​பெண்களும் சமூகமும்.....

பெண்கள் எத்தனைதான் சாதித்து இருந்தாலும் குடும்ப வாழ்வில் அவர்கள் அநேக ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கின்றனர். இதற்கு நம் சமூக அமைப்பும் ஒரு காரணம் பெண் பிள்ளைகள் என்றதும் கள்ளிப்பால் கொடுத்து கொன்றதுதானே அச்சமூகம், தற்போது ஒரு பாடல் கேட்டேன், அன்னையின் வயிற்றில் இருந்து கலையாமல் பிறந்தாயே அதுவே வெற்றி என்பது ?!

ஆனால் அப்படி வெற்றியோடு பிறந்தும் நெல்முனைக் கீறி இறந்த பெண்சிசுக்கள் அதிகம்தானே. மார்ப்புத்தட்டையின் பால்சுமை மாற்றி கள்ளித்தட்டையின் பாலைச் சுவைக்கச் செய்தது கொடூரம் தானே. இதில் பிறப்பு ஒரு வேதனை எனில் வளர்ப்பு அதைவிடவும் வேதனை, என்ன குழந்தை உனக்கு ? நெஞ்சை நிமிர்த்திச் சொல்வான் ஆண், என்று தலைகுனிந்து சொல்வான் பெண் என்று ?! ஆண் என்ற வார்த்தையின் தொனியே அகங்காரமாய் இருக்க, பெண் என்ற வார்த்தையின் வீரியம் குறைந்த இகழ்ச்சியாகவே இருக்கிறது.

அதையும் மீறி எனக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்று ஒரு முதுகெலும்புள்ள மனிதன் கூறும்போதே, பொம்பிளை பிள்ளை பெற்று வைச்சிருக்க, உன் எதிர்காலத்திற்கு என்ன இருக்கு, காலம் போன கடைசியிலே பொம்பளைப் பிள்ளைக்கே எல்லாத்தையும் செய்திட்டு நாம நட்டாத்திலேதான் நிக்கணும், என்று அவனையும் குறைபட்டுக்கொள்ளும் சமூகம்.

அவள் வளருகிறாள், கூடவே அவளின் சிரிப்பு அழுகை வலி இதற்கெல்லாம் கூட எல்லைக்கோடுகளோடே.....! சிறு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போது ஆண்பிள்ளைக்கு அடிபட்டால் அவன் ஆம்பிளைப்பிள்ளை துருதுருன்னு இருக்கிறான் என்று சொல்லுவார்கள். ஆனால் , அதே பெண் எங்கேனும் விழுந்து அடிபட்டு வந்தால், இது என்ன ஆம்பிளைப்பிள்ளை மாதிரி ஆடுகிறாயே ? அடிபட்டு கையைக் காலை உடைச்சிட்டு வந்தா யாரு கல்யாணம் பண்ணிக்குவாங்க. இப்படி அழுகைக்கும், வலிக்குமே இத்தனை பேச்சினில் சிரிப்பிற்கு கேட்கவா வேண்டும். ஊரே கொள்ளை போகிறாமாதிரி அதென்னடி அத்தனை சிரிப்பு, இப்படி வாய்கொள்ளாமல் சிரிச்சா நாளைக்குப் போற இடத்திலே எப்படி பிள்ளையை வளர்த்திருக்காப்பாரு என்று ஏகத்துக்கும் வசவுகள், ஒரே இடத்தில் சிரிப்புக்கும், அழுகைக்கும் சிந்தனைகளுக்கும் தடை போடப்பட்டே பெண் வளர்கிறாள். அதே வீட்டில அடக்குமுறையை பிறர் மீது செலுத்திய ஆண் வளர்வான். தன் இயல்பான ஆசைகளைக்கூட தனக்குள்ளேயே விழுங்கிக்கொள்கிறாள் பெண். இதனைவிடவும் கொடுமை, நாங்கள் ஒரு முறை ஊருக்கு திருவிழா நேரம் சென்றபோது, எங்கள் உறவுப்பெண்ணிற்கு உடல் நலமில்லாமல் போனபோது, அவள் அழுதுகொண்டே தெருவில் நடந்து செல்கிறாள். அருகில் வந்த அவளின் அம்மா வயசுப்பொண்ணு இப்படி ரோட்லே அழுதுகிட்டே போனா பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க என்கிறார். எனக்கு சுருக்கென்று கோபம் தான் வந்தது, ஜீரவேகத்தில் அந்தப் பெண் உடனடி முதலுதவியும் கிடைக்காமல் கஷ்டப்படுகிறாள். தன் வேதனைகளைக் கூட கண்ணீரால் வெளிப்படுத்திட இயலாமல் தடை சொல்வதால் யாருக்கு என்ன லாபம் ?

உனக்கு கருத்து சொல்லும் உரிமையில்லை, உணர்வுகளை வெளிப்படுத்திட உரிமையில்லை, என்று தன்னை நசுக்கியே வளர்க்கின்ற ஒரு பெண்ணின் நிலையை யோசித்துப் பார்க்க வேண்டும். நன்கு படிக்கும் ஒரு பெண்ணை மேற்படிப்பிற்கு அனுப்பிட எத்தனை தடைகள் இருக்கின்றன. அதிகமாய்ப் படிக்கவைத்தால் பெண்கள் கட்டுப்படமாட்டார்கள். சுயமாய் சிந்திக்கத் துவங்கிவிடுவார்கள் இல்லையா ? அதுவும் இத்தனைப் படிக்க வைச்சிட்டா கல்யாணத்துக்கு மாப்பிள்ளைப் பார்க்கும் போது சிக்கல் வரும், அப்படியே சம்மியாகப் படித்த ஆணுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால், ஈகோ கருத்துவேறுபாடு போன்ற சிக்கல்கள் வந்துவிடும் என்று பெண்ணின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இணைத்து, அதில் ஆணுக்கு என்ன பலம் என்று பார்க்கிறார்கள். இவையனைத்துமே நம் எல்லார் வீடுகளிலும் ஒருமுறையேனும் நாம் கேட்கின்ற வார்த்தைகள்தான்.

அளவுகோலைச் சுமக்கும் அலமாரிகளாய் மாறிவிட்ட பெண்களின் உணவிலும் கட்டுப்பாடு, குழந்தையாய், மகளாய், சகோதரியாய், தோழீயாய், காதலியாய், மனைவியாய், தாயாய், என படிப்படியாய் என எல்லா நிலையிலும், பெண் ஆணைச் சார்ந்திருக்கிறாள். என்றே கண்கட்டு வித்தைகளை நடத்திக் காட்டிவிட்டார்கள். ஆனால், இந்த ஒவ்வொரு நிலைக்கும் ஆணிற்கு பெண்ணின் துணை தேவைப்படுகிறது. அவன் எந்தவொரு செயலிற்கும் பெண்ணைத்தான் சார்ந்திருக்கிறான். அடிப்படை இன்பமாகட்டும், தன் ஆண்மை நிரூபிக்கப்பதாகட்டும், கணவன் மனைவிற்குள் சண்டையென்று வைத்துக்கொண்டாலும், அங்கே, ஆண் என்னும் நினைப்பை அவனுக்கு விதைப்பதே பெண்தான் !

தன்னை உணர்த்திக் கொள்வதற்கும் பெண்ணின் துணை அவனிற்கு தேவைப்படுகிறது. இதில் அன்பான பெண், அமைதியான குணமுடைய பெண் வேண்டும் என்று கேட்பதில்லை, சிவப்பான அழகான பெண் இந்த ஒரு விஷயத்தைத்தான் முன்னோடியாக வைத்துக்கொண்டு பெண் பார்க்கிறார்கள். இது ஒப்புதல் ஆனபிறகுதான் பேரம் துவங்குகிறது.

என் உறவினர் ஒருவருக்கு தீவிரமாகப் பெண் பார்த்து வந்தார்கள். 30 வயதைக் கடந்துவிட்டட கருத்த் நிறமுடைய அவர் தனக்கு பார்க்கும் ஒவ்வொரு பெண்களையும் அல்ப காரணங்களைச் சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டே வந்தார். எதிலும் திருப்தியடையாத அவர் தனக்கு வாழ்வில் கிடைத்த அரிய பொக்கிஷமான மனைவியைத் தொலைத்துவிட்டு இப்போது நிற்கிறார். ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு தொழிலிலோ, படிப்பிலோ சாதித்துவிட்டாள் என்றால், அவள் மணமாகிப்போன இடத்தில் சராசரிக்கும் கீழே அடிமுட்டாளாகத்தான் பார்க்கப் படுகிறாள். அந்த வீட்டைப் பொறுத்தவரையில் அவள் ஒரு புதுவரவு, அங்கே அவளுக்கு எந்த உரிமையும் கிடையாது, ஒரு காட்சிப்பொருளாகிப்போகும் அவளின் நிலை பரிதாபம்தான். எத்தனையோ கனவுகளோடு புகுந்தவீட்டில் காலடி எடுத்து வைத்து, கணவன் உறவுகளைத் தன் உறவுகளாக ஏற்க வேண்டும் என்றெல்லாம் எண்ணித்தான் அவள் வருகிறாள். ஆனால் நிலைமை வவ்வாலைப் போல் தலைகீழாகத்தானே இருக்கிறது.

நம் சமூகத்திருமணங்களில் பணமும், நகையும் தான் மதிக்கப்படுகின்றன. அப்படி நிர்பந்தித்த உறவுகளை பெண் எப்படி மனமுவந்து ஏற்க முடியும். 20 வருடங்கள் வளர்த்த பெற்றோரிடம் அவளுக்கு உரிமையோ பாசமோ இருக்கக் கூடாது, ஆனால் அதே அன்பையும் பாசத்தையும் புதிய உறவுகள் மேல் அவள் வைக்கவேண்டும். உண்மையான அன்பு என் குடும்பம் என் கணவன் என்ற எண்ணங்களை வந்த முதல் நாளே மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள். பெண்களுக்கு குடும்ப வாழ்வில் முழுமையா சுதந்திரம் என்றுமே இருப்பதில்லை, அவள் தன் எண்ணங்களையும் சிந்தனைகளையும், கற்பனைகளிலேயே கழித்து விடுகிறார்கள், எத்தனையோ இடர்பாடுகளைத்தாண்டித்தான் பெண் வெளியில் வருகிறாள். அதற்கு எத்தனை மெனக்கெட வேண்டும் தெரியுமா, ஒரு ஆண் வெளியில் கிளம்புகிறான் என்றால், அது விசேஷம் இல்லை, அதே ஒரு பெண் கிளம்புகிறாள் என்று வைத்துக்கொள்வோம், அவள் தன் கணவனுக்கு, வயதான மாமியாருக்கு,படிக்கும் பிள்ளைகளுக்கு என எல்லாவற்றையும் சேகரித்து வைத்துவிட்ட பின்னர்தான் அந்த இரண்டு மணி நேரங்களைக் கூட கடந்து சென்றுவிட முடியும். பல சமாதானங்களை அவள் செய்துவிட்டு வெளிஉலகம், வீடு உறவுகள் என எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்வதும் உண்டு, சில நேரங்களில் சொதப்பலும் உண்டு.

பெண் வளர்கிறாள் என்றால், முதலில் கேலி, இகழ்ச்சி இதிலும் அவள் அடங்கவில்லையென்றால், அவளின் ஒழுக்கத்தை குறைகூறிப் போவது. மெல்ல மெல்ல ஏறிக்கொண்டிருக்கும் அவளின் வெற்றிக்கயிற்றின் நுனி தேடி எங்கே அறுக்கலாம் என்பதுதான் பலரின் எண்ணமாகும். இத்தனையும் கடந்து சாதிக்கும் பெண்களின் வளர்ச்சி பாராட்டத்தக்கதுதான்,


லதாசரவணன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:லதாசரவணன்&oldid=2734379" இலிருந்து மீள்விக்கப்பட்டது