கம்பன் கொன்ற இராவணன்

கூத்து வடிவம் திறந்த மேடையில் வினயன் என்ற மாணவன் ஆசிரியரிடம் சென்று கல்வி , கலைகளை கற்றுவிட்டு தன் தாயாரிடம் வருதல்

பாடல்கள் கூத்தின் வடிவில் பாடல், – பாடல்கள் நீலநிறத்தால் குறிக்கப்பட்டிருக்கிறது.

வினயன்- வாரேனே வாரேனே வினயனும் நானும் - வந்த மக்களுங்கள் நல்வரவை நயப்புடன் ஏற்று - பலக் காதவழி நடந்து வந்தேன் பெரியோரே கேளீர் - என் தாய் முகத்தை கண்டிடவே ஓடோடி வரேன்.

பெரியோர்களே சிறியோர்களே அன்னையரே தந்தையரே வினயன் எனும் அழுகுத்தமிழ் பெயர் சூடிய நான், வளர்மதி எனும் பெயர்கொண்ட என் பாசமிக்க தாயாரின் வேண்டுதற்படி

எண்கணிதம் இலக்கியம் இலக்கணம் ஆகா பொருண்மியம் நாட்டுடை போர்நிலை நன்னெறியும் நயம்படு வில்வித்தையும் அட வாற்போரும் மல்லர்போல் மற்போரும் கற்றுக்கொண்டேன் நல்லவற்றைப் பெற்றுக்கொண்டேன்.

பெரியோர்களே நான் என் அன்னையின் வாழிடம் நோக்கிச் செல்கின்றேன். வினயன் செல்லல்

தாய் தன்னோடு மகிழ்வாய் இருக்கும் அயலவர்களின் மழலைப் பிள்ளைகளுடன், தான் வணங்கும் இராமனின் வடிவங்களை அலங்காரப்படுத்தி அழுகு செய்து மகிழ்கிறாள்.

தாய்- மத்தளங்கள் இங்கே முழங்கிவர நல்ல பாட்டொலிகள் இங்கே இசைத்துவர அடா மழலைகள் நிறைவாய் சிரித்துவர மகிழ்ச்சிதான் மனமிக மகிழ்ச்சிதான்

அவையோர்களே பெரியோர்களே என் மகனின் வருகைக்காய் காத்திருக்கும் எனக்கு இந்த மழலைகள் தரும் இன்பமோ அவனைக்காணும் ஆவலை மேலும் தூண்டுகிறது.

வினயன்- அதோ எனது தாயார்

வினயன்- தாயவளாம் என்னைப்பெற்றவளாம் தன்னையே தானுருக்கி தந்தவளாம்



தாய்- செல்வமே அன்பே மைந்தனே கண்ணே காந்தளே எந்தன் நேசனே இல்லமேகிட வாடா வாடா செல்வமே தமிழ் செல்வமே

வினயன்- தங்கள் விருப்பப்படி கற்றறிந்து வந்துள்ளேன் தாயே

தாய்- மகனே கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்படா சரி நீ போய் நீராடிவிட்டு வா இன்று என் குல தெய்வம் இராமனை வணங்கிவிட்டு உண்டு பசியாறிப் பேசுவோம்.

வினயன்- தாயே மன்னிக்கவும் யாரந்த இராமன் கடவுளா


தாய்- செல்வமே என்னப்பேசுகிறாய்

கற்றறிந்து வந்தவனா கடும் சொல்லில் சாடுகிறாய் காக்குமந்த கடவுளையே யாரென்று வினவுகிறாய் ஏது கற்றாயோ மகனே தீது சொன்னாயே

வினயன்- தயவுடனே அம்மா கேட்டிடவும் நான் நிந்தையேதும் அம்மா செய்யவில்லை கற்றறிந்தேன் அம்மா சத்தியத்தை அதை காப்பதுவே பெற்றதன் பெரும் பயனாம். ஒரு கவிஞன் தாய், தனயன் இருவரது விவாதத்தையும் கேட்டுவிட்டு மேடைக்கு வருதல்.

கவிஞன்- வந்தனம் வந்தனம் வந்தனமே வந்த சனங்களுக்கு வந்தனமே நிந்தை செய்வதை கண்டதுமே அடா நித்திரைவிட்டு ஓடிவந்தேன்.

தாய்- வருக கவிஞரே வருக மாந்தரைக்காத்த மகானை அன்பின் இருப்பிடத்தை இராமரைகடவுளா என வினவுகிறான் என் மகன்

கவிஞர்- சிறுவனே கேள்

இராமனாக வந்தார் அரக்கன் இராவணனைக்கொன்றார் கண்ணனாக வந்தார் அரக்கன் நரகா சுரனைக்கொன்றார் சிம்மமாக வந்தார் இரணியன் நெஞ்சத்தையே பிளந்தார் எங்கும் இருப்பவராம் அவரே இராமன் என்ற இறையாம்.


வினயன்- சிந்தனை அற்றக்கதையால் சிதையுது தமிழினம்தான் வினைப்பயன் நானறியேன் தாயே பதறுது என் மனமே அரக்கர்கள் என்றும் பொய்யாய் கயவர்கள் என்றும் கோர்த்து அடிமைகள் ஆக்கப்பட்டோம் நாங்கள் இழிநிலையாக்கப்பட்டோம்.


தாய்- மகனே என்ன பிதற்றுகிறாய் நாங்கள் அரக்கர்களா தவறாக கற்றனையொ

வினயன்- தாயே உண்மையைக் கூறுகின்றேன்

கவிஞர்- எதுவுண்மை

வினயன்- தமிழர்தம் வாழ்நிலையே உண்மைக்கு மறாகத்தான் உள்ளது.

தாய்- உனக்குப் பித்துப்பிடித்துவிட்டதா ஏன் உளறுகிறாய்

வினயன்- தாயே சற்று கவனித்துப்பாருங்கள்

வினயன், தமிழர்கள் தம் மொழியை சீரழித்துப்பேசும் தற்கால சிறுவர் சிறுமியர் மக்களின் நிலையைக் காட்டுதல். மக்கள் சிறுவர்கள் ஐரோப்பிய அமரிக்க தாயக நாடுகளில் தம் மொழியை கலப்புக்குள்ளாக்கி இழிவாக்கி உரையாடி, ஆடல் பாடல் மூலம் காட்டுதல்.

கவிஞர்- யாரிவர்கள் வேற்றுக்கிரகத்து மாந்தரோ

தாய்- என்ன மொழிப்பேசுகிறார்கள்


வினயன்- தன்னிலை மறந்தவர்கள் தம்மொழியை மறந்தவர்கள் வாழிடம் பேசியவர் வாழ்வுதனை சுமப்பவர்கள் நாகரீகமாம் தாயே நற்றமிழ் கெடுப்பார் வகையறியாமல் தாயே வண்டமிழ் அழிப்பார்

கவிஞன்- என்னயிது தமிழர்களா அவர்கள் நம்பமுடியவில்லை.

தாய்- தமிழன்னையின் அங்கங்களை குத்திக்கிழித்து குரூரமாகப்பார்ப்பதுப்போல் இருக்கிறது.

வினயன்- பல கோடாரிக் காம்புகள் செய்த சதி. அதில் கம்பனும் செய்தான் வம்பு தமிழினத்துக்கு

கம்பன்- என்ன வம்பு செய்தேனா யார் சொன்னது

நல்ல சொல்லெடுத்து கோர்த்துத் தந்தேன் இராமனின் கதையை பலர் கொண்டாடி மகிழ்கின்றார் குறையென்ன கண்டீர் கவி கம்பனென்று பேரெடுத்த கம்பனும் நானே தமிழ் கோர்த்தெடுத்த அழகுதனை மறந்தது ஏனோ


தாய்- கம்பனின் கைத்தடியும் கவிபாடும் என்று பெயரெடுத்தக் கம்பனா வாருங்கள்

கவிஞர்- ஆகா அன்னைத்தமிழுக்கு அழகுடுத்தி சிறப்புச்செய்த செம்மலே வருக

வினயன்- கவியரசே வருக இராவணனைக்கொன்ற இராம நேசனே வருக

கம்பன்- என்னக் கூறுகின்றாய் உன் வார்த்தையில் வக்கிரம் தெரிகிறது.


வினயன்- வக்கிரத்தைக் கண்டீரோ வக்கிரத்தைக்கண்டீரோ பெருங்கவியே ஐயா பெருங்கவியே தமிழினை அழகாக்கி தமிழனை இழிசெய்தீர் மறந்தீரோ ஐயா மறந்தீரோ

கம்பன்- தமிழை அழகுபடுத்தியவன் நான்

வினயன்- ஆனால் தமிழினத்தை அழுக்காக்விட்டீர்களே

கவிஞர்- வான்மீகியை அப்படியே தமிழாக்கினார் அதுதானே கவியரசே

கம்பன்- ஆமாம் அதுதான் உண்மை

வினயன்- எதுவுண்மை இராமனை கடவுள் என்றும் இராவணனை அரக்கன் என்றும் கூறியதா உண்மை. சுத்தப்பொய்.

அவ்வேளை திருவள்ளுவர் மேடைக்கு வருகிறார்- எல்லோரும் மரியாதையோடு அவரை வரவேற்றல்.

தாய்- ஈரடியால் இதயத்தை தொட்டவரே இனியமொழியில் குறள்தந்த பெருந்தந்தையே வருக

கம்பன்- தமிழின் அழகே தத்துவத்தின் முத்தே தமிழினத்தின் முதலே வருக

வினயன்- தமிழுக்கு உயிர் தந்து எம் நிலை காத்த பெருமானே வருக வருக


வள்ளுவர்- அழகு தமிழ் காத்து தினம் சிறப்புடனே வாழ்கவே செம்மைமிகு அன்னை மொழி குறைவிடுத்து காக்கவே ஒன்றுபட்டு ஓரணியில் நிற்கவேண்டும் என் மக்காள் உங்கள் உயிர் மேலது உண்மைத்தமிழ் தான்மக்கள்

கம்பன்- தெய்வப்புலவே வள்ளுவத்தந்தையே வையம்போற்றும் குறள்தந்த பெரியவரே

வள்ளுவர்- கம்பனே தமிழுக்கு அழகு செய்தாய் இராவணனை அரக்கனாக்கி விட்டாயே மறந்துவிட்டாயோ

தாய்- எனக்குப் புரியவில்லை ஏன் எதற்காக இந்த இழிநிலை வந்தது

கவிஞன்- இராவணன் யார் அரக்கனா இல்லையா

வள்ளுவர்- தமிழர்கள் தம் சுயநலங்களால் சுயத்தை இழக்கின்றனர். வரலாறுகளில் தமிழ்மன்னர்கள், மக்கள் அரக்கர்களாக குரங்குகளாக காட்டப்படுகிறார்கள்

வினயன்- ஆரியரின் மதத்திணிப்பால் நாங்கள் எங்களையே அவமதிக்கிறோம்

கம்பன்- ஆமாம் வான்மீகி எழுதிய காவியத்தில் நான்தான் தவறு செய்தேன் என்னை மன்னியுங்கள். அன்று ஆரியரின் ஆதிக்கத்தில் நான் மயங்கிக் கிடந்ததால் வந்த வினை

குற்றத்தை செய்து விட்டேன் ஐயோ குழும்புதய்யா எந்தன் மனது - நான் திட்டமிட்டு செய்யவில்லை அட மடமையில் மயங்கி விட்டேன் பெரியோரே என்னை மன்னிப்பீரே நான் பெருங்கேடு செய்துவிட்டேன் இராவணனே தமிழ் மன்னன் ஐயா அவன் அரக்கனல்ல இராமனிலும் மேலவனாம்.

கவிஞர்- அப்படியென்றால் இராவணனை அரக்கனாக்கி அடிமைசெய்து கொண்டாடி மகிழ்கிறோமா

வள்ளுவர்- ஆரியர் சதியில் அமிழ்ந்துவிட்டோம் நாங்கள் அரக்கர் குரங்காய் காட்டப்பட்டோம் இராவணன் கொடியோன் என்றோதி தமிழ் இனம் இழிந்தது கண்டிரோ நரகாசுரனயும் அரக்கனென்றார் தீபா வளியெனவே மகிழ்து வென்றார் விடுதலை வேண்டிய வீர்ர்களை இன்று வீழ்த்திய வடிவம் முதல் கொண்டு

தாய்- என் மகனே நீ கற்றது மெய்யடா தமிழுக்கு சிறப்படா

வள்ளுவர்- வரலாறை அறியுங்கள் தமிழை அறியுங்கள்

ஞால ஒளி முதல்வனே பகலவன் பச்சயமும் பசிக்குணவும் தருபவன் நன்றியுடன் நாம் பணிந்தோம் பண்புடன் நாலும் கெட்டு திரிகிறோம் மடமையில்

தாய்- மெய்தான் நாம் நாமாக வாழவில்லை வெற்று மரமாகிவிட்டோம்.

வினயன்- இல்லையம்மா மரம் எவ்வகையிலும் பயன்தரும். ஆனால் நம் இனந்தான் தன்னிலை கெட்டு நிற்கிறது

கம்பன்- உண்மைதான் தாய்மொழியை கேவலப்படுத்தி பேசுகிறார்கள்

வள்ளுவர்- தனித்தியங்கும் தமிழுக்குள் எண்ணற்ற கலப்புகள்

கவிஞர்- அக்க பக்க மொழியெடுத்து அழகு தமிழ் கோர்தெடுத்து செந்தமிழை சிதைக்கிறார்கள் தமிழர்கள் அடா தாய்மொழியின் தரமுணரா கயவர்கள் எத்தனையோ மொழிக்கலப்பு ஏராளமாய் மொழியழிப்பு உற்றவரே செய்வதிங்கே தெரியுதே ஐயோ இனமிருக்க மொழியிழக்க நேருமொ

இளையோர்- இனி நாங்கள் அழகுதமிழை இழிவாக்கமாட்டோம் எம் மொழி தமிழ் நங்கள் கலப்பற்ற தமிழால் பேசுவோம் எழுதுவோம் வளர்வோம் தமிழ் எங்கள் உயிரினும் மேல்

வாழிய வாழிய தமிழ் மொழி வாழிய வாழிய தமிழ் இனம் உயிரினும் மேலது தாய்மொழி உணர்ந்து நாம் பேசுவொம் இனத்திட நல்ல தமிழ் பேசுதல் நாவின்பம் கலப்பறுத்த தூய தமிழ் பேசுவோம்.

நிறைவு நன்றி தியான் குறிப்பு இந்நாடகம் எனது 32 வது நாடகம். யேர்மனியில் கடந்த 15 வருடங்களாக நாடகத்துறையில் தேடலுடன் பயணிக்கும் எனக்கு உங்கள் எண்ணங்களை, இது தொடர்பான உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

தமிழர்கள் தம் நிலை மறந்து தமது வரலாறுகளை மாற்றி தம்மைத்தாமே இழிவுபடுத்தும் ஒரு அவல நிலைக்கு நாமே சாட்சிகள்.

அன்புடன் தியான்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தியான்&oldid=836492" இலிருந்து மீள்விக்கப்பட்டது