கொ.அன்புகுமார்
இருளின் நிசப்தம் கிழிக்கிறது சிட்டுக்குருவிகளின் சப்தம்… யாருக்கும் தெரியாமல் காற்றை புணர்ந்துகொண்டிருக்கிறது பனி… நாசியின் ஓரம் வாட்டி வதைக்கிறது குளிர் … பூக்கள் வெடித்து வாசம் அவிழ்கிறது…. கூடுதுறக்க காத்திருக்கின்றன பறவைகள்.. இரவெல்லாம் ஓலமிட்டு ஓய்ந்து அடங்கியிருகின்றன தெருநாய்கள்… நீலம் போட்ட வானம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிறி பொழுது விடிந்தால், கூட்டம் கூட்டமாய் மொய்க்கிறது சிட்டுப்பட்டாளம்… ஆம், சிட்டுக்குருவிகளின் கீச்சல் சப்தத்தில் தான் பொழுது விடிந்து, பொழுது அடங்குகிறது ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்டப்பள்ளி... மனிதர்கள் வாழும் வீடுகளில் கூடுகட்டி பயமின்றி வாழ்ந்த மனையுறை குருவிகள், காணாமல் போனத்தில் மிகப்பெரிய கலக்கம் இருந்துவரும் நிலையில், சப்தமில்லாமல் ஒரு சிட்டுக்குருவி சரணாலயம் உருவாகிக்கொண்டிருக்கிறது ஓசூரில்… வீட்டுக்கு வீடு சிட்டுக்குருவிகள் கொஞ்சி விளையாடும் அந்த அதிசய கிராமத்திற்குள் நுழைந்துவிட்டாலே மனம் பறக்கத்தொடங்கிவிடுகிறது... காற்றோட்டமான அறை, தாழ்வாரம் என கட்டி வந்த நமது முற்காலத்து வீடுகள், தற்போது நாகரிக மாற்றத்திற்குள் மாட்டிக்கொண்டதால் தானோ என்னவோ, சிட்டுக்குருவிகள் அருகிவிட்டன... கொத்தகொண்டபள்ளியில் நிறைய ஒட்டு வீடுகள் இருப்பதால் சிட்டுகள் வாழ்க்கை நடத்த எதுவாக இருக்கிறது... வீட்டு கூரையில் மட்டுமல்ல வரவேற்பு கூடாரத்திலும் சிட்டுகள் தான் கொட்டமடிக்கின்றன... இரவு நேரங்களில் சிட்டுக்குருவிகளின் கூடாரத்தை டார்ச் லைட் வெளிச்சத்தால் துழாவும்போது, அதன் பேரழகில் இன்னும் லயிக்கமுடிகிறது.. இப்படியான ஒர் உறவு காணாமல் போய்கொண்டிருப்பதை மனம் சற்றும் ஏற்கவில்லை... செல்போன் டவர்களாலும், ஆண்மையை அதிகப்படுத்துவதாக கூறி விற்கப்பட்ட சிட்டுக்குருவி லேகியங்களாலும், எத்தனையோ சிட்டுக்குருவிகளின் இனங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன.. இந்த ஆதங்கம் நம்மை தாளமுடியாத சோகத்தில் தள்ளிவிட்டிருந்தாலும், அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது அங்குள்ள டி.வி.எஸ் கம்பெனி... ஆம், அவர்கள் தான் வீட்டுக்கு வீடு அட்டைப்பெட்டிகள் கொடுத்து, சிட்டுகளுக்கு தானியம் வழங்கியும் இந்த உயர்ந்த சேவையை செய்து வருகிறார்கள்.... கொத்தக் கொண்ட பள்ளியே சிட்டுக் குருவிகளின் வனமாக இருப்பது ஆச்சர்யம்.... உணவுச்சங்கிலியிருந்து குருவி இனத்தை உருவிக்கொள்ள மனம் வரதாவர்கள், முடிந்தால் முயற்சி செய்யலாம்....-கொ.அன்புகுமார்