பெருங்கோவிலில் அறிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரம் புனித மரியா பெருங்கோவிலில் மார் கிளீமிஸ் 2007, மார்ச்சு 5ஆம் நாள் உயர் தலைமைப் பேராயராக முடிசூடப்பட்டார். அந்நிகழ்ச்சியில் கர்தினால் தெலெஸ்போர் தோப்போ மற்றும் கர்தினால் மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கர்தினால் பட்டம் அறிவிப்பு தொகு
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மார் பசேலியோஸ் கிளீமிசை 2012 நவம்பர் 24ஆம் நாள் கர்தினால் நிலைக்கு உயர்த்ஹ்டினார்.[2]
கேரளத்தின் ஐந்தாம் கர்தினால் தொகு
சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் முதல் கர்தினாலாக நியமிக்கப்பட்டுள்ள மார் பசேலியோஸ் கிளீமிஸ் கேரளத்திலிருந்து இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கர்தினால்மார்களுள் ஐந்தாமவர் ஆவார்.
அவருக்கு முன் கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டோர்: