பண்ருட்டி இராமச்சந்திரன்

இந்திய அரசியல்வாதி

பண்ருட்டி ச. இராமச்சந்திரன் (Panruti S. Ramachandran, பிறப்பு: 10 நவம்பர் 1937) என்பவர் தமிழ்நாடு அரசியல்வாதி ஆவார். இவர் ஐந்து முறை தமிழக சட்டபேரவை உறுப்பினராகவும், மு. கருணாநிதி , எம்.ஜி.ஆர் அமைச்சரவைகளில் நான்குமுறை அமைச்சராக பணியாற்றியவர்.

பண்ருட்டி இராமச்சந்திரன்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் 6வது எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
பதவியில்
15 மே 2011 – 10 திசம்பர் 2013
தலைவர்விசயகாந்து
முன்னையவர்ஓ. பன்னீர்செல்வம்
பின்னவர்துரைமுருகன்
பொதுப்பணி, மின்சாரம், இரும்பு மற்றும் எஃகுத் துறை அமைச்சர்
பதவியில்
1978–1987
போக்குவரத்துத் துறை அமைச்சர்
பதவியில்
1971–1977
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1967–1989
1991–1996
தொகுதிபண்ருட்டி
பதவியில்
2011- 2016
தொகுதிஆலந்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 நவம்பர் 1937 (1937-11-10) (அகவை 87)
புலியூர், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம் புலியூர் கிராமத்தில், நவம்பர் 10, 1937இல் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றினார்.

அரசியல் வாழ்வு

தொகு

திமுகவில்

தொகு

கா. ந. அண்ணாதுரையின் மீதான ஈர்ப்பால் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து தன் 30வது வயதில் 1967 இல் பண்ருட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். அப்போது மதிப்பீட்டுக் குழு தலைவரான அண்ணாதுரையால் நியமிக்கப்பட்டார். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு 1971 இல் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மு. கருணாநிதியின் தமிழக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

அதிமுகவில்

தொகு

ம. கோ. இராமச்சந்திரன் 1972 இல் அதிமுகவைத் துவக்கியபிறகு 1977 ஆம் ஆண்டு இரா. நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தபோது, இவரும் அதிமுகவில் இணைந்தார். 1979 இல் ஒடிசாவின் முதல்வராக இருந்த பிஜு பட்நாயக் திமுக - அதிமுக என இரு கட்சிகளையும் இணைக்கவிரும்பி பேச்சுவார்த்தை நடத்தி முடித்த நிலையில், மறுநாள் இரு கட்சிகளும் இணைய வாய்ப்பில்லை என ம. கோ. இராமச்சந்திரன் அறிவித்தார். அதற்கு காரணம் பண்ருட்டி இராமச்சந்திரனே என மு. கருணாநிதி குற்றம் சாட்டினார்.[1]

இவர் அதிமுகவில் இணைந்த 1977 முதல் ம. கோ. இராமச்சந்திரன் இறந்த 1987 வரை தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். ம. கோ. இராமச்சந்திரனின் வெளிநாட்டுக்கோ அல்லது தில்லிக்கோ என எங்கு சென்றாலும் அவ்வரின் நிழல்போல அவருடன் சென்று அவரது பணிகளை கவனித்துவந்தார்.

ஈழத் தமிழர் தொடர்பான செயல்பாடுகள்

ஈழத் தமிழ் சிக்கலை உலக அளவில் பேசவைத்ததில் பண்ருட்டி இராமச்சந்திரனுக்கு ஒரு பங்கு உண்டு. இவர் தமிழ்நாடு முதலமைச்சரான ம. கோ. இராமச்சந்திரனினால் 1983 இல் ஐக்கிய நாடுகள் அவைக்கு அனுப்பப்பட்டார் அங்கே 70 நாட்கள் தங்கி இருந்து ஈழத் தமிழர் சிக்கல், மலையகத் தமிழர் சிக்கல் ஆகியவற்றை எடுத்துரைத்தார். இதன் எதிரொலியாக ஐக்கிய நாடுகள் அவை இலங்கையை கண்டித்தது.[2]

அதிமுகவில் இருந்து விலகல்

தொகு

ம. கோ. இராமச்சந்திரனின் இறப்புக்குப் பிறகு ஜெ. ஜெயலலிதாவுக்கு தனி அணியை உருவாக்கியதில் பண்ருட்டி இராமச்சந்திரனின் முக்கியப் பங்கும் இருந்தது. ஆனால் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக ஆன பிறகு அவருடன் முரண்பட்டு நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் வெளியேறிய நால்வர் அணியில் பண்ருட்டி இராமச்சந்திரனும் ஒருவராக இருந்தார்.

பாமகவில் இணைவு

தொகு

அதன் பிறகு டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்த இராமச்சந்திரன் 1991 சட்டமன்றத் தேர்தலில் தனது பண்ருட்டி தொகுதியில் அப்போதைய பாமகவின் தேர்தல் சின்னமான யானை சின்னத்தில் போட்டியிட்டு பாமகவின் முதல் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அப்போது தான் வெற்றி பெற்ற தேர்தல் சின்னமான " யானை "யை நினைவு கூறும் விதமாக தமிழக சட்டமன்றத்திற்கு யானை மீது வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மக்கள் நலவுரிமைக் கழகம்

தொகு

பாமகவில் இருந்து விலகி மக்கள் நல உரிமைக் கழகம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கி, அதற்குப் பொதுச் செயலாளராக இருந்தார். 1997இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அக்கட்சி, தி.மு.க.தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றது.[3]

தேமுதிக கட்சியில் இணைவு

தொகு

2005 ஆண்டில் விசயகாந்து தேமுதிக கட்சியைத் துவக்கியபோது அதில் இணைந்து அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக-தேமுதிக கூட்டணியை உருவாக்குவதில் முன்னின்று செயல்பட்டார். அத்தேர்தலில் ஆலந்தூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று ஏழாவது முறையாக தமிழக சட்டபேரவை உறுப்பினராகப் பொறுப்பேற்றார். எதிர்க் கட்சித் துணைத்தலைவராக பணியாற்றினார். விசையகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2013 திசம்பர் 10 அன்று தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். அவர் தனது விலகல் கடிதத்தினை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபாலிடம் நேரடியாக கொடுத்தார்.[4] பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.

மீண்டும் அதிமுகவில்

தொகு

2014 மார்ச் 20 அன்று ஜெ. ஜெயலலிதாவை சந்தித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டார்.[5][6] பின்னர் 2015 ஆம் ஆண்டு அதிமுகவின் அமைப்புச் செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கபட்டார். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, சசிகலாவை பொதுச் செயலாளராக ஆக்கும் தீர்மானத்துக்கு ஆதரவளித்தார். அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். 2022 இல் ஓ. பன்னீர்செல்வம்- எடப்பாடி க. பழனிசாமி பிளவுக்குப் பிறகு ஓ. பன்னீர் செல்வம் இவருக்கு அரசியல் ஆலோசகர் பதவியை வழங்கினார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி பண்ருட்டி இராமச்சந்திரனை கட்சியில் இருந்து நீக்கினார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "மின்வாரிய பொறியாளர் முதல் அரசியல் ஆலோசகர் வரை: பண்ருட்டி ராமச்சந்திரனின் அரசியல் பயணம்". Hindu Tamil Thisai. Retrieved 2022-09-29.
  2. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் தொடங்கி இன்று "சின்னம்மா" தலைமையில் பண்ருட்டி ராமச்சந்திரன்! 29, திசம்பர், 2016 ஒன்இந்தியா
  3. கி.வைத்தியநாதன், பிரணாப்தா என்கிற மந்திரச்சொல்! தொடர்கட்டுரை எண் 122, தினமணி கதிர், 8.1.2023, பக். 5
  4. "பண்ருட்டி ராமச்சந்திரன் முழுநேர அரசியலில் இருந்து விலகல்". bbc. 10 திசம்பர் 2013. Retrieved 12 திசம்பர் 2013.
  5. "Panruti Ramachandran joins AIADMK". The Hindu. Retrieved 20 பெப்ரவரி 2014.
  6. "சொந்த வீட்டிற்கு வந்து விட்ட உணர்வு: அதிமுகவில் ஐக்கியமான பண்ருட்டி ராமச்சத்திரன் பேட்டி". தினமணி. Retrieved 20 பெப்ரவரி 2014.
  7. அதிமுக அரசியல் ஆலோசகர் பதவி கொடுத்த ஓபிஎஸ்..பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியை விட்டே நீக்கிய இபிஎஸ் 27 செப்டம்பர் 2022 ஒன்இந்தியா