21 ஆம் நூற்றாண்டில் பெண்கள் ஏற்க வேண்டிய பாத்திரம். திருமதி செல்லையா யோகரத்தினம்.

	உலகளாவிய முறையில் பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் எப்படியான பண்பாடுடையவர்களாக இருந்தாலும் எந்த விதமான பின்னணியிலிருந்து வந்தவர்களானாலும் அவர்கள் ஒரே மொழியையே பேசுகிறார்கள், அதுதான் தாய்மையுடன் கூடிய பெண்மை, அதுவே அவர்களுடைய பொது மொழி.

ஒரு தாய் தனது முதற் குழந்தையை கையிலே பெற்றுக்கொள்ளும் போது பெறும் உணர்வுக்கு ஈடாக வேறு எந்த உணர்வும் இருக்க முடியாது. இந்த உலகின் அதிசயமான உயிர் எமது கையில் பொறுப்புடனும் நம்பிக்கையுடனும் ஒப்படைக்கப்படும் அந்தக் கணத்திலும்; பார்க்க புரட்சிகரமானதாக வேறு எதுவும் இந்த உலகில் இருக்கமுடியாது. அந்த நிமிடமே நாம் உலகின் மனித உயிர்ச் சங்கிலியுடன் பிரிக்கமுடியாது பிணைக்கப்படுகிறோம், இவ்வுலக மனித வேள்வியின் கேள்விகளான முடிவில்லாத கனவுகளும் ஆசைகளும் எம்மை ஆட்கொள்கின்றன. எனவே இந்தச் சரித்திரத்தின் தொடர்ச்சியாக எம்கையில் உள்ள சமாதானம் பேணும் கடமையை பொறுப்பை உறுதி செய்யாது விடுவோமா? தற்காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் தான் எப்படி இந்த உலகில் வெற்றிகரமாக முன்னேற முடியும், ஓர் ஆணுடன் எப்படி போட்டி போட்டு சமனாக வெற்றிபெற முடியும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பெண்; தலைவர்கள் முன்னேறி வருகிறார்கள். வளரும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். பலர் குடும்பம் வாழ்க்கை என்பதையும் துறந்து வாழ்கிறார்கள் ஆனால் தம் தனிப் பெரும் பண்பாகிய பெண்மையையும் தாய்மையையும் யாரும் துறந்துவிடவில்லை. பிறக்கப்போகும் ஒவ்வொரு பெண்குழந்தையும் இதனை தமக்கு வழிகாட்டியாக எடுக்கப் போகிறது, வழிநடக்கப்போகிறது என்பது உறுதி. எனவே நாங்கள் விட்டுச் செல்லப் போகும் பாரம்பரியத்தில் கவனமாக இருக்க வேண்டும், அதுவே மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதலாவது பெண்பிரதமர், காலச்சூழல் அவரின் முன் கதவைத்தட்டியது, இன்னமும் வீட்டிற்குள் அடைந்து கிடக்க வேண்டாம் என்று புறப்பட்டுவிட்டார். அதே போன்று திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா, திருமதி இந்திரா காந்தி, திருமதி சோனியா காந்தி இவர்களெல்லாம் காலத்தின் தேவை அறிந்து களத்தில் குதித்தவர்கள். நாம் ஒவ்வொருவரும் காலத்தை அறிந்து செயலாற்ற முயலவேண்டும். பெண்களுக்கு சம உரிமை பலவித போராட்டத்தின் பின்பே கிடைத்தது. ஆண்களைப்போல பெண்களுக்கும் வாக்குரிமை எல்லாநாடுகளிலும் ஒரே காலத்தில் பெறப்படவில்லை. இன்னும் பல நாடுகளில் பெறப்படாமல் இருக்கிறது. மயிலே மயிலே இறகு போடு என்றால் மயில் இறகு போடமாட்டாது, போடச் செய்ய வேண்டும். அதே நிலையில் எமது சேவையும் தேவையும் உள்ளது. தற்காலத்தில் உலகில்; மனித சரித்திரத்திலே என்றும் பார்த்திருக்காத ஆபத்தான நிலைகள் பல உள்ளன, எவராவது ஒரு செய்தித் தாளைப் புரட்டினால் உலகின் எப்பாகத்திலாவது ஏதோ ஒருவகையான வன்முறை நிகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். எங்கென்றாலும் ஒருவிதமான குற்றம் போதை வஸ்து, இனப்படுகொலை, கற்பழிப்பு, மதவெறி, கொலை, கொள்ளை, பஞ்சம் பட்டினி போன்றவற்றை பார்க்க முடிகிறது. இந்தக்கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை. எந்த ஒரு அரசும் தம்மால் இக்கேள்விகளுக்குப் பதில் காணமுடியும் என்று சொல்லக்கூடிய நிலையில் இல்லை. உலகில் எப்பாகத்தில் இருப்பவராயினும் ஏதாவது ஒரு சமயத்தைப் போற்றிப் பின்பற்றி வருகிறார்கள். அதனை எப்படி வர்ணனை செய்தாலும் எல்லாவற்றிற்கும் முதல்வன் என்று கருதப்படும் அந்த ஒரு முதல்வனின் பெயரால் எத்தனை வகையான போர்கள் நிகழ்ந்திருக்கின்றன? எத்தனை உயிர்கள் பலியாகி உள்ளன? இவை என்றோ நடந்த நிகழ்வாகக் கொள்ள முடியாது இன்றும் நடைமுறையிலுள்ள முதற்பக்கச் செய்திகள். உலகில் பல செல்வந்த நாடுகள் இருந்தாலும் இன்றும் பல்லாயிரம் உயிர்கள் பசியால் வாடுவதும் உயிர்விடுவதும் நாளாந்த நிகழ்வாக உள்ளது. இதற்கு யாரையும் குறை கூற முடியாது ஆனால் 21ஆம் நூற்றாண்டு முன்னேறி வரும் வேகத்தில் எத்தனை பெண்கள் இந்த முயற்சிக்கு ஆண்களோடு சமமாக முகம் கொடுப்பார்கள் என்று ஓரளவு சிந்திக்க முடியும். எந்த முறையில் எங்கள் இயற்கையான வளங்களை சமாதான முயற்சியாளர்களாகவும் சமாதான தூதுவர்களாகவும் திசையைத் திருப்ப முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும். எந்த அளவிற்கு சமாதானத்தை பேணிக் காப்பாற்றுபவர்களாக பசிப்பிணியை போக்குபவர்களாக உறைவிடம் உருவாக்குபவர்களாக இருக்கமுடியும் என்பதை மனதிற் கொள்ள வேண்டும். எதிரிகளாக பார்ப்பதைத் தவிர்த்து சகோதரங்களாகப் பார்க்கும் நிலையை உருவாக்க முடியுமா என்பது தான் கேள்வி;. எந்த ஒரு பெண்ணாலும் ஓர் எல்லைப் பிரச்சினைக்காக, ஒரு அரசியல் லாபத்திற்காக பல உயிர்களைத் தியாகஞ் செய்ய முன்வர முடியுமா? அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? எமது அன்புக்குரியவற்றை பிரியத்திற்குப் பாத்திரமானவற்றை எம்மால் தியாகஞ் செய்ய முடியுமா? தற்கால சரித்திரம் எங்கள் கையால் எதனை எழுத வேண்டும் என விளைகிறது? நாம் பிரதான பங்கெடுத்து உலக சமாதானத்தைக் கொண்டுவரவேண்டும், இந்த இக்கட்டான காலகட்டத்தில் தீங்குகளுக்கு ஒரு தீர்வு கொண்டுவர வேண்டும். ஒரு பெண்ணாக ஒவ்வொருவரும் இதனைச் சிந்திக்க வேண்டும். ஒவ்வொருத்தருக்கும் பங்கு உண்டு. செயலாற்ற முடியும். இதனைச் சாதிப்பதற்கு பட்டமோ பதவியோ தேவையில்லை, மன உறுதி வேண்டும். தர்ம குணம் வீட்டில் ஆரம்பிக்கிறது என்பார்கள், இதுவே வீட்டில் ஆரம்பிக்கட்டும். பல குடும்பம் ஒரு கிராமம் , பல கிராமம் ஒரு ஊர், பல ஊர் ஒரு நாடு. மக்கள் தொடர்பு சாதனங்களுக்கு இதில் பெரும் பங்கு உண்டு, துணிந்து செயற்பட வேண்டும். நாடி அறிந்து மக்களுக்கு விரும்பியதைக் கொடுத்துக் கொண்டிருப்பதல்ல, கொடுக்க வேண்டியதைக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு தாயும் தந்தையும் எத்துணை அவசியமோ அது போன்றே சமூகத்திற்கும் அவசியமாகிறது. ஓவ்வொரு குடும்பமும் வழிகாட்டியாக இருக்க முடியும், அப்படியான ஒரு புதிய உலகை அமைத்திட முடியும். குடும்பம் சீராக அமைந்தால் நாடு சீராக அமையும். கணவனும் மனைவியும் தோளொடு தோள் நின்று செயலாற்ற வேண்டும். குழுவாக இயங்க முற்படவேண்டும். ஒரு பெண்ணால்தான் குழந்தையைப் பெற முடியும், அம்மாவாக முடியும். எங்கள் குழந்தையைப் பெற்றெடுத்து வளர்ப்பது போன்று எமது கிராமம், எமது சமூகம், எமது நாடு என்பவற்றை இவ் இக்கட்டான கால கட்டத்தில் பேணிக்காப்பது எமக்கு ஒரு கூட்டுப் பொறுப்பு. போதை வஸ்து, குடி, பாதுகாப்பற்ற பாலியல் உறவு, பாலியல் வன்முறை, காரணமற்ற முரட்டுத்தன்மை எம் பிள்ளைகளின் வாழ்க்கையை வெகு கேவலமாக ஆக்கி வருகிறது, அது உலகின் வருங்காலத்தையே கேள்விக்குறி ஆக்குகிறது. நாம் பெண்கள் எங்கள் ஆழுமையிலுள்ள எமது சமூக, சமய, ஆன்மீக, பண்பாட்டுப் பெறுமானங்களை பாவித்து எம்மைக் காப்பாற்ற முன்வர வேண்டும். எங்கள் பிள்ளைகள், குடும்பங்கள் ஒன்றுபட்டு, காயங்கள் ஆற்றப்பட்டு, இன, மத, மொழி, பண்பாட்டு விரோதங்கள் அழிக்கப்பட ஒரு பாதையைக் காணவேண்டும். ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம், எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண் இளப்பில்லை காணென்று கும்மியடி’ என்று புரட்சிக்கவிஞன் பாரதி 20 ஆம் நூற்றாண்டிலேயே சொல்லிவைத்து விட்டான். நாம் அதனைச் செயற்படுத்துவோம். உலகம் இப்போது மிகக் குறுகியதாகி விட்டது, ஆகவே நாம் எங்களுடைய சகோதரத்துவத்தை உலக ஒற்றுமைக்கு ஒரு சமாதான இயக்கமாக நன்கு பயன்படுத்த முடியும் என நம்புகிறேன். ஒவ்வொரு பிள்ளையைப் பெற்ற தாயும் ஒரு அன்பான அமைதியான சந்தோசமான வாழ்வையே விரும்புவார். ‘கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவே லேந்த லினிது.’ குறள் 772

	நாம் இக்கணமே ஒரு தாய் ஒரு பஞ்சத்தில் வாடும் பிள்ளையை பார்க்கக் கூடாது, ஒரு தாய் பிரயோசனமற்ற போரில் தன் பிள்ளையை இழக்கக் கூடாது, ஒரு பிள்ளை தான் கற்க வேண்டிய பருவத்தில் தன் கல்வியை இழக்கக்கூடாது என்பதை உறுதி செய்வோம். எங்களிடம் அந்த வன்மை இருக்கிறது. கும்பகர்ணன் போன்று உறங்கிக் கிடக்கும் எமது ஆற்றலை விழிப்புறச் செய்து உலகின் கண்களைத் திறந்திடச் செய்ய இயன்ற மட்டும் முயலுவோம். வெற்றி நம் கையில். அன்பு அமைதி செல்வம் செறிந்த புதியதோர் உலகினை அமைப்போம், சாதனை படைப்போம். 

மணிமேகலையின் அட்சய பாத்திரமாக இருக்கட்டும், அதுவே நாம் ஏற்க வேண்டிய சிறப்பான பாத்திரம்.

Start a discussion with Ychelliah

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ychelliah&oldid=431369" இலிருந்து மீள்விக்கப்பட்டது