பனியாறு அல்லது பனிப்படலம் (Ice sheet) சிதைந்து கடலினை அடையும்போது அதன் பெரும்பகுதியான நிறை, அடிக்கடி கலைந்து உடைந்து பிரிவுற்று மிதக்கும். இவ்வாறு மிதக்கின்ற பனித்துண்டுகளே பனி மிதவை (Ice Berg) எனப்படும். பனி மிதவைகள் சிறிய அளவு முதல் பல கி.மீ நீளம் வரையில் வடிவத்திலும், அளவிலும் மாறுபடுகின்றன. பனிப்படலங்களாலான தட்டையான அல்லது பலகை போன்ற பனி மிதவை, அண்டார்டிகாவில் 150-300 கி.மீ நீளமுடையதாய், மிதக்கும் தீபகற்பம் போல காட்சி அளிக்கிறது.

பனி மிதவை

அமைப்பு தொகு

பல பனி மிதவைகள் பெரியனவாகக் காட்சியளித்தாலும், நீருக்கு மேல் தெரியும் பகுதி, மூழ்கியுள்ள பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகவும் சிறியதாகும். நீர் மட்டத்திற்கு மேலே தெரிவதைப் போல் ஒன்பது மடங்கு இது மூழ்கியுள்ளது. நீரின் மேல் காணப்படும் ஒவ்வொரு 3 மீ பனிக்கு, கடலின் மேற்பரப்பின்க்கீழ் 25-30 மீ பனிக்கட்டிக் காணப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. பனி மிதவை அலைக்கு மேல் 90 மீ ஓங்கி உயர்ந்து காணப்பட்டால் அதன் அடிப்பகுதி நீருக்கு அடியில் 1 கி.மீ அளவிலானது. இதன் பெருமளவு நீரில் மூழ்கியுள்ளதால் அளவினையும், உருவினையும் அறிய முடிவதில்லை.

பாதிப்புகள் தொகு

 
டைட்டானிக் கப்பல்

கப்பல் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. குறிப்பாக ஆர்டிக் பனி மிதவைகள், கிரீன்லாந்துக்கும் வடஅமெரிக்கத் தரைப்பகுதிக்கும் இடையே தென் புறமாக மிதந்து வட அட்லாண்டிக் பெருங்கடல் வரை காணப்படும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மோசமான நிலையடைந்து, நியூபௌண்ட்லாந்தில் பனி மிதவை நீராக மாறுகிறது. இதன் மீது மோதிப் பல கப்பல்கள் மூழ்கியுள்ளன. குறிப்பாக டைட்டானிக் பெருங்கப்பல் 1912 ஏப்ரல் மாதம் மூழ்கியதால் 1500 பேர் உயிரிழக்க நேரிட்டதாகும்.

நடவடிக்கைகள் தொகு

அனைத்துலக பனி மிதவை ரோந்துப்பணி (International Iceberg Patrols) அமைப்புகள் வட அட்லாண்டிக் கடற்பாதையைக் கவனித்து பனி மிதவையை நெருங்கும்போது எச்சரிக்கையும் அளிக்கும். தற்காலத்தில் நவீன ரேடார்களின் உதவியால் கப்பல்கள் பனி மிதவைகளின் மீது மோதாமல் செல்ல முடியும். வானூர்திகள் சுற்றி வரும் செயற்கைப் புவித் துணைக் கோள்கள் போன்றவை பனி மிதவையின் பாதைகளை தொடர்ந்து கண்காணித்து அவற்றின் அளவையும், நகர்தலையும் பற்றித் தகவல்கள் அளிக்கின்றன.

பனித்தீவு தொகு

பெரிய பலகை அமைப்பிலான பனி மிதவையையே சில நேரங்களில் பனித்தீவு (Ice Island) என்பர். ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் ஆகிய துருவப் பகுதிகளில் காணப்பட்டாலும், ஆர்டிக் பகுதிகளில் நீடித்து காணப்படுகிறது. பனித்தீவுகள் பனி மிதவையின் அமைப்புகளை மட்டுமின்றி காற்று அலை மற்றும் துருவக்கடலின் சுழற்சி பற்றி அறியவும் பயன்படுகின்றன. இவை பெரும்பாலும் மிதந்து செல்லும் ஆய்வுக்கூடமாக பயன்படுகின்றன.

[1][2][3][4]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 14
  2. "Definitions of the word "Iceberg"". Google. Retrieved 2006-12-20.
  3. "Iceberg". Online Etymology Dictionary. Retrieved 2006-03-26.
  4. "Titanic Ship Listing". Chris' Cunard Page. Archived from the original on 15 April 2012. Retrieved 12 April 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி_மிதவை&oldid=3878956" இலிருந்து மீள்விக்கப்பட்டது