பயனர்:Abdulbasith27/மணல்தொட்டி

“இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது” – எழுத்தாளர் குஷ்வந்த் சிங்.[1] இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. தங்களுடைய பொருளாதாரத்தையும், உடல் உழைப்பையும் இந்திய விடுதலைக்காக முழுமையாக அர்ப்பணித்திருந்தனர் முஸ்லிம்கள்.

முதல் இந்திய சுதந்திர போரில் சிராஜ் உத் தௌலா தொகு

வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்திய மண்ணில் முதலில் நிமிர்ந்து நின்றவர் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா. 1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர் தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் இந்திய சுதந்திரப்போராகும். இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்தார் சிராஜ்-உத்-தௌலா. ஆம், இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது.

தங்களுக்கு எதிராக மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சிராஜுத்தெளலாவின் செல்வாக்கை முறியடிக்க ஆங்கிலேயர் ஒரு திட்டம் தீட்டினர். 22”க்கு 14” அளவு கொண்ட ஓர் இருட்டறையில் 144 ஆங்கிலேயர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக ‘ஹோல்வேல்’ என்ற ஆங்கிலேயர் அவதூறு பரப்பினார். உடனே சென்னையிலிருந்து ‘அட்மிரல் லாட்ஸன்’ மற்றும் ‘சிலாலோ’ இருவரும் கல்கத்தா புறப்பட்டுச் சென்றார்கள். இவர்கள் வெளிப்படையாக சிராஜுத்தெளலாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மறைமுகமாக அவரை வீழ்த்த வேலைகளை செய்யத்துவங்கினர்.

சிராஜுத்தெளலாவின் ஆலோசகர் மீர் ஜஃபரை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கினர். 1757ல் வெள்ளையர் முகாமிட்டிருந்த கல்கத்தா துறைமுகத்தை சிராஜுத்தெளலா தாக்கினார். நான்கு மணி நேரம் கடும் மழையிலும் காற்றிலும் வெடிமருந்துகள் அனைத்தும் செயலிழந்து விட்ட போதிலும் இறுதிவரை போரிட்டார். கி.பி 1757ல் பிளாசி மைதானத்தில் நடந்த யுத்தத்தில் மீர் ஜஃபரின் சதியால் சிராஜுத்தெளலா தோல்வியுற நேர்ந்தது. அதன் பின்னர் மீர் ஜஃபரின் மகன் மீரான் சிராஜுத்தெளலாவை வஞ்சகமாகக் கொன்றார்.

தெற்கின் முதல் போராளிகள் தொகு

தென்னகத்தில் முதன் முதலாக ஆங்கிலேயரை எதிர்த்தவர்களில் ஒருவர் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டப்பொம்மன். இராமநாதபுரத்திற்கு ஜாக்ஸன் துரையைச் சந்திக்க கட்டப்பொம்மன் சென்றபோது அவரோடு இஸ்லாமிய தளபதிகள் பலரும் உடன் சென்றதை பட்டியலிட்டுக் காட்டுகிறது வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல்.

மம்மது தம்பியும் முகம்மது தம்பியும்
மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான்
தர்ம குணவான் இபுராமு சாகிபும்
தம்பி இசுமாலு ராவுத்தனும்…

என்று பேராசிரியர் நா.வானமாமலை பதிப்பித்து 1971-இல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் புகழ்கிறது.[2]

கட்டபொம்மன் படையில் வீரர்களாக ஏராளமான இஸ்லாமியர் இருந்திருக்கின்றனர். அவர்கள் கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையை வாய்பேச முடியாதவர் என்ற பொருளுடைய ‘மூக்காஹ்’ என்னும் உருது வார்த்தையால் அழைத்ததைக் கர்னல் வேல்ஷ் தனது ‘இராணுவ நினைவுகள்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.[3]

இச்செய்திகள் தென்னகத்தின் முதல் போராளிகளுடனும் இணைந்து விடுதலைக்காகத் தியாகம் புரிந்தவர்கள் இஸ்லாமியர் என்பதை வெளிப்படுத்துகின்றன.

ஹைதர் அலி தொகு

மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் ஹைதர் அலி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ்க்கு கப்பம் கட்டிப்பணிய மறுத்து 1766 முதல் 1782 ல் இறக்கும்வரை ஆங்கிலேய படையுடன் வரலாற்றில் முதன்முறையாக ராக்கெட் தொழில் நுட்பத்துடன் போரிட்டார்..! 18ம் நூற்றாண்டின் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் பின்வாங்கினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் இவரைத் தோற்கடித்தனர்.

திப்பு சுல்தான் தொகு

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். 1799 ஆண்டு மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய படைக்கெதிராகக் களமிறங்கி தனது இறுதிநாள் வரை உறுதியுடன் போராடினார் மாவீரன் திப்பு. இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் கடும் அச்சத்தை விதைத்தவர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் மரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினார்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் ஆங்கிலேயருக்கு கொடுத்த கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவ‌ர்க‌ள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.[4]

இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப கட்ட புரட்சிகளுள் தென்னிந்தியக் கிளர்ச்சி [1800-1801] முக்கியத்துவம் பெற்றதாகும். ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறுநில மன்னர்களும், பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையாக இக்கிளர்ச்சி அமைந்தது. மலபார் கேரளவர்மா, மருது பாண்டியர், திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய கனீஷாகான் (Khan-i-Jah-Khan), மராத்தியில் சிமோகா (Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (DhondajiWaug), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுககல் பாளையக்காரர் போன்றோர் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர்.

இக்கூட்டமைப்பைச் சார்ந்த வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷாகான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமை தாங்கி, காவிரிக்கு வடக்கிலுள்ள படைகளை நடத்தும் பொறுப்பு கனீஷாகானிடம் ஒப்படைக்கப் பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவையிலுள்ள பிரிட்டீஷாரின் ராணுவக் கோட்டையைத் தகர்ப்பதாகும். அந்தப் பொறுப்பையும், கோவை-சேலம் பகுதிகளைக் கைப்பற்றும் பொறுப்பையும் கனீஷாகான் ஏற்றிருந்தார். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷாகான் ஈடுபட்டார்.[5] ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம் பிரிட்டீஷாருக்குத் தெரிந்துவிட, இம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இக்கிளர்ச்சியில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்.[6]

அவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் முஸ்லிம் வீரர்களாவர்.[7] இந்த தென்னிந்தியக் கிளர்ச்சியில் மருதுபாண்டியர் படையைத்தலைமை தாங்கி நடத்திச் சென்றவருள் ஒருவர்தான் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட சேக் உசேன். இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று அழைக்கப்பட்ட இவர், சுதந்திரக் கிளர்ச்சிப் படையின் முதல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். இவரைத் திண்டுக்கல் புரட்சிக் கூட்டத்தின் எழுச்சி வீரர், சிறந்த போராளி என்று வரலாற்று அறிஞர் கே.ராஜய்யன் குறிப்பிடுகிறார்.[8]

இந்த சேக்உசேன் தான் மருதுபாண்டியர் வீழ்ச்சியின் போது ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பினாங்கு தீவில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடமாடக் கூட முடியாமல் பட்டினியால் வாடி அங்கேயே காலமானவர். இம்மண்ணின் விடுதலைக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று தியாக வரலாறு படைத்தவர்களாக கனீஷாகான், சேக்உசேன் போன்ற இஸ்லாமிய வீரர்கள் விளங்கியுள்ளனர்.

சிப்பாய் புரட்சி தொகு

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவது 1857 -இல் நடந்த சிப்பாய் கலகம் ஆகும். இதனை சிப்பாய் புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும்..!

ஆங்கிலேயே ஏகாதிபத்தியப் போக்குகளுக்குத் துணை போகிறோமே என்ற அதிருப்தியுடன் பிரிட்டீஷ் ராணுவத்தில் பணியாற்றிய ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு,. பிரிட்டீஷாருக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் உத்வேகத்தைக் கொடுத்ததே ஓர் இஸ்லாமிய நாடு சந்தித்த போர்தான்.

நெப்போலியனையே கடற்போரில் தோற்கடித்த ஆங்கிலப்படை முதன் முதலாக ஆப்கானிஸ்தானுடன் நடந்த போரில்தான் தோல்வியைச் சந்தித்தனர். 50 கோடி ரூபாய் செலவு செய்து, 20 ஆயிரம் போர் வீரர்களை இழந்த ஆங்கிலேயரின் அத்தோல்வி, இந்திய சிப்பாய்களுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. ஆங்கிலேயர் வெல்ல முடியாதவர்கள் அல்ல. அவர்களையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இந்திய சிப்பாய்களுக்குப் பிறந்தது.

ஆங்கிலேயரை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது ஓர் இஸ்லாமிய நாடு என்றால், அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதற்கான சூழலை உருவாக்கியது ஓர் இஸ்லாமிய மார்க்க நெறி ஆகும். 1856-இல் இந்திய ராணுவத்தில் புதிய என்ஃபீல்டு துப்பாக்கியைப் பிரிட்டீஷார் அறிமுகம் செய்தனர். அத்துப்பாக்கியில் அடைக்கப்பட்ட தோட்டாக்கள் எளிதாக வெளியேறுவதற்காக பன்றிக் கொழுப்பும் பசுக்கொழுப்பும் அத்தோட்டாக்களில் தடவப்பட்டது. தோட்டாக்கள் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பின், அத்தோட்டாக்களைப் பொதிந்திருந்த மேலுறைத் தகடுகளைப் பல்லால் கடித்து இழுத்துதான் வெளியில் எறிய வேண்டும். அப்போது அதில் தடவப்பட்டிருந்த பன்றி - பசுக் கொழுப்பு வாயில்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

இஸ்லாமியருக்கு பன்றிக் கொழுப்பு விலக்கப்பட்ட(ஹராம்) உணவு ஆகும். பார்ப்பனர்களும், பிற சைவர்களும் மாமிசம் சாப்பிட மாட்டார்கள். எனவே தங்கள் வாயில் பன்றி - பசுக்கொழுப்பு படுவதை இருசாராரும் வெறுத்தனர். கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் அடைக்கப்பட்ட என்ஃபீல்டு துப்பாக்கிகளை முதன் முதலாக வங்காளத்தில் முகாமிட்டிருந்த 19-வது படைப்பிரிவில் பயன்படுத்தி பரிசோதிக்க ஆங்கில அரசு தீர்மானித்தது. அந்த நேரத்தில் வங்காளம் பராக்பூரில் முகாமிட்டிருந்த 34-வது படைப்பிரிவு புரட்சியை ஆரம்பிக்கத் துடித்துக் கொண்டிருந்தது இப்படைப்பிரிவிலுள்ள இந்திய சிப்பாய்களுக்கு கல்கத்தாவின் அருகில் தங்கியிருந்த அலி நத்ஹிகான் என்ற இஸ்லாமிய ஆட்சியாளர்தான் ஆதரவும் தூண்டுதலும் அளித்து வந்தார்.[9]

பெர்ஹாம்பூர், மீரட் ராணுவ முகாம்களில் இருந்த ஏராளமான இஸ்லாமிய வீரர்கள் பிறசமய வீரர்களுடன் இணைந்து என்ஃபீல்டு துப்பாக்கிகளைத் தொடமாட்டோம் என்று கலகம் செய்தனர். அவ்வாறு எதிர்த்தவர்கள் விலங்கிடப்பட்டு, ராணுவ உடைகள் கிழித்தெறியப் பட்டு மக்கள் முன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். அவமானப்பட்ட குதிரைப்படை வீரர்கள் சிறைகளை உடைத்துக் கைதிகளை விடுவித்துக்கொண்டு வெளியேறினர். அப்போது கர்னல் பின்னஸ் போன்ற அதிகாரிகளையும், ஏராளமான பிரிட்டீஷாரையும் கொலை செய்து, அவர்களது வீட்டுக்கு தீயிட்டனர்.

இந்த நேரத்தில் ராணுவ முகாம்களுக்குள் இருந்த இந்திய வீரர்களிடம் பிரிட்டீஷாருக்கு எதிரான போராட்ட உத்வேகத்தைத் தங்கள் ரகசியப் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம் பக்கீர்கள் ஏற்படுத்தினார்கள். ஆயிரக்கணக்கான பக்கீர்கள் பல இடங்களுக்கும் சென்ற சிப்பாய்கள் மனதில் விடுதலைத்தீயை மூட்டினர். ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து வீரர்களிடம் பிரச்சாரம் செய்தனர்.[10]

மக்கள் மத்தியிலும் பிரச்சாரங்கள் மூலம் இப்பக்கீர்கள் சுதந்திர எழுச்சியை ஊட்டினர். தேசயாத்திரை செய்வதாக கூறிவந்த சன்னியாசிகளும், பக்கிரிகளும், மௌலவிகளும் பண்டிதர்களும் ஒவ்வொரிடத்திலும் ரகசியமாக ஜனங்களுக்கு சுதந்திர யுத்தத்தைப் பற்றி போதித்துச் சென்றனர். அவ்வாறாகப் புரட்சித்தீ எங்கும் பரவுவதற்கான உரைகள் வெகு சுதந்திரமாகக் கைக்கொள்ளப்பட்டன. அந்தப் போதகர்கள் (மௌலவிகள்) ஒவ்வொரு நகரத்திற்கும் கிராமத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகையில், அவர்களுக்குப்பின் ஏராளமான தொண்டர்கள், பிச்சைக்காரர்கள் (பக்கீர்கள்) போல் வேசம் போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாய்ச் சென்று தீவிரப்பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் பிச்சை எடுப்பவர்களாக வீட்டுக்கு வீடு சென்று ஜனங்களின் இருதயத்தில் சுதந்திர உணர்ச்சியையும் தேச பக்தியையும் எழும்படி செய்தார்கள்.[11]

டில்லி சலோ! தொகு

அந்நிய ஆட்சி வீழ்க! பேரரசர் பகதுர்ஷா வாழ்க! - என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ ! என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாளுடனும் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.[12]

இந்திய தேசிய ராணுவத்திடம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ‘டில்லியை மீட்போம்! டில்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ!’ என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார்.[13] நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் ‘டில்லி சலோ!’ என்ற முழக்கத்துடன் டில்லி புறப்பட்டிருக்கின்றனர்.

கோசம் ஒன்றே என்றாலும் நேதாஜியின் கோசத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. நேதாஜியின் கோசம் தேசத்தை மீட்பதற்கான உணர்ச்சியின் வீர வெளிப்பாடாகும். மீரட் சிப்பாய்களின் கோசமோ தேச மீட்புக்காக இந்திய தேசம் பேரரசர் பகதுர்ஷா ஜஃபரின் தலைமையை ஏற்பதற்கான பிரகடனமாக அமைந்தது.

பேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை வீரர்களுடன், டில்லியில் இருந்த காலாட்படையினரும் இணைந்தனர். புரட்சி வெடித்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது. அதில் கைதான, கொல்லப்பட்ட, தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்ஜயங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.

வட இந்தியாவில் அப்புரட்சியின் பாலமாக முஸ்லிம்கள் இருந்ததால், கலகத்தை ஒடுக்குதல் என்ற போர்வையில் முஸ்லிம்களை சகல நிலைகளிலும் இழப்புக்குரியவர்களாக்கினர் ஆங்கிலேயர்கள். முஸ்லிம்களைப் பொருளாதாரத்தில் வீழ்த்தி விட்டால் அவர்களது ஆங்கில எதிர்ப்பு குறையும் என்ற திட்டத்துடன் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வீழ்த்தும் நடவடிக்கையில் பிரிட்டீஷார் இறங்கினர்.

1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர். 1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களை எதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபகரித்தது.[14]

இஸ்லாமியர் நடத்திய அரசுகள், அதன் கஜானாக்கள் அபகரிக்கப்பட்டன. இஸ்லாமிய செல்வந்தார்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்கள் உடைமைகளை இழந்தனர். இன்று தென்னிந்திய முஸ்லிம்களை விட, வட இந்திய முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இதுதான் காரணமாகும். இதில் தப்பிப் பிழைத்த ஒரு சில செல்வந்தர்கள் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்றுவிட்டனர். இஸ்லாமியரின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு இந்திய மண்ணில் அவர்களது வாழ்க்கைத் தரத்தையே மாற்றி அமைத்தது.

மேற்கோள்கள் தொகு

  1. குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975
  2. செ.திவான். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம்.36
  3. செ.திவான். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம்.38
  4. Discovery of India, Jawaharlal Nehru, 6th edn., London, 1956, pp.272-73
  5. K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence. 1800-1803,, PP.110-111.
  6. K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence. 1800-1803, P.125
  7. செ.திவான், இந்திய விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம் 41.
  8. K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence, 1800-1803..,Page.274.
  9. வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.85
  10. வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.63
  11. வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம். 63-64
  12. ஏ.என். முகம்மது யூசுப், இந்திய விடுதலை போராட்ட வீரர்கள், பக்கம்.10
  13. B.L.Grover, S.Grover, A New Look at Modern Indian History, P665
  14. திவான், இந்திய விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள், பக்கம்,57.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Abdulbasith27/மணல்தொட்டி&oldid=3706467" இலிருந்து மீள்விக்கப்பட்டது