பன்னாட்டுப் பள்ளிகள்
பன்னாட்டுப் பள்ளிகள் (international schools) என்பவை சர்வதேச தரம்வாய்ந்த கல்வியளித்தலை நோக்கமாக கோண்டுள்ளன. இப்பள்ளிகளின் கலைத்திட்டம் அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்படும் கலைத்திட்டத்துடன் பொருந்தும் வகையிலும்,"தி இன்டர்நேஷனல் பேக்கலரேட் நிறுவனம்" (The International Baccalaureate Organisation-IBO)வடிவமைத்துள்ள கலைத்திட்டத்துடன் ஒத்துப்போகும் வகையிலும் உள்ளது. இப்பள்ளிகளில் சர்வதேச அளவில் பணிபுரிபவர்களின் குழந்தைகள் விரும்பி படிக்கின்றனர். பன்னாட்டுப் பள்ளிகளில் பயின்று முடிக்கும் மாணவர் வேறெந்த நாட்டிலும் கல்வியைத் தொடரவும்,பணியிலமரவும் இயலும். 19ம் நூற்றாண்டின் மையப்பகுதியில் இவ்வகைப் பள்ளிகள் ஜப்பான், சுவிச்சர்லாந்து, துருக்கி போன்ற நாடுகளில் அறிமுகமாயின. இன்றளவில் பல நாடுகளில் இவ்வகைப் பள்ளிகள் உள்ளன.
பன்னாட்டுப் பள்ளிகளில் உலக தரம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப வகுப்பறைகள்,தரமான ஆய்வகங்கள், உயர் தொழில்நுட்பத் தகவல் தொடர்பு சாதனங்கள், மொழி ஆய்வகங்கள், வளம்நிறைந்த விளையாட்டுத் திடல் போன்ற வளங்கள் நிறைந்திருக்கின்றன. இப்பள்ளிகளில் உள்நாட்டு கலைத்திட்டம் பின்பற்றப்பட்டாலும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகளிலுள்ள கலைத்திட்டத்தின் தாக்கம் மிகுந்து காணப்படுகின்றது. பெரும்பாலான பன்னாட்டுப்பள்ளிகள் தி இன்டர்நேஷனல் பேக்கலரேட்டின் (IBO) கலைதிட்டத்தையே பின்பற்றுகின்றன. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் உளவியல் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல், கலை, வடிவமைப்பியல், உடற்கல்வியியல் மற்றும் மனித நேயவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆசிரியருக்கான மாணவரின் விகிதம் மி்கக்குறைவு என்பதால் மாணவரின் பிரச்சனைகள் எளிதில் கண்டறியப்பட்டு தீர்க்கப்படுகின்றன. இப்பள்ளிகளில் இடைநிலைக்கல்வி மற்றும் பட்டய சான்றிதழுக்கான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. உலகில் தரமான கல்வியை வழங்கும் பள்ளிகளில் பன்னாட்டுப் பள்ளிகள் குறிப்பிடத்தக்கவை.
மேற்கோள்கள்
தொகு- .வே.அறிவன் மணிமுத்து,"கல்விப் புதுமைகள்"-2009
- முனைவர்.கி.நாகராஜன்,"கல்விப் புதுமைகளும் மேலாண்மையும்"-2009
- www.internationalschoolsinindia.com
- www.kis.in
- www.tamilnow.com